‘குழந்தை வேண்டாம்’ எனும் இளம் தம்பதிகள் தன்னலம் பேணும் சுயநலவாதிகளா? அந்த முடிவு ஏன்? !!
“நான் அவளிடம் ‘எனக்குக் குழந்தைகள் வேண்டாம்’ என்று சொன்னேன். ஆனால் நீங்கள் உங்கள் விருப்பத்தை அடக்கி வைத்துக் கொள்வதையோ, பின்னர் என்னைக் கட்டாயப்படுத்துவதையோ நான் விரும்ப மாட்டேன்.”
நொய்டாவில் உள்ள ஒரு செய்திச் சேனலில் பணிபுரியும் நிஷாந்த் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), ஸ்வேதாவிடம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அவரைத் திருமணம் செய்துகொள்ளும் விருப்பத்தைத் தெரிவிக்கும் முன்னரே இப்படிச் சொன்னதாகக் கூறுகிறார்.
நிஷாந்த் தன் முந்தைய காதலியிடமும் அவரைத் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும், ஆனால் தனக்குக் குழந்தைகள் வேண்டாம் என்றும் கூறியதாலேயே முறிந்து போனது.
இந்த முறையும் அப்படி ஏதாவது நடக்குமோ என்று பயந்தார் நிஷாந்த். ஆனால், ஸ்வேதா தனக்கும் குழந்தைகள் வேண்டாம் என்று கூறியபோது அவருக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.
இன்று, இருவருக்கும் திருமணமாகி ஐந்து வருடங்கள் ஆகின்றன. ‘குழந்தைகள் இல்லாத’ வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.
‘குழந்தை இல்லாத’ மற்றும் ‘குழந்தை பெற்றுக்கொள் விரும்பாத’ தம்பதிகளிடையே என்ன வித்தியாசம்?
இப்போது குழந்தை இல்லாத, ஆனால் எதிர்காலத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள், அல்லது அவர்கள் விரும்பினாலும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதவர்கள் ‘குழந்தை இல்லாதவர்கள்’ என்று அழைக்கப்படுகிறார்கள்.
சில சமயங்களில் சில மருத்துவப் பிரச்சனைகளால் குழந்தை சில தம்பதிகளால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாமல் போகும். அதேபோல, துணை கிடைக்காதது, திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது போன்ற சமூகக் காரணங்களாலும் இருவர் குழந்தை இல்லாமல் இருக்கலாம்.
இதற்கு நேர்மாறாக, ‘குழந்தை பெற்றுக் கொள்ளாதவர்கள்’ என்பவர்கள் தங்களுக்குக் குழந்தைகள் வேண்டாம் என்று தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் முடிவு செய்தவர்கள்.
எளிமையான வார்த்தைகளில் புரிந்து கொண்டால், சில காரணங்களால் குழந்தை பெற்றுக்கொள்ள இயலாதவர்கள் Childless என்றும், குழந்தைகள் பெற்றுக்கொள்ள விரும்பாதவர்கள் Child-free என்றும் அழைக்கப்படுவார்கள்.
‘Child free’ என்ற சொல் இப்பெண்கள் சொந்த சுதந்திரமான தேர்வின் மூலமே குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருக்கின்றனர் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.
1900-களின் முற்பகுதியில் இருந்து ‘Child-free’ எனப்படும் ‘குழந்தைகள் பெற்றுக்கொள்ள விரும்பாதவர்கள்’ என்ற சொல் பயன்பாட்டில் இருந்து வருகிறது. ஆனால் 1970களில் இந்தப் போக்கு வேகம் எடுத்தது.
பெண்ணியவாதிகள், சொந்த விருப்பத்தின் பேரில் குழந்தை பெற்றுக்கொள்ளாத பெண்களை வேறுபடுத்திக் காட்ட இச்சொல்லைப் பயன்படுத்தினர்.
அதில் ‘free’ என்ற சொல் இப்பெண்கள் சொந்த சுதந்திரமான தேர்வின் மூலமே குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருக்கின்றனர் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. பிற காரணங்களாலோ அழுத்தங்களாலோ இவர்கள் குழந்தை பெறாமல் இல்லை.
