உலகில் அமரர்கள் வாழும் தீவு பற்றி அறிந்துள்ளீர்களா..!
உலகில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் வாழும் மக்கள் அதிக ஆரோக்கியத்துடனும், அதிக அளவிலான சராசரி ஆயுட்காலத்தையும் கொண்டிருக்கிறார்கள் என்றால் உங்களால் நம்ப முடியுமா?
உலகில் அதிக ஆயுட்காலத்துடன் ஆரோக்கியமான மனிதர்கள் வாழும் பகுதி “ப்ளூ சோன்” என அழைக்கப்படுகிறது.
உலகில் மொத்தம் உள்ள ஐந்து “ப்ளூ சோன்” களில் ஜப்பானின் இந்த ஒகினாவா தீவும் ஒன்றாகும்.
ஆம்! ஜப்பானில் உள்ள ஒகினாவா தீவு “மரணமில்லாதவர்கள் வாழும் இடம்” அல்லது “அமரர்கள் வாழும் தீவு” என அழைக்கப்படுகிறது.
ஜப்பான் மற்றும் தைவானுக்கு இடைப்பட்ட பகுதியில் இந்த தீவு அமைந்துள்ளது.
உலகில் வேறு எங்கேயும் இருப்பதைவிட ஒக்கினாவா தீவில் தான் நூறு வயதை தாண்டிய மக்கள் அதிக அளவில் வாழ்கின்றனர்.
2020 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இந்த தீவில் வாழும் பெண்களின் சராசரி ஆயுட்காலம் 87.44 ஆண்டுகளாகும், ஆண்களின் சராசரி ஆயுட்காலம் 80.27 ஆண்டுகளாகும்.
இந்த தீவில் வாழும் மக்கள் தங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு எப்போதும் ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டே இருப்பதும், அவர்கள் வீட்டிற்குள்ளேயே இருந்தாலும், இங்கும் அங்கும் நகர்ந்து கொண்டே இருப்பதும்தான் காரணம் என குறிப்பிடப்படுகிறது.
மேலும், அங்கு வாழும் மக்களின் உணவு முறையும் அவர்களின் நீண்ட கால ஆயுளுக்கான ரகசியமாக உள்ளது.
கடற்பாசி, பச்சை காய்கறிகள் மற்றும் இறைச்சி ஆகியவை இவர்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.