;
Athirady Tamil News

மருத்துவ குணங்கள் நிறைந்த குமரி மாவட்ட மட்டி வாழைப்பழம்- புவிசார் குறியீடு வழங்கியதால் மக்கள் மகிழ்ச்சி!!

0

இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் தனித்துவமாக உற்பத்தியாகும் பொருள்களுக்கு இந்திய அரசாங்கம் புவிசார் குறியீடு வழங்கி அங்கீகரிக்கிறது.

அந்த வகையில் தற்போது மட்டி வாழைப்பழத்திற்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் விளையும் மட்டி வாழைப்பழங்களில் பெரும்பாலான வகைகள் குமரி மாவட்டத்தில் விளைவிக்கப்படுகிறது. குமரி மாவட்டத்தில் மட்டி, செம்மட்டி ஆகிய 2 ரகங்கள் உள்ளன. இந்த இரண்டு ரகங்களுமே மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விளை விக்கப்பட்டு வருகின்றன. குமரி மாவட்ட மண், மட்டிப்பழத்திற்கு ஏதுவானதாக இருப்பதால் விளைச்சலும் அதிகமாக உள்ளது. மட்டிவாழை மரங்கள் 8 முதல் 10 அடி உயரம் வரை வளரக்கூடியவை. மட்டி வாழையை நட்ட ஒரு ஆண்டிற்குள்ளாகவே வாழைத்தார்களை அறுவடை செய்ய முடியும். ஒவ்வொரு தாரிலும் 10 முதல் 12 சீப்புகள் இருக்கும். தாரில் 120 முதல் 150 பழங்கள் வரை இருக்கும்.

இந்த மட்டி வாழைப் பழத்திற்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. மட்டி வாழைப்பழத்தில் பொட்டாசியம் சத்து அதிகமாக இருப்பதால் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுத்து இதயத்தையும், ரத்த அழுத்தத்தையும்சீராக பராமரிக்க உதவுகிறது. மேலும் இதில் புரதம் மற்றும் உப்பு சத்து இருக்கிறது. இதனால் சிறுநீகர பிரச்சினைகளை தீர்க்கும் வல்லமையும் மட்டிப் பழத்திற்கு உள்ளது. இந்த வாழைப்பழம் செரிமானத்துக்கு ஏற்றது மட்டுமின்றி, இரைப்பை மற்றும் குடல் பிரச்சினைகளை சமாளிக்க உதவுகிறது. நாள்பட்ட அல்சர் பிரச்சினை உள்ளவர்கள் இந்த பழத்தை சாப்பிடுவதன் மூலம், அதிலிருந்து விடுபட முடியும்.

நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட மட்டிப்பழத்தை, பச்சிளம் குழந்தைகள் முதல் நோயாளிகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுகிறார்கள். இந்த பழம் மிகவும் மிருதுவாகவும், இனிப்பாகவும், மணமாகவும் இருப்பதால் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் குழந்தைகளுக்கு விரும்பி கொடுப்பார்கள். குழந்தைகளுக்கு முதன்முதலாக மட்டி வாழைப்பழத்தை நசுக்கி சாப்பிட கொடுக்கும் பழக்கம் குமரி மாவட்டத்தில் இன்றளவும் இருந்து வருகிறது. மட்டி வாழைப்பழத்திற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது மட்டிப்பழத்திற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் குமரி மாவட்டத்திற்கும், வாழை விவசாயிகளுக்கும் அந்தஸ்து கிடைத்துள்ளது.

குமரி மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நேந்திரம் வாழை, நாட்டு மருந்து, கிராம்பு, ஈத்தாமொழி நெட்டை தென்னை தேங்காய், மார்த்தாண்டம் தேன் உள்ளிட்டவைகளுக்கு ஏற்கனவே புவிசார் குறியீடு வழங்கபபட்டுள்ள நிலையில், தற்போது மட்டி வாழைப்பழத்திற்கு வழங்கப்பட்டிருப்பதால் குமரி மாவட்ட வாழை விவசாயிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மட்டி வாழைப்பழத்திற்கு புவிசார் குறியீடு கிடைத்திருப்பதால் அதன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.