சட்டவிரோத செயலில் ஈடுபட்ட அதிகாரி கைது!!
போலி ஆவணங்கள் மற்றும் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைப் பெற உதவிய குற்றச்சாட்டில், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டு குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இந்திய சுற்றுலா வீசாவைக் காட்டி அதிகாரிகளை ஏமாற்றி ஓமான் நாட்டிற்கு செல்லவிருந்த பெண்ணை, குறித்த அதிகாரி மீட்டு அழைத்துச் சென்றுள்ளார்.
குறித்த பெண் தனது உறவினர் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளிற்கு அறிமுகப்படுத்தி அவரை பயணிக்க அனுமதிக்குமாறு அவர் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பயண ஆவணங்களை அங்கீகரித்த பின்னரும் , அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் இரு நபர்களையும் பின்தொடர்ந்தனர்
குறித்த பெண் இந்தியாவிற்கு செல்வதற்கான அனுமதியைப் பெற்றிருந்த போதிலும், ஓமானுக்கான சுற்றுலா விசா மற்றும் பயணச்சீட்டு வைத்திருந்ததை அடுத்து சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொழிலாளர்களை ஓமானுக்கு வீட்டுப் பணிப்பெண்களாக அனுப்புவதை இலங்கை நிறுத்தியுள்ள நிலையில், சுற்றுலா விசா மூலம் இலங்கைப் பெண்களை ஓமானுக்கு வேலைக்காக சட்டவிரோதமாக அனுப்பும் மோசடியில் அந்த அதிகாரி முக்கியப் பங்காற்றியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குடிவரவு திணைக்கள அதிகாரி மற்றும் சந்தேகத்திற்குரிய பெண்ணை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர், அதிகாரி விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன், குறித்த பெண் ரூ. 7,500 மற்றும் ரூ. 25,000 சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வுப் பிரிவினர் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளைகளை முன்னெடுத்து வருகின்றனர்.