கோவைக்கு வந்து விட்டு சென்ற கேரள வியாபாரிகளிடம் ரூ.4½ கோடி பணம் கொள்ளை!!
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மேலாற்றூர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது ஆசிப் (40). இவரது நண்பர்கள் முகமது ஷாபி (38), மற்றும் இம்மனு(28). நண்பர்கள் 3 பேரும் எலக்ட்ரானிக் பொருட்களை மொத்தமாக வாங்கி சென்று கேரளாவில் சில்லரைக்கு விற்பனை செய்வது, மரம் வியாபாரம் செய்வது உள்பட பல வியாபாரங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நண்பர்கள் 3 பேரும் நேற்று வேலை விஷயமாக கோவைக்கு வந்தனர். பின்னர் இங்கு வியாபாரத்தை முடித்து கொண்டு மீண்டும் இன்று அதிகாலை 3 மணியளவில் கோவையில் இருந்து கேரளாவுக்கு புறப்பட்டனர்.
இவர்களது கார் பாலக்காடு அடுத்த புதுச்சேரி நரகம்பள்ளி பாலம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது காரின் பின்னால் லாரி மற்றும் 3 கார்களும் வந்தன. சில நிமிடங்களில், 3 கார்களும், லாரியும் வியாபாரிகள் சென்ற காரை வழிமறித்தன. இதனால் வியாபாரிகள் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் தவித்தனர். அப்போது 3 கார்களில் இருந்து 15 பேர் கும்பல் ஒன்று இறங்கி வியாபாரிகளின் காரை நோக்கி வேகமாக ஓடி வந்தனர். பின்னர் காரில் இருந்த வியாபாரிகளான முகமது ஆசிப், முகமது ஷாபி (38), மற்றும் இம்மனு(28) ஆகியோரை அந்த கும்பல் சரமாரியாக தாக்கினர்.
மேலும் வியாபாரிகளை அவர்களது காரிலேயே கடத்தி கொண்டு திருச்சூர் பாகத்துக்கு செல்லுமாறு கூறவே அவர்களும் சென்றனர். வழியில் திடீரென அந்த கும்பல் வியாபாரிகளை தாக்கி விட்டு, அவர்கள் வைத்திருந்த ரூ.4½ கோடி பணத்தை கொள்ளையடித்து கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்து வியாபாரிகள் பாலக்காடு கசப்பா போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து 15 பேர் கும்பலை தேடி வருகிறார்கள். கோவையில் இருந்து கேரளாவுக்கு சென்ற வியாபாரிகளிடம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.