மாணவியின் வாட்டர் பாட்டிலில் சிறுநீரை நிரப்பிய மாணவர்கள்.. ராஜஸ்தானில் வெடித்த போராட்டம்!!
ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் சிலர் செய்த கேவலமான செயல் பெரும் போராட்டத்திற்கு வழிவகுத்தது. மாணவர்கள் சிலர் கடந்த வெள்ளிக்கிழமையன்று வேறு சமூகத்தைச் சேர்ந்த ஒரு மாணவியின் வாட்டர் பாட்டிலில் தண்ணீருடன் சிறுநீரை கலந்து வைத்துள்ளனர். அத்துடன் ஒரு காதல் கடிதத்தையும் மாணவியின் பையில் போட்டுள்ளனர். வகுப்பறைக்கு திரும்பிய மாணவி, வாட்டர் பட்டிலை திறந்து குடிக்க முயன்றபோது துர்நாற்றம் வீசியதை கவனித்தார்.
அத்துடன் மாணவர்கள் சிலர் சிறுநீரை நிரப்பியதும் தெரியவந்தது. இதுபற்றி பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் கண்டுகொள்ளவில்லை. இன்று பள்ளி மீண்டும் திறந்ததும் தாசில்தார் மற்றும் அப்பகுதியில் உள்ள லுகாரியா காவல் நிலையத்தில் தெரிவித்தும் தீவிரமான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இதனால் மாணவியின் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கொதித்தெழுந்தனர்.
குற்றம் செய்த மாணவர்களின் ஊருக்குள் புகுந்து கற்களை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். தடுக்க சென்ற போலீசார் மீதும் கற்களை வீசி உள்ளனர். இதனால் அங்கு பதற்றம் உருவானது. போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்துள்ளனர். இந்த வன்முறை போராட்டம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். அதேசமயம், பாதிக்கப்பட்ட மாணவி தரப்பில் காவல்நிலையத்தில் முறைப்படி புகார் எதுவும் கொடுக்கப்படவில்லை.