டெல்லி தொடர்பாக எந்த சட்டத்தையும் கொண்டு வரலாம்.. மக்களவைக்கு அதிகாரம் இருக்கிறது: அமித் ஷா!!
டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குதான் அதிகாரிகள் நியமனம், மாறுதல் தொடர்பான அதிகாரம் இருக்கிறது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால் இந்த தீர்ப்பை நிராகரிக்கும் வகையில் மத்திய அரசு ஒரு அவசர சட்டம் கொண்டு வந்தது. அதன்படி டெல்லி நிர்வாகத்தில் அதிகாரிகள் நியமனம், மாறுதல்கள் செய்ய மத்திய அரசுக்குதான் அதிக அதிகாரம் உண்டு. இந்த அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார். இந்த அவசர சட்டத்திற்கு ஆளும் ஆம் ஆத்மி கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், இதை பாராளுமன்றத்தில் சட்டமாக்க விடாமல் தடுப்பதற்கான முயற்சிகளில் இறங்கினார். இதற்காக பல்வேறு கட்சிகளின் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.
இந்நிலையில், டெல்லி சேவைகள் தொடர்பான அவசர சட்டத்துக்கு மாற்றாக பாராளுமன்றத்தில் இன்று மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை தாக்கல் செய்ய காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். முன்னதாக மசோதா தொடர்பாக உள்துறை மந்திரி அமித் ஷா பேசும்போது, டெல்லி தொடர்பாக எந்த மசோதாவையும் கொண்டு வருவதற்கு மக்களவைக்கு அதிகாரம் இருக்கிறது என்றும், உச்ச நீதிமன்ற சமீபத்திய தீர்ப்பில் ஆட்சேபனைகள் நிராகரிக்கப்பட்டதாகவும் கூறினார்.
‘டெல்லி தொடர்பாக எந்த சட்டத்தையும் இயற்றும் அதிகாரத்தை அரசியலமைப்பு இந்த அவைக்கு வழங்கியுள்ளது. டெல்லி மாநிலம் தொடர்பாக பாராளுமன்றம் எந்தச் சட்டத்தையும் கொண்டு வரலாம் என உச்ச நீதிமன்ற தீர்ப்பில் தெளிவாக உள்ளது. இந்த மசோதாவுக்கான எதிர்ப்புகள் அனைத்தும் அரசியல். இந்த மசோதாவை கொண்டு வர அனுமதிக்கவேண்டும்’ என அமித் ஷா பேசினார்.