நாங்கள் கேட்டது இதுவல்ல.. மாநிலங்களவையில் குறுகிய கால விவாதத்தை ஏற்க மறுத்த எதிர்க்கட்சிகள்!!
மணிப்பூர் வன்முறை தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் கொடுத்தன. ஆனால் விவாதத்தை நடத்துவதில் ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே உள்ள முரண்பாடு காரணமாக விவாதம் நடத்துவதில் தொடர்ந்து தாமதம் ஏற்படுகிறது. குறுகிய கால விவாதத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால், மணிப்பூர் விவகாரம் குறித்து மாநிலங்களவையில் விதி எண் 267-ன் கீழ் நீண்ட நேரம் விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் கொடுத்துள்ளன. இதனை ஏற்றுக்கொள்ளாத அரசு, விதி எண் 176-ன் கீழ் மட்டுமே குறுகியகாலம் விவாதம் நடத்த முடியும் என கூறி வருகிறது.
விதி எண் 176-ன் கீழ் 2.30 மணி நேரம் வரை மட்டுமே விவாதம் நடைபெறும். ஆனால் விதி எண் 267-ன் கீழ், நடைபெறும் விவாதத்திற்கு கால நிர்ணயம் எதுவும் கிடையாது என்பதால் மத்திய அரசு இதனை ஏற்க முன்வரவில்லை. இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு மத்தியில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய பாஜக எம்பியும், மாநிலங்களவை கட்சி தலைவருமான பியூஷ் கோயல், மணிப்பூர் விவகாரம் குறித்து பிற்பகல் 2 மணிக்கு விவாதம் நடத்த வலியுறுத்தினார்.
ஆனால் விதி எண் 267ன் கீழ் விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. பிற்பகல் 2 மணிக்கு விவாதத்தை தொடங்க அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர் தயாரானார். விதி எண் 267-ன் கீழ் கொடுக்கப்பட்ட நோட்டீஸ்களை ஏற்க மறுத்தார். விதி எண் 176-ன் கீழ் விவாதிப்பதற்கான மத்திய அரசின் நோட்டீசை ஏற்றார். அதன்படி குறுகிய கால விவாதத்திற்கு அழைப்பு விடுத்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. விதி எண் 267ன் கீழ் விவாதிக்க வலியுறுத்தி முழக்கமிட்டனர். இதனால் அமைதியற்ற நிலை உருவானது.
எனவே, அவை 2.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின்னரும் அமளி நீடித்ததால் அவை நடவடிக்கைகள் 3.30 வரை ஒத்திவைக்கப்பட்டன. 3.30 மணிக்கு அவை கூடியபோதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கங்கள் எழுப்பி விவாதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அவையை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைப்பதாக அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர் அறிவித்தார்.