லவ் பாமிங்: வேலை தேடுவோருக்கு வலை விரிக்கும் நிறுவனங்கள் – என்ன நடக்கிறது?!!
லவ் பாமிங் என்பது பெரும்பாலும் இது ‘டேட்டிங்’ தொடர்பாகச் சொல்லப்படும் வார்த்தை. யாரேனும் ஒருவர் இன்னொருவரை அளவுக்கு அதிகமாகப் புகழ்ந்து, தாம் செய்யும் உபகாரங்களை அவரை ஏற்றுக்கொள்ளச் செய்தல்.
ஆனால் இப்போதெல்லாம் ‘லவ் பாமிங்’ செயல்பாடுகளை இளைஞர் ஒருவர் காதல் உறவுகளில் மட்டுமல்ல, வேலை செய்யும் இடங்களில் கூட எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
பல நிறுவனங்கள் தங்கள் காலிப் பணியிடங்களுக்கு ஆட்களைத் தேடும் போது இப்படித்தான் நடந்து கொள்கின்றன.
காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப ஆட்களைத்தேடும் போது, விண்ணப்பதாரர்களிடம் அப்பதவியின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் பற்றிய தகவல்களை வழங்குவதற்குப் பதிலாக, அவர்களின் அனுபவத்தைப் பாராட்டுவதற்கும், பல்வேறு வாக்குறுதிகளால் அவர்களைக் கவர்வதற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன நிறுவனங்கள்.
பெங்களூருவில் உள்ள பிசினஸ் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் மேலாளராக இருக்கும் ரோஹித் பராசர், தனது முந்தைய வேலையில் தனக்கு இப்படித்தான் நடந்தது என்கிறார். வதோதராவில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அவர், தனது சம்பளத்தில் முன்னேற்றம் ஏற்படாததால் மற்றொரு வேலைக்குச் செல்ல விரும்பினார்.
அதற்காக, குருகிராமில் உள்ள ஒரு நிறுவனத்தில் நேர்காணலுக்குச் சென்று, அதில் தேர்வானார்.
இதற்கிடையில், அவரது முந்தைய நிறுவனத்தில் ரோஹித்துக்குச் சம்பள உயர்வு வழங்கப்பட்டது. ஆனால், குருகிராம் நிறுவனத்தின் மனிதவளத் துறை அதிகாரிகள் அவரை பல நாட்களுக்குத் தொலைபேசியில் அழைத்து, தங்கள் நிறுவனத்தில் வேலையை ஏற்றுக்கொள்ளும்படி வற்புறுத்தினர்.
ரோஹித் கூறும்போது, “குருகிராம் நிறுவனம் தாங்கள் நல்ல சம்பளம் தருவது மட்டுமின்றி பல வசதிகளையும் தருவதாக என்னிடம் பலமுறை கூறினர். அங்கு பணிச்சூழல் நன்றாக இருக்கும் என்றும், அவர்கள் ஊழியர்களை நன்றாகக் கவனித்துக்கொள்வார்கள் என்றும் கூறினர். எனது சுயவிவரத்தின் படி எனக்கு வேலை வழங்கப்படும் என்றும் எனது செயல்திறன் அடிப்படையில் ஊதிய அதிகரிப்புகள் இருக்கும் என்றும் கூறினர்,” என்றார்.
நீண்ட விவாதத்திற்குப் பிறகு, ரோஹித் இறுதியாக அந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டு வதோதராவை விட்டு குருகிராமுக்கு சென்றார்.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள தொழில் பயிற்சியாளரான சமோரன் சலீம், காலியிடங்களுக்குப் பொருந்தக்கூடிய தகுதி வாய்ந்த பணியாளர்கள் வேலைவாய்ப்புச் சந்தையில் கிடைக்காத போது நிறுவனங்கள் இதுபோன்ற நடத்தைகளை மேற்கொள்வதாகக் கூறினார்.
“இத்தகைய சூழ்நிலையில் வேலைக்கு விண்ணப்பித்தவர்களின் கை ஓங்கியிருக்கிறது. அதே சமயம், நிறுவனங்கள் சிறந்த திறமைசாலிகளைக் கண்டறியப் போட்டியிடுகின்றன. இத்தகையச் சூழ்நிலையில், பணியாளர்களைத் தேர்ந்தெடுபவர்கள் தங்களுடைய நிறுவனத்தின் தேர்வுக்கு அதிகபட்சப் பணியாளர்களை வழங்க முயற்சிக்கின்றனர். ஆனால், போட்டியாளர்கள் குறைவாக இருக்கும்போது, அவர்களைக் கவர பல போராட்டங்கள் நடக்கின்றன,” என்கிறார், சமோரன் சலீம்.
