2 மணிக்கு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள விரும்புகிறோம், ஆனால்… பியூஷ் கோயல் விமர்சனம்!!
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மக்களவையில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இந்த தீர்மானத்தை சபாநாயகர் ஏற்றுக்கொண்டுள்ளார். ஆனால், இதுவரை விவாதத்திற்கான தேதி அறிவிக்கப்படவில்லை. நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடைபெற்ற பின்னர்தான் மற்ற அலுவல் பணிகள் தொடர வேண்டும்.
நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தபின் மசோதாக்கள் நிறைவேற்றப்படக் கூடாது என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதனால் பாராளுமன்றத்தின் இரு அவைகளும் முடக்கப்பட்டு வரும் நிலை தொடர்ந்த வண்ணம் உள்ளது. இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று பாராளுமன்றம் கூடியது. மணிப்பூர் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில மத்திய மந்திரி பியூஷ் கோயல் பேசுகையில் ”பாராளுமன்றத்தில் நாங்கள் இன்று மதியம் 2 மணிக்கு மணிப்பூர் விவகாரத்தை விவாவதத்திற்கு எடுக்க விரும்புகிறோம். எதிர்க்கட்சிகள் உறுப்பினர்களுக்கான சுதந்திரத்தை தவறாக பயன்படுத்த முயற்சிக்கிறார்கள். அரசு மணிப்பூர் குறித்து விவாதிக்க தயாராக இருக்கிறது. ஆனால், எதிர்க்கட்சிகள் முக்கியமான 9 நாட்களை வீணடித்துவிட்டது” என்றார்.