இடை நிறுத்தப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் விரைவில்!!
ஜப்பானின் அமைச்சரவை அலுவலக இராஜாங்க அமைச்சர் புஜிமாரு சடோஷி (FUJIMARU Satoshi) மற்றும் பிராந்திய மறுமலர்ச்சி மற்றும் கண்காணிப்பு மறுசீரமைப்புக்கான முன்னாள் இராஜாங்க அமைச்சர் யமமோட்டோ கோசோ(YAMAMOTO Koza) ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று (31) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தனர்.
ஜப்பானிய அரசாங்கத்தின் அனுசரணையுடன் இந்நாட்டில் அமுல்படுத்தப்பட்டு தற்போது இடை நிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களை மக்களுக்குப் பயன்தரும் வகையில் மீள ஆரம்பிப்பது தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டது.
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயல்முறை நிறைவடைந்த பின்னர் குறித்த திட்டங்கள் அனைத்தையும் மீண்டும் ஆரம்பிக்க இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்ததுடன், இலங்கையில் உள்ள ஜப்பானிய தூதரக அதிகாரிகளை இணைத்து இது தொடர்பான திட்டங்கள் குறித்து ஆராயவும் முடிவு செய்யப்பட்டது.
இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி (Mizukoshi Hideaki) உள்ளிட்ட தூதுக் குழுவினர்,ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்னாயக்க, பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.