ஒரு நிறுவனத்துக்காக நேர்முகத் தேர்வுகளை மற்றொரு நிறுவனம் நடத்தினால், அதைச் சார்ந்தவர்கள் தங்கள் சொந்த நலனுக்காக மிகைப்படுத்திப் பேசலாம்
சில நேரங்களில் நிறுவனங்கள், நேர்முகத்தேர்வு நடத்துபவர்களிடம், தங்கள் வலுவான மற்றும் நேர்மறையான பக்கத்தை மட்டும் காட்ட அழுத்தம் கொடுக்கின்றன.
தொழில் பயிற்சியாளர் சமோர்ன் சலீம் கூறுகையில், இது ஒரு புதிய காதல் ஜோடி, ஆரம்பகாலத்தில் டேட்டிங் போவது போன்றது, என்கிறார்.
நேர்முகத்தேர்வு நடத்துபவர்களிடம், விண்ணப்பதாரர்களிடம் நிறுவனத்தின் குறைபாடுகள் அல்லது பலவீனங்களைக் காட்டிலும் அதன் சிறந்த பக்கத்தை மட்டும் காட்ட விரும்புகிறார்கள்.
உலகளாவிய ஆட்சேர்ப்பு நிறுவனமான Cielo-வின் இங்கிலாந்து நிர்வாக இயக்குனர் சாலி ஹன்டர், ஆட்சேர்ப்புக்காக நேர்முகத்தேர்வு நடத்தும் பலர் தாம் ‘லவ் பாமிங்’ செயல்பாட்டில் ஈடுபடுவதை அறியாமலே அதைச் செய்கின்றனர் என்கிறார்.
இதற்காக அவர்களை நாம் குற்றம் சொல்ல முடியாது என்கிறார் அவர்.
“நேர்முகத் தேர்வு நடத்துபவர்கள் நேர்மறையான எண்ணம் கொண்டவர்கள். அவர்கள் விற்பனைக் கலையில் திறமையானவர்கள். அத்தகைய சூழ்நிலையில், அவர்களது நடத்தை நல்லெண்ணத்தால் உந்தப்படுகிறது. விண்ணப்பதாரர்களுக்கு ஒரு நல்ல வேலை கிடைத்து அதில் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்,” என்கிறார் அவர்.
ஆனால் சில நேரங்களில் ‘லவ் பாமிங்’ போன்ற நடத்தைக்குப் பின்னால் வேறு காரணங்கள் இருக்கலாம் என்று எச்சரிக்கிறார் சாலி.
ஒரு நிறுவனத்துக்காக நேர்முகத் தேர்வுகளை மற்றொரு நிறுவனம் நடத்தினால், அதைச் சார்ந்தவர்கள் தங்கள் சொந்த நலனுக்காக மிகைப்படுத்திப் பேசலாம்.
சாலி ஹன்டர் மேலும் கூறுகிறார், “ஆட்சேர்ப்புத் தேர்வு நடத்துபவர்கள் குறைவான ஊதியம் பெற்று, ஆட்சேர்ப்பு மூலம் பெறும் கமிஷனை மட்டும் பெரிதும் சார்ந்து இருந்தால், அவர்கள் ஒரு காலி பதவியை நிரப்ப, பல வாய்ப்புகளை உருவாக்க முயற்சிப்பார்கள். இதற்காக அவர்கள் விண்ணப்பித்தவர்களிடம் ‘லவ் பாமிங்’ போன்ற நடத்தைகளில் ஈடுபடலாம்,” என்கிறார்.
நிறுவனங்களின் நோக்கங்கள் எதுவாக இருந்தாலும், பல நேரங்களில் ஊழியர்களும் நஷ்டத்தைச் சுமக்க வேண்டியிருக்கும்
பொதுவாக இவை அனைத்தும் தீங்கிழைக்கும் நோக்கத்துடன் செய்யப்படுவதில்லை, ஆனால் நிறுவனங்களின் நோக்கங்கள் எதுவாக இருந்தாலும், பல நேரங்களில் ஊழியர்களும் நஷ்டத்தைச் சுமக்க வேண்டியிருக்கும்.
ஒரு விண்ணப்பதாரர் அழுத்தத்தின் கீழ் வந்து தனக்குப் பொருந்தாத வேலையைச் செய்யலாம்.