அமெரிக்காவின் கனெக்டிகட் பல்கலைக்கழகத்தில் தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராக இருக்கும் எலிசபெத் ஹிண்ட்ஸ் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பாதவர்களைப் பறி குறித்து நிறைய ஆராய்ச்சிகளை செய்துள்ளார்.
பெரும்பாலான ஆராய்ச்சிகளில், குழந்தை இல்லாதவர்கள் மற்றும் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பாதவர்கள் இரு தரப்பினரையும் ஒரே பிரிவில் வைப்பதால், ஒப்பீட்டுத் தரவுகள் சேகரிப்பதில் சிக்கல் இருப்பதாக அவர் கூறுகிறார்.
இப்பினும், இந்தச் சமூக ஊடக யுகத்தில், குழந்தை வேண்டாம் என்று முடிவு செய்தவர்கள் பேச முன்வருவதால், ‘குழந்தை பெற விருப்பம் இல்லாதவர்கள்’ என்ற அடையாளம் வேகமாக வளர்ந்துள்ளது. சுய விருப்பத்தின் பேரில் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பாதவர்களின் எண்ணிக்கை மேற்கத்திய நாடுகளில் வேகமாக அதிகரித்து வருவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பியூ (Pew) ஆராய்ச்சி மையம் 2021-ம் ஆண்டு அமெரிக்காவில் ஒரு ஆராய்ச்சி நடத்தியது. இதில், குழந்தை இல்லாத 18 முதல் 49 வயதுக்குட்பட்டவர்களில் 44% பேர், எதிர்காலத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள மாட்டோம் என்று கூறினர். 2018-ம் ஆண்டு நடந்த ஒரு ஆராய்ச்சியில், அவ்வாறு கூறியவர்களின் எண்ணிக்கை 37% ஆக இருந்தது.
அப்படிச் சொன்னவர்களில் சிலர் உடல்நலம் தொடர்பான காரணங்களைச் சொன்னர்கள். மேலும் சிலர் தனி பெற்றோராகக் குழந்தையை வளர்க்க விரும்பவில்லை என்று கூறினர். ஆனால் பாதிக்கு மேற்பட்டோர் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பவில்லை என்று கூறினர்.
இதேபோல், இங்கிலாந்து மற்றும் வேல்ஸில், YouGov என்ற ஆராய்ச்சி நிறுவனம் 2020-ல் ஒரு ஆராய்ச்சியை மேற்கொண்டது. இது குழந்தை இல்லாத 35 முதல் 44 வயதுடையவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு குழந்தை பெற்றுக்கொள்ள் விருப்பமில்லை என்று தெரியவந்தது.
குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பாதவர்களுள், மூன்று வகையினர் உள்ளனர்.
எப்போதுமே குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பாதவர்கள்
வாழ்வில் ஒரு கட்டத்தில் குழந்தை வேண்டாம் என்று முடிவு செய்து அதையே கடைபிடிப்பவர்கள்
சில சமயங்களில் குழந்தைகள் வேண்டாம் என்றும், சில சமயங்களில் வேண்டும் என்றும் நினைப்பவர்கள்
நிஷாந்தும் ஸ்வேதாவும் முதல் வகையைச் சேர்ந்தவர்கள். அவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பவில்லை.
ஸ்வேதா கூறும்போது, “எல்லோருக்கும் குழந்தை பிறக்கிறது என்பதற்காக நாங்கள் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது. அதற்காக நாங்கள் குழந்தைகளை வெறுக்கிறோம் என்பதல்ல. விஷயம் என்னவென்றால், குழந்தைகள் இல்லாவிட்டாலும், எங்கள் வாழ்க்கை நன்றாகச் செல்கிறது, எதுவும் குறைவதுபோல நாங்கள் ஒருபோதும் உணர்ந்ததில்லை,” என்கிறார்.
டெல்லியைச் சேர்ந்த மனோதத்துவ நிபுணர் டாக்டர் பூஜா சிவம் ஜெட்லி, குழந்தை வேண்டாம் என்று முடிவெடுப்பதற்குப் பின்னால் பல காரணங்கள் இருப்பதாக விளக்குகிறார்.
