;
Athirady Tamil News

சுதந்திரப் போராட்டத்தை வலுப்படுத்த பத்திரிகையின் முக்கியத்துவத்தை புரிந்துக் கொண்டவர் திலகர்- பிரதமர் மோடி!!

0

சுதந்திர போராட்டத்தில் முக்கிய நபர்களில் ஒருவராக திகழ்ந்தவர் பாலகங்காதர திலகர். அவர் திலக் மகராஜ், லோக மான்ய திலகர் என்றும் போற்றப்பட்டார். லோகமான்ய திலகரின் பாரம்பரியத்தை போற்றும் வகையில் நாட்டின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்காக பாடுபட்டவர்களுக்கு திலக் ஸ்மார்க் மந்திர் அறக்கட்டளையால் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1ம் தேதி திலக் தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் நடந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு லோகமான்ய திலக் தேசிய விருது வழங்கப்பட்டது. விருது வழங்கிய பிறகு மேடையில் பேசிய பிரதமர் மோடி, “சுதந்திரப் போராட்டத்தை வலுப்படுத்துவதற்கு பத்திரிகை மற்றும் செய்தித்தாள்களின் முக்கியத்துவத்தை பாலகங்காதர திலகர் புரிந்து கொண்டார்” என தெரிவித்தார்.

இதுகுறித்து பிரதமர் மோடி மேலும் கூறியதாவது:- சுதந்திரப் போராட்டத்தை உரக்கச் செய்வதற்கு பத்திரிகை மற்றும் செய்தித்தாள்களின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்ட திலகர், ஆங்கிலத்தில் ‘மஹரத்தா’ என்ற வார இதழைத் தொடங்கினார். மற்றொரு சுதந்திரப் போராட்ட வீரர் கோபால் கணேஷ் அகர்கர் மற்றும் விஷ்ணு சாஸ்திரி சிப்லுங்கர் ஆகியோரின் உதவியுடன் ‘கேசரி’ என்கிற மராத்தி நாளிதழைத் தொடங்கினார்.

கேசரி 140 ஆண்டுகளாக புழக்கத்தில் உள்ளது. இது திலகர் நிறுவனத்திற்கு வலுவான அடித்தளத்தை அமைத்தது. இவ்வாறு அவர் கூறினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய என்சிபி தலைவர் சரத் பவார் கூறுகையில், ” திலகர் ஆங்கிலேயரின் அடிமைத்தனத்தில் இருந்து விடுபடுவதற்காக சாதாரண மனிதனை ஊக்குவிக்க பத்திரிகையை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தினார். தனது 25 வயதில் கேசரி மற்றும் வார இதழ் மஹரத்தாவை ஆரம்பித்தார். இந்த செய்தித்தாள்களின் உதவியால் ஆங்கிலேயர்களை தாக்கினார். இதழியல் அழுத்தம் இல்லாமல் இருக்க வேண்டும் என்று கூறி வந்தார். இதுதான் அவரது நிலைப்பாடு. அதை நடைமுறைக்குக் கொண்டு வாருங்கள்” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.