ஓட்டலில் சிலிண்டர் வெடிக்கவில்லை- கடை உரிமையாளர் மகள் பேட்டி!!
கிருஷ்ணகிரி, பழையபேட்டை நேதாஜி சாலையில் பட்டாசு குடோனில் கடந்த 29-ந் தேதி ஏற்பட்ட வெடி விபத்தில், 9 பேர் பலியாகினர். இந்த விபத்திற்கு பட்டாசு குடோன் அருகில் ஓட்டலில் சிலிண்டர் வெடித்ததே காரணம் என தடயவியல் நிபுணர்கள் கூறி இருந்தனர். இந்த நிலையில் விபத்து குறித்து விசாரிக்க சிப்காட் நில எடுப்பு பிரிவின் தனி மாவட்ட வருவாய் அலுவலர் பவணந்தி, சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது 1884 வெடிபொருட்கள் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது. பட்டாசு குடோன் விபத்து நடந்த இடத்தில் அதிகாரி பவணந்தி தலைமையிலான அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினார்கள். அப்போது விபத்தில் இறந்த ஓட்டல் உரிமையாளர் ராஜேஸ்வரியின் மகள் சரண்யா, மருமகள் வினிதா ஆகியோர் விபத்துக்கு சிலிண்டர் வெடிப்பு காரணம் இல்லை என மனுவை அளித்தனர்.
பின்னர் அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:- நாங்கள் கிருஷ்ணகிரி, காந்தி சாலையில் உள்ள அரசு மருத்துவமனை முன்பு ஓட்டல் நடத்தி வருகிறோம். தற்போது கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை, போலுப்பள்ளி அரசு மருத்துவக்கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டதால் வியாபாரம் குறைந்தது. இதையடுத்து பழையபேட்டையில் ஒரு ஓட்டல் கடை தொடங்கினோம்.
காந்தி சாலை ஓட்டலில் இருந்து உணவுப்பொருட்கள் இங்கு எடுத்து வருவோம். அவசர தேவைக்கு டீ, ஆம்லெட் போடுவதற்கு கியாஸ் சிலிண்டர் அடுப்புகளை பயன்படுத்துவோம். விபத்தில் ராஜேஸ்வரிக்கு சிறு தீக்காயம் கூட ஏற்படவில்லை சிலிண்டர்களை வெடிக்காத நிலையில் எடுத்துள்ளார்கள். ஆனால் ஓட்டல் சிலிண்டர் வெடித்ததாக கூறுகிறார்கள். இது தொடர்பாக அதிகாரிகளே விசாரணை நடத்தி உண்மையை மக்களுக்கு கூற வேண்டும். இவ்வாறு அவர்கள் கண்ணீருடன் கூறினார்கள்.