“சிலர் தங்கள் நிதிநிலை சரியில்லை என்பதாலோ, நண்பர்கள் அல்லது குடும்பத்தினரின் ஆதரவு இல்லாததாலோ அவ்வாறு முடிவெடுக்கிறார்கள். சிலர் கர்ப்பம் மற்றும் பிரசவத்துடன் தொடர்புடைய ஆபத்துகளைப் பற்றிக் கவலைப்படாதவர்களாக இருக்கிறார்கள். மறுபுறம், சிலர், தங்களுக்கும் தங்கள் துணைக்கு மட்டுமே பொறுப்பேற்க முடியும் என்று நினைக்கிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், அவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ள மனதளவில் தயாராக இல்லை,” என்கிறார் அவர்.
பலர் ‘குழந்தைகள் பெற்றுக்கொள்ள விரும்பாததற்கு’ மற்றொரு காரணத்தை டாக்டர் ஜெட்லி கூறுகிறார்.
“இன்றைய இளம் தலைமுறையினருக்கு, தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்கள் மிகவும் முக்கியம். அவர்கள் தங்கள் வாழ்க்கையை தங்கள் சொந்த வழியில் வாழ விரும்புகிறார்கள். அவர்கள் சுதந்திரத்தை விரும்புகிறார்கள். ஒரு ஜோடி என்னிடம் வந்தது. அந்தப் பெண் குழந்தை வேண்டுமா இல்லையா என்ற குழப்பத்தில் இருந்தார். அதே நேரத்தில் அவருடைய துணை குழந்தைகள் வேண்டாம் என்ற நிலைப்பாட்டில் இருந்தார்,” என்கிறார் அவர்.
அந்த ஆண், உலகம் முழுவதும் பயணம் செய்ய விரும்புவதாகக் கூறினார். மேலும் குழந்தைகளுடன் வரும் பொறுப்புகள் அவருக்கு கடினமாக இருக்கும் என்றும் அவர் கூறியதாகச் சொல்கிறார் ஜெட்லி.
இன்னொரு குழந்தையை உலகுக்குக் கொண்டு வரத் தகுதியான சூழல் இல்லை என்றும் அந்தத் தம்பதிகளுக்குத் தோன்றியது.
மற்றவர்களும் இப்படித்தான் நினைக்கிறார்கள். 2021-ம் ஆண்டு பியூ ரிசர்ச் நடத்திய ஆய்வில், குழந்தை இல்லாதவர்களில் 9% பேர், உலகின் சூழ்நிலை காரணமாக எதிர்காலத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பவில்லை என்று கூறியுள்ளனர். 5% சதவீதம் பேர் இதற்குக் காரணமாகக் காலநிலை மாற்றத்தை சொன்னார்கள்.
குழந்தை இல்லாமல் இருக்க முடிவு செய்தால், அது அவர்களின் நட்பை உடைத்துவிடும் அல்லது பெற்றோர்கள் ஏமாற்றமடையக்கூடும் என்று பலர் பயப்படுகிறார்கள்
27 வயதான மார்செலா முனோஸ் டிக்டாக், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் ஆகியவற்றில் ‘குழந்தைகள் பெற்றுக்கொள்ள விரும்பாத மில்லினியல்’ என்ற பெயரில் உலா வருகிறார். அவர் ஏன் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பவில்லை என்பதை தனது சமூக வலைதளப் பக்கங்களில் விளக்குகிறார்.
அவர் கூறுகிறார், “குழந்தை பெற்றுக் கொள்பவர்களிடம் நான் பாகுபாடு காட்டுவதில்லை. எனது நண்பர்கள் பலருக்கு குழந்தைகள் உண்டு. ஆனால் பெற்றோர் ஆவதற்கு முன்பு அதைப்பற்றி மக்கள் இப்போது ஆழ்ந்து சிந்திக்கிறார்கள் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்,” என்கிறார் அவர்.
முனோஸ் Tik Tok-இல் வேடிக்கையான பதிவுகளை இடுகிறார். ஆனால் பல தீவிரமான விஷயங்களையும் அங்கு விவாதிக்கிறார். உதாரணமாக, அவரைப் பின்தொடர்பவர்களில் சிலர் குழந்தை பெற்றுக்கொள்ள் விரும்பவில்லை. ஆனால் அவர்கள் குழந்தை இல்லாமல் இருக்க முடிவு செய்தால், அது அவர்களின் நட்பை உடைத்துவிடும் அல்லது பெற்றோர்கள் ஏமாற்றமடையக் கூடும் என்று பயப்படுகிறார்கள்.
