;
Athirady Tamil News

6 மாதங்கள் காலக்கெடு விதித்தார் ஜனாதிபதி!!

0

மக்களின் நல்வாழ்வை பாதுகாக்கும் வகையில் புதிய மருத்துவ சட்டமூலத்தை ஆறு மாதங்களுக்குள் தயாரித்து சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

அதன்படி, தற்போதுள்ள மருத்துவக் கட்டளைச் சட்டத்தில் உள்ள குறைபாடுகளைத் தவிர்த்து, சிறந்த சுகாதார சேவையையும், பொது நலனையும் உறுதி செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதுள்ள மருத்துவக் கட்டளைச் சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய காலத்திற்கேற்ற மாற்றங்களை ஆராய்ந்து புதிய மருத்துவச் சட்டமொன்றைக் கொண்டு வருவதற்காக சுகாதார அமைச்சின் செயலாளர், சட்ட வரைஞர் மற்றும் இலங்கை மருத்துவ சபையின் தலைவர் ஆகியோரைக் கொண்ட உயர்மட்டக் குழு, செயற்படும்.

சுகாதார சேவையை மேம்படுத்துவது மற்றும் சுகாதார சேவைக் கட்டமைப்பை பலப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் புதன்கிழமை (02) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற பின்னாய்வுக் கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

எதிர்வரும் மூன்று மாதங்களுக்குப் போதுமான அவசர மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக சுகாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் 30 பில்லியன் ரூபா மேலதிக நிதியை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் (FDA) அங்கீகரிக்கப்பட்ட ஏனைய நாடுகளின் மருந்துகள் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை அங்கீகரிக்கும் செயல்முறையை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி, தேசிய ஔடதக் கட்டுப்பாட்டு அதிகாரசபைக்கு அறிவுறுத்தினார்.

அந்த நோக்கத்திற்காக, தேசிய ஒளடதக் கட்டுப்பாட்டு அதிகார சபைச் சட்டத்தில் தேவையான திருத்தங்கள் செய்யப்பட்டு, அத்தியாவசிய மருந்துகள் ஒழுங்காகவும் விரைவாகவும் கிடைப்பதை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்குமாறும் இதன் போது அறிவிக்கப்பட்டது.

தேசிய ஒளடதக் கட்டுப்பாட்டு அதிகார சபையில் காணப்படும் பணியாளர் பற்றாக்குறை ஏற்கனவே தீர்க்கப்பட்டுள்ளது. மருத்துவ தயாரிப்புகளை ஒழுங்குபடுத்துவதற்கும் பொது சுகாதார பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் தேசிய ஒளடதக் கட்டுப்பாட்டு ஆணைக்குழுவின் (NMRA) பங்களிப்பை வலுப்படுத்த விரிவான அறிக்கை ஒன்றை கையளிக்குமாறும் ஜனாதிபதி இதன் போது அறிவித்தார்.

மருந்து விநியோகம் மற்றும் ஆவணப்படுத்தல் முகாமைத்துவத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் குறித்து இதன் போது கலந்துரையாடப்பட்டதுடன், இரண்டு வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டதன் பிரகாரம், மருந்து வகைகளை மருத்துவமனைகளுக்கு விநியோகிப்பது தொடர்பில் உடனடி தகவல் வழங்கும் வகையில் இணையவழி முறைமையை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

தரமான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கான எளிய மற்றும் வெளிப்படையான கொள்முதல் செயல்முறையை தயாரிப்பதற்காக திறைசேரி பிரதிச் செயலாளர் ஏ.கே.செனவிரத்ன தலைமையில் ஐவர் கொண்ட குழுவும் நியமிக்கப்பட்டது.

மேலும், தாதியர் ஆட்சேர்ப்புக்கான தகைமைகள் தற்போதைய சுகாதார சேவைத் தேவைகளுடன் இணைந்து செல்லும் வகையில் சேவை யாப்பில் திருத்தம் செய்யுமாறு சுகாதார அமைச்சினால் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கவனம் செலுத்திய ஜனாதிபதி, கலைத் துறையில் கற்ற தகுதியானவர்களை தாதியர் பணிக்கு இணைத்து பயிற்சியளிப்பது குறித்து பரிசீலிக்குமாறு சுகாதார அதிகாரிகளுக்கு அறிவித்தார்.

மேலும், மருத்துவப் பொருட்களின் தரம், பாதுகாப்பு மற்றும் வினைத்திறனை மதிப்பிடுவதற்கு உலக சுகாதார ஸ்தாபனத்தின் தரநிலை 4 தரநிலைகளுடன் கூடிய ஆய்வக வசதிகளை ஏற்படுத்துவதற்கான முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு சுகாதார அமைச்சு மற்றும் ஒளடதக் கட்டுப்பாட்டு அதிகார சபை என்பவற்றுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

இரண்டு வருடங்களுக்குள் காலாவதியாகும் அல்லது அகற்றப்படும் பயன்படுத்த முடியாத வைத்தியசாலை உபகரணங்களின் பட்டியலை உடனடியாக சமர்ப்பிக்குமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, சுகாதார அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார்.

அனைத்து குடிமக்களுக்கும் வலுவான மற்றும் அணுகக்கூடிய சுகாதாரக் கட்டமைப்பை உருவாக்கும் நோக்கத்துடன் முன்மொழியப்பட்ட மறுசீரமைப்புகளை விரைவாக செயல்படுத்துவதற்கு இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து தரப்பினரும் தங்கள் உடன்பாட்டை வெளிப்படுத்தினர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.