அரசுகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மணிப்பூரில் பாதிக்கப்பட்ட இரண்டு பெண்கள் உச்சநீதிமன்றத்தில் மனு!!
மணிப்பூரில் இரண்டு பெண்களுக்கு நடந்த கொடூரம் நாட்டையே அதிர்வலைக்கு உள்ளாக்கியது. இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை மேற்கொள்ள மத்திய அரசு கேட்டுக்கொண்டது. சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
இதற்கிடையே இந்த வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தை கேட்டுக்கொண்டுள்ளது. அதேபோல், பாதிக்கப்பட்ட இரண்டு பெண்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து நடவடிக்கை எடுப்பதுடன் பாரட்சமின்றி, நியாயமான விசாரணை நடைபெற உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர். தங்களது அடையாளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த நிலையில் இன்று மத்திய அரசு மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்துள்ளது.
அப்போது இரண்டு பெண்கள் தாக்கல் செய்துள்ள மனு குறித்து விசாரரிக்கும் எனத் தெரிகிறது. இரண்டு பெண்கள் விவகாரம் தொடர்பாக ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆறு வழக்குகளை சிபிஐ-யும், இரண்டு வழக்குகளை புலனாய்வு முகமையும் விசாரிக்க இருக்கிறது. வைரல் வீடியோ பரப்பப்பட்டபோது, உச்சநீதிமன்றம் தனது வேதனைகளை தெரிவித்தது. மேலும் மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இல்லையெனில் உச்சநீதிமன்றம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரித்திருந்தது.