;
Athirady Tamil News

பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சிறுமி: குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்கும் கேரள மந்திரி உறுதி!!

0

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா பகுதியில், பெற்றோருடன் வசித்த பீகார் மாநிலத்தை சேர்ந்த 5 வயது சிறுமி திடீரென மாயமானாள். தொடர்ந்து நடைபெற்ற போலீசாரின் விசாரணையில், அவள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அந்த பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் சாக்கு மூட்டையில் கட்டி வீசப்பட்டிருந்த சிறுமி உடலை போலீசார் மீட்டனர். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக அதே பகுதியில் வசித்த அஸ்பாக் ஆலம் (வயது 23) என்பவன் கைது செய்யப்பட்டான். இவனும் பீகார் மாநிலத்தை சேர்ந்தவன் என்பதும் வேலைக்காக கேரளாவில் இருப்பதும் தெரியவந்தது. களமசேரியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பிறகு சிறுமியின் உடல், அவள் படித்த பள்ளிக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு ஆசிரிய-ஆசிரியைகள், மாணவ-மாணவிகள் உள்பட ஏராளமானோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். அப்போது சிறுமியின் தாயார் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடன டியாக அவர் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

தொடர்ந்து சிறுமியின் உடல் ஆலுவா கீழ்மடுவில் உள்ள மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. அப்போது சிறுமியின் தோழி ஒருவர், தகனப்பெட்டியின் மீது கரடிப் பொம்மையை வைத்து கதறினார். இது அங்கிருந்தவர்களை மேலும் சோகத்திற்கு ஆளாக்கியது. சிறுமியின் உடல் தகனத்தில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர். இந்நிலையில் கேரள மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ், சிறுமியின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அப்போது குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க வேண்டும் என்று சிறுமியின் பெற்றோர் கூறினர். இதுகு றித்து மந்திரி வீணா ஜார்ஜ் கூறுகையில், நீதிக்கான அவர்களது போராட்டத்தில் அரசு துணை நிற்கும் என்றார். அவர்கள் என்னிடம் குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க வேண்டும் என கூறினர். அதனை நான் உறுதி செய்வேன் என்றும் அவர் கூறினார். இதற்கிடையில் கைது செய்யப்பட்ட அஸ்பாக் ஆலத்திடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதல் கட்ட விசாரணையில் அவனுக்கு திருட்டு வழக்குகளில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் அஸ்பாக் ஆலம் மீது வேறு ஏதும் வழக்குகள் உள்ளனவா? அவனது பின்னணி என்ன என்பது பற்றி அறிய, ஆலுவா போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு பீகார் செல்ல உள்ளது. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 14 நாள் காவலில் ஆலுவா துணை சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் அஸ்பாக் ஆலத்துக்கு வேறு யாருடனும் தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.