ரோஹித் பராசருக்கும் இதேதான் நடந்தது. நல்ல எதிர்காலம் இருக்கும் என்ற நம்பிக்கையில், குருகிராமுக்கு வந்து புதிய நிறுவனத்தில் சேர்ந்தார், ஆனால் நிதர்சனம் மிகவும் வித்தியாசமானது என்று தெரிய வந்தது.
அவர் சொல்கிறார், “ஜூனியர் உறுப்பினர்கள் தவறு செய்யும் போது மூத்தவர்கள் கத்துவது நடக்கும். கார்ப்பரேட் உலகில் எல்லோரும் அவரவர் பெயரால்தான் அழைக்கப்படுவர். அது தான் வழக்கம். ஆனால் எங்கள் மேலாளர் தனது பெயரோடு ‘சார்’ சேர்த்து அழைக்காததால் அவர் கோபமடைந்ததை நான் கவனித்தேன். குழுவில் ஏதாவது பிரச்னை ஏற்படும் போதெல்லாம், அவர்களை தனி இடத்துக்கு அழைத்துச் சென்று பேசாமல், அனைவரின் முன்னிலையிலும் மேனேஜர் பேசுவார். வேலை வாய்ப்பு வழங்கப்பட்ட போது சொல்லப்பட்டதைவிட சூழல் வேறுமாதிரி இருந்தது,” என்கிறார் ரோஹித்.
இந்தச் சூழலோடு பொருந்திப்போக முடியாமல், நான்காவது மாதத்திலேயே ராஜினாமா செய்ததாகக் கூறுகிறார் ரோஹித்.
இதேபோல் ஒரு சம்பவம், அமெரிக்காவைச் சேர்ந்த 46 வயதான கியர்ஸ்டன் க்ரெக்ஸ் என்ற பெண்ணுக்கும் நடந்தது.
கியர்ஸ்டன் தாமே ஒரு ஆட்சேர்ப்பு நிறுவனத்தில் வேலை செய்பவர். அதாவது, மற்ற நிறுவனங்களுக்குத் திறமையான பணியாளர்களைத் தேர்வு செய்யும் வேலை.
அவருக்கு அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள ஒரு நிறுவனத்தில் இருந்த காலி பணியிடத்தில் சேர்வதற்குப் பல மிகைப்படுத்தப்பட்டத் தகவல்கள் கூறப்பட்டதாகச் சொல்கிறார்.
கிரெக்ஸ் கூறுகிறார், “இந்தத் துறையில் நான் பெயர் பெற்றவள் என்று என்னிடம் கூறினார்கள். எனக்கு உடனடியாக வேலை வழங்கப்பட்டது. வீட்டிலிருந்து வேலை செய்யலாம், மேலும் வசதிகள் கிடைக்கும் என்று கூறப்பட்டது,” என்கிறார்.
ஆனால் அவர் வேலையில் இணைந்தவுடன், நிலைமை முற்றிலுமாக மாறியது. முதல் நாளே, நிர்வாகம் கிரெக்ஸை அலுவலகத்திற்கு வரச் சொன்னது. அவர் அலுவலகத்தை அடைந்ததும், யாரும் அவரை வரவேற்கவில்லை, யாரும் அவரை அணிக்கு அறிமுகப்படுத்தவில்லை. மேலாளரை தொடர்பு கொண்டபோது, வீட்டில் இருந்தே வேலை செய்வதாக கூறிய வாக்குறுதி பொய் என்று தெரிந்தது. அது நிறுவனத்தின் கொள்கை அல்ல என்று அவர் கூறினார்.
அங்குள்ள மோசமான வேலை கலாச்சாரத்தைக் கண்டு கிரெக்ஸ் ஆச்சரியப்பட்டார். அலுவலகத்தில் கெட்ட வார்த்தைகள் பேசப்பட்டன. ஒரு மாற்றுத்திறனாளி பணியமர்வில் நியாயமாக நடத்தப்படாததை அவர் கவனித்தார். எட்டு நாட்களுக்குப் பிறகு அந்த வேலையை விட்டுவிட்டார்.
சில விண்ணப்பதாரர்கள் சலுகையைப் பெறும்போது மிகவும் உற்சாகமாக இருக்கலாம், ஆனால் பின்னர் அவர்களுக்கு வேலை வழங்கப்படுவதில்லை
தொழில் பயிற்சியாளர் சலீம் மற்றொரு சிக்கல் இருப்பதாகக் கூறுகிறார். சில விண்ணப்பதாரர்கள் சலுகையைப் பெறும்போது மிகவும் உற்சாகமாக இருக்கலாம், ஆனால் பின்னர் அவர்களுக்கு வேலை வழங்கப்படுவதில்லை.
