இத்தாலிக்கு தப்ப முயன்ற யாழ்.தம்பதி கைது!!
போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இத்தாலிக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கையைச் சேர்ந்த இளம் தம்பதி இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் வைத்து செவ்வாய்க்கிழமை (010 மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம். சங்கானைப் பிரதேசத்தில் வசிக்கும் இந்தத் தம்பதிகளில் இளைஞனுக்கு 27 வயது.
அன்று மாலை 05.00 மணியளவில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபிக்கு புறப்பட்ட எதிஹாட் எயார்லைன்ஸின் ரிவை-279 விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இவர்கள் மீதான சந்தேகத்தின் அடிப்படையில் குடிவரவு. குடியகல்வு எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவுக்கு வரவழைக்கப்பட்டு. அவர்கள் கொண்டு வந்த பயணப்பொதிகளை சோதனையிட்ட போது பொய்யான தகவல்களுடன் தயாரிக்கப்பட்ட இரண்டு கடவுச்சீட்டுகளும் இந்த இளைஞனிடம் இருந்த போலி விசாவும் கண்டுபிடிக்கப்பட்டது.
யுவதியின் வீசா தொடர்பில் வினவிய போது அந்தப் பெண் மௌனம் காத்தமையால். குடிவரவு குடியகழ்வு பெண் அதிகாரி வரவழைக்கப்பட்டு யுவதியின் உடலை பரிசோதித்த போது அவரது உள்ளாடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போலி இத்தாலிய வீசா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு போலி கடவுச்சீட்டுகளின் உண்மையான உரிமையாளர்களான கோட்டைபகுதியில் வசிக்கும் தம்பதியினர் ஏற்கனவே தங்களுடைய உண்மையான கடவுச்சீட்டு மற்றும் விசாக்களை பயன்படுத்தி இந்த விமானத்தில் இருக்கையில் அமர்ந்திருந்தனர்.
குடிவரவு குடியகல்வு எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட தம்பதியினர் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
வட பிராந்தியத்தில் 20 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட இளைஞர்கள் போலியான தகவல்கள் அடங்கிய பொய்யான ஆவணங்களைப் பயன்படுத்தி ஐரோப்பாவுக்குத் தப்பிச் செல்லும் போக்கு அதிகரித்து வருவதாக கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.