5 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த துணை தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது!!
சென்னை கொரட்டூர் சாவடி தெருவில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மாணவ -மாணவிகள் படித்து வருகிறார்கள். இங்கு அயனாவரம் செட்டி தெருவில் வசித்து வரும் பழனிவேலு என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் பள்ளியின் துணை தலைமை ஆசிரியராக பொறுப்பில் இருந்து உள்ளார். ஆசிரியர் பழனிவேல் 5-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு பாடம் நடத்தி வந்து உள்ளார். அப்போது மாணவிகளை தனியாக அழைத்து பேசுவதை வழக்கமாக வைத்திருந்த அவர் தவறாக நடந்து கொண்டுள்ளார். தனது மடியில் அமரவைத்து மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்த ஆசிரியர் பழனிவேல் எல்லைமீறி நடந்து கொண்டுள்ளார். மாணவிகளை தனியாக அழைத்து பேசும்போது கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து வந்ததுடன் உடலில் தொடக்கூடாத இடங்களில் தொட்டு தொடர்ச்சியாக செக்ஸ் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
5-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் 5 பேருக்கு பழனிவேல் இது போன்று செக்ஸ் தொல்லை கொடுத்து வந்துள்ளார். கொரட்டூர் சாமராஜர் நகர் பகுதியில் வசித்து வரும் மாணவி ஒருவரும் ஆசிரியர் பழனிவேலின் பாலியல் தொல்லைக்கு ஆளானார். இது தொடர்பாக அவர் தனது பெற்றோரிடம் சென்று புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து மாணவியின் தந்தை பள்ளி சென்று கேட்ட போது அங்கு சரியான முறையில் யாரும் பதில் அளிக்கவில்லை. இதையடுத்து அம்பத்தூர் மகளிர் போலீசில் பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் மாணவிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். அப்போது ஆசிரியர் பழனிவேல் மாணவிகளிடம் தொடக் கூடாத இடங்களில் தொட்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்த அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவிகள் தெரிவித்த தகவல்களை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்தனர். இதன் அடிப்படையில் ஆசிரியர் பழனிவேல் மீது மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் ஆசிரியர் பழனிவேலை கைது செய்து திருவள்ளூர் மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். ஆசிரியர் பழனிவேல் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன் தனது செல்போனில் புகைப்படம் எடுத்து வைத்திருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இதையடுத்து அவரது செல்போனை கைப்பற்றியுள்ள போலீசார் அது தொடர்பாகவும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பழனிவேலின் செல்போனில் எந்த மாதிரியான போட்டோக்கள் உள்ளன என்பது பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். இதன் பிறகே செல்போனில் உள்ள புகைப்படங்கள் என்னென்ன என்பது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். அரசு பள்ளியில் 5 மாணவிகளிடம் பள்ளியின் துணை தலைமை ஆசிரியரே அத்துமீறி நடந்து கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர்கள் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.