;
Athirady Tamil News

கேரளாவில் 1½ ஆண்டுகளுக்கு முன்பு மாயமானார்: மனைவி கொன்றதாக கூறப்பட்ட வாலிபர் உயிருடன் திரும்பினார்!!

0

கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டம் கலைநூர் பகுதியை சேர்ந்தவர் நவ்ஷாத் (வயது 35). இவர் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது தந்தை அஸ்ரப் அலி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் திடீர் திருப்பமாக கடந்த 27-ந்தேதி நவ்ஷாத்தின் மனைவி அப்ஷனாவை போலீசார் கைது செய்தனர்.

அவர் சிலருடன் சேர்ந்து கணவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் தாக்குதலில் நவ்ஷாத் கீழே விழுந்ததாகவும் அதன்பிறகு தாங்கள் அங்கிருந்து சென்றுவிட்டதாகவும் மீண்டும் வந்து பார்த்தபோது நவ்ஷாத் அங்கு இல்லை என்றும் தெரிவித்தார். அதன்பிறகு அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். நவ்ஷாத் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் அவரது உடலை போலீசார் பல்வேறு இடங்களில் தேடியும் பலன் கிடைக்கவில்லை.

இந்நிலையில் இடுக்கி மாவட்டம் தொடுபுழா தொம்மன்குத்து பகுதியில் நவ்ஷாத் போன்று ஒருவர் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அங்கிருப்பது நவ்ஷாத் தான் என்பதும் அவர் கொலை செய்யப்படவில்லை என்ற அதிர்ச்சி தகவலும் போலீசாருக்கு கிடைத்தது. அவரை பிடித்து விசாரணை நடத்தியபோது தாக்குதலில் தான் மயங்கி விழுந்த நிலையில், இறந்து விட்டதாக கருதி தாக்கியவர்கள் சென்றுவிட்டனர். அதன்பிறகு மயக்கம் தெளிந்த நான், அங்கிருந்து தப்பி வந்துவிட்டேன். உயிருக்கு பயந்து கடந்த 1½ ஆண்டுகளாக தலைமறைவாக வாழ்ந்து வந்தேன் என கூறியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து கணவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அப்ஷானா, விடுதலை செய்யப்பட்டார். அவர், தன்னை போலீசார் தாக்கி அவர்கள் சொல்வதை ஒப்புக்கொள்ள வைத்தனர் என குற்றம் சாட்டி உள்ளார். உடல் ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் தான் சித்ரவதை செய்யப்பட்டதாகவும், போலீசார் என்ன கூற விரும்புகிறார்களோ அதனை தன்னை வைத்து சொல்ல வைத்ததாகவும் அப்ஷானா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்-மந்திரி அலுவலகத்தில் புகார் தெரிவிக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.