டெல்லி அவசர சட்ட மசோதா.. மத்திய அரசுக்கு பிஜூ ஜனதா தளம் ஆதரவு: கெஜ்ரிவாலுக்கு பின்னடைவு!!
டெல்லியில் உள்ள அதிகாரிகளின் பதவிக்காலம், சம்பளம், மற்றும் இடமாற்றம் அல்லது பதவி உயர்வு தொடர்பான விஷயங்களில் விதிகளை உருவாக்க மத்திய அரசுக்கு அதிக அதிகாரம் உள்ளது என நிலைநாட்ட ஒரு சட்டம் கொண்டு வர மத்திய அரசாங்கம் முயற்சிக்கிறது. அதன்படி டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. இச்சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் அதிகாரிகள் மீதான எந்த நடவடிக்கை அல்லது விசாரணை குறித்தும் முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசின் வசம் இருக்கும். ஆனால், இத்தகைய ஒரு சட்டம் வருவதை புதுடெல்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சி தீவிரமாக எதிர்த்தது.
இச்சட்டம் கொண்டு வர வழி செய்யும் வகையில் இதற்கான மசோதாவை பாராளுமன்றத்தில் தோற்கடிக்க பல கட்சிகளின் ஆதரவை அக்கட்சி நாடி வந்தது. எதிர்பாராத விதமாக இந்த போராட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி (AAP) இன்று பெரும் பின்னடைவை சந்தித்தது. அவசர சட்டத்திற்கு மாற்றாக உருவாக்கப்பட்ட மசோதா (டெல்லி சேவைகள் மசோதா) இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் இந்த மசோதாவிற்கு ஆதரவளித்துள்ளது. இக்கட்சி மத்திய அரசுக்கு ஆதரவளிப்பதால், மசோதா பாராளுமன்ற மாநிலங்களவையில் மிகச் சுலபமாக நிறைவேறும். மாநிலங்களவையின் முழு பலம் 245. ஆனால் 7 இடங்கள் காலியாக உள்ளன. தற்போதுள்ள 238 உறுப்பினர்களும் அன்றைய தினம் வாக்களித்தால், சபையில் பாதி பெரும்பான்மை பெற 120 ஓட்டு தேவைப்படும். பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மாநிலங்களவையில் தனிப்பெரும்பான்மை இல்லை.
இந்நிலையில், அங்கு 9 உறுப்பினர்களை கொண்ட ஒடிசாவின் ஆளும் கட்சியின் இந்த ஆதரவின் மூலம் இந்த மசோதா நிறைவேறி விடும். மாநிலங்களவையில் 9 உறுப்பினர்களையும், மக்களவையில் 22 உறுப்பினர்களையும் கொண்ட ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி, முக்கியமான இந்த மசோதாவில் அரசுக்கு ஆதரவளிப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ளது. பா.ஜ.க. மற்றும் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில், கூட்டணி கட்சிகளுக்கு 103 உறுப்பினர்கள் உள்ளனர். தவிர 5 நியமன உறுப்பினர்கள் மற்றும் 1 சுயேட்சை உறுப்பினரின் ஆதரவிலும் ஆளும் பா.ஜ.க. நம்பிக்கை வைத்திருக்கிறது.
பிஜூ ஜனதா தளம் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆதரவுடன், பா.ஜ.க. தலைமையிலான அரசுக்கு 127 உறுப்பினர்கள் உள்ளனர். மாநிலங்களவையில் தலா ஒரு உறுப்பினரை கொண்ட சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி மற்றும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவையும் மசோதாவை ஆதரிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. எதிர்க்கட்சி குழுவில் உள்ள 26 கட்சிகளில், குறைந்தபட்சம் 18 கட்சிகள் மாநிலங்களவையில் முன்னிலையில் உள்ளன. அவை மொத்தமாக 101 உறுப்பினர்களை கொண்டுள்ளன.
26 கட்சிகளை மட்டுமே கொண்ட எதிர்க்கட்சி கூட்டணியான I.N.D.I.A.வைச் சேர்ந்த 109 உறுப்பினர்கள் மற்றும் கபில் சிபல் போன்ற சில சுயேட்சை உறுப்பினர்கள் இந்த மசோதாவுக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தவிர, பாரத் ராஷ்டிர சமிதி (முன்னாள் தெலுங்கானா ராஷ்டிர சமிதி) தனது 7 மாநிலங்களவை உறுப்பினர்களிடமும் மசோதாவுக்கு எதிராக வாக்களிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. இதுபோன்ற சூழ்நிலை நிலவுவதால் பா.ஜ.க.விற்கு மசோதா நிறைவேற்றுதல் சுலபமாக அமையும் என அரசியல் வல்லுனர்கள் கணிக்கின்றனர். பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் பிஜூ ஜனதா தளம் எதிர்க்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.