ஆகஸ்ட் 12-ந்தேதிக்கு முன்பாக பாராளுமன்றம் கலைக்கப்படும்: பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு!!
கடந்த 2022ம் வருடம் பாகிஸ்தானின் இம்ரான் கான் அரசாங்கம் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியடைந்தது. இதனையடுத்து அங்கு எதிர்கட்சி தலைவராக இருந்த ஷெபாஸ் ஷெரீஃப் தலைமையில் புது அரசாங்கம் பொறுப்பேற்று கொண்டது. இந்த வருடம் அங்கு பொது தேர்தல் நடக்கவிருக்கிறது. இதற்கிடையே கடந்த மே 9 அன்று, பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் தலைவர் இம்ரான் கான், இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் அல் காதர் அறக்கட்டளை வழக்கில் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டதை அடுத்து, பாகிஸ்தானில் போராட்டங்கள் வெடித்து, அரசு சொத்துக்கள் மற்றும் ராணுவ நிலைகள் தாக்கப்பட்டன.
அங்கு ஒரு ஸ்திரமற்ற அரசியல் சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில், இதனை குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷெரீஃப் கூறியிருப்பதாவது:- தெஹ்ரீக்-இ-இன்சாப் (PTI) கட்சியின் தலைவர் இம்ரான் கான், நாட்டின் தலைமையை கவிழ்க்கும் நோக்கில் செயல்பட்டார்.
அவர் கட்சியினர் நடத்திய வன்முறையால் மே 9, பாகிஸ்தான் வரலாற்றின் ‘கருப்பு தினம்’ என ஆகி விட்டது. கூட்டணி கட்சிகளின் ஆலோசனையுடன் ஆகஸ்ட் 12-ம் தேதிக்கு முன்னர் பாகிஸ்தான் பாராளுமன்றம் கலைக்கப்படும். அடுத்த தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கும். பாராளுமன்ற எதிர்கட்சி தலைவர் மற்றும் சம்பந்தப்பட்டவர்களுடன் ஆலோசித்து காபந்து பிரதமர் குறித்த முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.