முல்லைத்தீவில் 67இற்கு மேற்பட்ட விகாரைகள் – ஈழத்தமிழ் மக்களால் இனி என்ன செய்ய முடியும்… !!
நாளுக்கு நாள் ஆக்கிரமிப்புகளால் மலிந்துபோன ஒரு தேசமாக தமிழர் தாயகப்பகுதி மாறிக்கொண்டிருக்கின்றது.
இந்த நிலையில் தமிழர்களின் இருப்பு என்பது அந்தப் பகுதிகளில் தொடர்ச்சியாக கேள்விக்குட்படுத்தப்பட்டுக்கொண்டே இருக்கிறது.
கடந்த காலங்களில் கிழக்கில் அம்பாறையில் இடம்பெற்ற ஆக்கிரமிப்புகள் அங்கு தமிழர்களின் இருப்பினை விழுங்கி ஏப்பம்விட்ட நிலையில், இன்று ஒரு தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தைக் கூட பெற முடியாத அளவிற்கு சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெற்றிருக்கின்றன.
அதுபோல, ஈழத்தமிழர்களால் தமிழர் தேசத்தின் தலைநகரம் என்று விழிக்கப்படும் திருகோணமலை மிகப்பாரதூரமான ஆக்கிரமிப்புகளால் ஒட்டுமொத்த தமிழினத்தின் உரிமைகோரல்களும் தகர்க்கப்பட்டு முழுமையான சிங்கள முஸ்லிம் ஆக்கிரமிப்புகளால் நிறைந்துபோயிருக்கின்றது.
இரண்டாம் தர பிரஜைகளாக தமிழ் மக்கள் தங்களது இருப்பையும், அரசியல் பிரதிநிதித்துவத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருக்க, அங்கிருக்கும் ஏனைய இனங்களைச் சார்ந்த இரட்டை இலக்க நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை கொண்டு தமிழர்களின் வரலாற்று தலைநகரில் தமிழர்களின் தொன்மையின் அடையாளங்கள் அபகரிக்கப்பட்ட நிலையில் இருக்கிறது.
இவ்வாறான நிலையில் இப்போது தமிழீழத்தின் இதயபூமி என்று விழிக்கப்படுகின்ற மணலாறு பிரதேசம் கூட, முற்றுமுழுதாக வெலிஓயாவாக மாற்றப்பட்டதும் அங்கிருக்கிருக்கூடிய தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களும் அபகரிப்பட்ட அபாயகரமான சூழல் இப்போது முழுமையாக முல்லைத்தீவு மாவட்டம் முழுவதுமாக வியாபித்திருக்கின்றது.
இவை நீராவியடி, குருந்தூர் மலை, அண்மையில் கொக்குத்தொடுவாயில் அகழப்பட்ட மனிதப்புதைகுழிகள் என நீண்டுகொண்டிருக்கும் நிலையில் ஐபிசி தமிழின் நெற்றிக்கண் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தற்போதைய சூழலில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மொத்தமாக 67 விகாரைகள் பதிவுசெய்யப்பட்டுருப்பதாக கூறினார்.
அப்பிரதேசங்களில் தமிழர்களின் நிலம் மட்டுமல்லாது கடலும் மலையும் கூட அபகரிப்படுகின்ற நிலையில் ஈழத்தமிழ் மக்களால் என்ன செய்ய முடியும் என்ற கேள்வியையும் அவர் எழுப்பியிருந்தார்.