அவர் விளக்குகிறார், “ஆட்சேர்ப்பு செய்யும் சிலர் பல விண்ணப்பதாரர்களைத் தொடர்புகொண்டு குழப்பமடையச் செய்கின்றனர். நிறுவனங்களுக்கு அதிக அளவிலான தேர்வுகள் கிடைக்கும் என்பதால் இவ்வாறு செய்கின்றனர்,” என்கிறார்.
தொழில் ஆலோசகர் பர்வீன் மல்ஹோத்ரா இதற்கு மற்றொரு காரணத்தையும் கூறுகிறார்.
“பொதுவாக இதுபோன்ற விஷயங்கள் ஒன்று குறைவான விண்ணப்பதாரர்களால், அல்லது அதிகமான விண்ணப்பதாரர்களால் நிகழ்கின்றன. ஆனால் யாரை எந்த நிலையில் வைத்திருக்க வேண்டும் என்பதை நிறுவனம் ஏற்கனவே முடிவு செய்திருப்பதும் பல நேரங்களில் தெரிகிறது. செயல்முறைகள் வெளிப்படையாகத் தோன்ற, அவர்கள் விளம்பரங்களையும் போலியான ஆட்சேர்ப்பு செயல்முறையையும் வெளியிடுகிறார்கள். ஆனால் அவ்வாறு செய்வது ஒரு விண்ணப்பதாரரின் மன உறுதியை உடைப்பது மட்டுமல்லாமல், அவருக்கு நிதி இழப்பையும் ஏற்படுத்தும். ‘லவ் பாமிங்கில்’ ஈடுபட்ட இந்த நிறிவனத்தின் பேச்சை நம்பி, அந்த விண்ணப்பதாரர் மற்றொரு நிறுவனத்தின் வேலை வாய்ப்பை நிராகரித்திருக்கலாம்,” என்கிறார் மல்ஹோத்ரா.
பணியமர்த்துபவர்கள் வேலை தேடுபவரை நடத்தும் முறையை மாற்றுவது கடினம். ஆனால் ‘லவ் பாமிங்’ நடக்கிறது என்று தெரிந்தால், நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.
சான் பிரான்சிஸ்கோவில் உள்ள தொழில் பயிற்சியாளரான சமோர்ன் சலீம் கூறுகிறார், “நாம் சில அறிகுறிகளைக் கவனிக்க வேண்டும். பணியமர்த்தும்போது ஒரு விண்ணப்பதாரரின் அனுபவம் மற்றும் திறமைகளைப் பாராட்டுவது அசாதாரணமானது அல்ல. வேலை கொடுக்கும்போது அவருக்கு முக்கியத்துவம் கொடுப்பது அவசியம். ஆனால், வெளிப்புறத்தில் விஷயங்கள் மிகைப்படுத்தப்படும்போது அல்லது வெளிப்படைத்தன்மை இல்லாத போது வேலை தேடுபவர்கள் கவனமாக இருக்க வேண்டும்,” என்கிறார்.
தொழில் ஆலோசகர் பர்வீன் மல்ஹோத்ராவின் கூற்றுப்படி, ‘ஒரு பொருளை வாங்குபவர் ஷாப்பிங் செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. வேலை தேடும்போதும் இதே கொள்கை பொருந்தும்’.
அவர் மேலும் கூறுகிறார், “ஒரு நிறுவனம் அளித்த வாக்குறுதிகளில் பாதி கூட ஊழியர்களுக்கு கிடைக்காமல் போவது பல நேரங்களில் நடக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், நிறுவனத்தைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்கும் பொறுப்பு விண்ணப்பதாரர்கள் மீது விழுகிறது. முன்னதாக இந்தப் பணி கடினமாக இருந்தது, ஆனால் இப்போது பல ஊழியர்கள் நிறுவனத்தைப் பற்றிய மதிப்புரைகளை இணையத்தில் எழுதுகிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், ஒரு நிறுவனத்தின் சூழல் என்ன, அதன் கொள்கைகள் என்ன, அங்குள்ள சிக்கல்கள் என்ன என்பவற்றை ஆன்லைனில் காணலாம்,” என்கிறார்.
அதாவது, ‘லவ் பாமிங்’ மற்றும் அதனால் ஏற்படும் சேதங்களைத் தவிர்க்க ஒரே ஒரு வழி – கவனமாக இருப்பது.