எல்லோரையும் பாதுகாப்பது சாத்தியமில்லை.. மக்கள் அமைதியாக இருக்குமாறு அரியானா முதல்வர் வேண்டுகோள்!!
அரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் நேற்று முன்தினம் விஸ்வ இந்து பரிஷத் ஊர்வலம் நடந்தது. இதற்கு ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஊர்வலம் மீது சில மர்ம மனிதர்கள் கல்வீசியதால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த மோதல் கலவரமாக வெடித்தது. கலவரத்தில் 2 ஊர்க்காவல் படை வீரர்கள் உள்பட 4 பேர் கொல்லப்பட்டனர். பின்னர் கலவரம் அருகில் உள்ள குருகிராம் மாவட்டத்துக்கும் பரவியது. வீடுகள், வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதனால் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
நூ மற்றும் குருகிராம் மாவட்டங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் இணையதள சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது:- வன்முறையின் மையப்புள்ளியாக கருதப்படும் மோனு மானேசர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவர் மீது ராஜஸ்தான் அரசு வழக்கு பதிவு செய்துள்ளது. அவரை கண்டுபிடிக்க உதவும்படி ராஜஸ்தான் அரசாங்கத்திடம் கேட்டுள்ளேன். நாங்களும் உதவி செய்ய தயாராக இருக்கிறோம்.
இப்போது ராஜஸ்தான் காவல்துறை அந்த நபரை தேடி வருகிறது. வன்முறை தொடர்பான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் 116 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 190 பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. வன்முறைக்கு காரணமானவர்கள் இழப்புகளுக்கு பொறுப்பேற்கவேண்டும். சிசிடிவி காட்சிகள் மற்றும் தொலைபேசி அழைப்பு பதிவுகள் மூலம் காவல்துறை விசாரித்து வருகிறது. அனைத்து மக்களையும் பாதுகாப்பது காவல்துறைக்கு சாத்தியமில்லை. மக்கள் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேணவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.