நிஷாந்துக்கும் ஸ்வேதாவுக்கும் அப்படித்தான் நடந்தது. குழந்தை பெற்றுக்கொள்ளாதது சமூகக் கட்டுப்பாடுகளை உடைக்கும் முடிவாகும். ஆனால் இன்னும் அவர்கள் தங்கள் உண்மையான அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பவில்லை.
இதற்கான காரணத்தை விளக்கும் நிஷாந்த், “எங்கள் முடிவில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். ஆனால் எங்கள் பெற்றோரை காயப்படுத்த விரும்பவில்லை. வீட்டில் இதைப் பற்றி ஒருமுறை பேசியதால், பல நாட்கள் பதற்றம் நீடித்தது. அதனால்தான் ‘இப்போதைக்கு குழந்தை பெற விரும்பவில்லை. ஆனால் அதுபற்றிப் பிறகு யோசிப்போம் என்றோம்,” என்கிறார்.
15 லட்சத்திற்கும் அதிகமானப் பயனர்களைக் கொண்ட சமூக ஊடகத் தளமான Reddit-ல் ‘Global Child-Free’ என்ற குழு உள்ளது.
இதில் குழந்தை பெற விருப்பம் இல்லாதவர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். பெற்றோர்களிடமிருந்தும் ஏன் அந்நியர்களிடமிருந்தும் கூட கிண்டல் பேச்சுகளைக் கேட்க நேரிடுகிறது என்று சிலர் கூறுகிறார்கள். ‘நீங்கள் உங்கள் தொழிலில் அதிக கவனம் செலுத்துகிறீர்கள். நாளடைவில் உங்கள் கருத்தை மாற்றிக் கொள்வீர்கள்,’ என்றும் அவர்களிடம் கூறப்படுகிறது.
குழந்தை பெற விரும்பாததைப் பற்றிப் பதிவிடும் முனோஸ் அதற்காக ஆன்லைன் வெறுப்பையும் சந்தித்தார். சிலர் அவரை ‘குழந்தை வெறுப்பாளர்’, ‘சுயநலவாதி’, ‘நீங்கள் வருத்தப்படுவீர்கள்’, ‘தனியாக இறப்பீர்கள்’, ‘வயதான காலத்தில் உங்களை யார் கவனித்துக் கொள்வார்கள்?’, ‘உண்மையான அன்பை உங்களால் அனுபவிக்க முடியாது’, போன்றவற்றைச் சொல்கிறார்கள். மதம் சார்ந்தும் விமர்சிக்கப்படுகிறார்கள்.
பேராசிரியர் எலிசபெத் ஹிண்ட்ஸ் கூறுகையில், குழந்தை பெற விரும்பாதவர்கள் சமூகத்தின் மற்ற பகுதிகளிலிருந்து, குறிப்பாக பெண்களிடமிருந்து கடுமையான எதிர்வினைகளையும் விமர்சனங்களையும் எதிர்கொள்கின்றனர், என்கிறார்.
அவர் கூறுகிறார், “குழந்தை பெறுவதற்கான முடிவு பெரும்பாலும் பெண்கள் மீதே திணிக்கப்படுகிறது. தாய்மையும் பெண்மையும் பின்னிப் பிணைந்துள்ளது. இத்தகையச் சூழ்நிலையில், வாழ்க்கையின் மரபுகளைப் பின்பற்ற வேண்டிய அழுத்தம் பெண்களுக்கு அதிகமாக உள்ளது. பாலின சமத்துவத்திற்காக நிறைய வேலைகள் செய்யப்பட்ட நாடுகளில் கூட இதுவே நிலை,” என்கிறார்.
ஆனால் வரும் காலங்களில் குழந்தை பெற விரும்பாதது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட விஷயமாகிவிடும் என நிபுணர்கள் நம்புகிறார்கள். அப்படி முடிவெடுத்தவர்களை அதிகம் சந்திக்கும் போது, அவர்கள் ‘சுயநலவாதிகள்’, ‘தங்களைப் பற்றி மட்டுமே சிந்திப்பவர்கள்’ என்ற பிம்பங்கள் உடையும் என்கின்றனர்.
இருப்பினும், இந்த விஷயத்தில் எங்கு, எவ்வளவு மாற்றம் நிகழும் என்பது அந்த இடத்தின் ஊடகங்கள் மற்றும் அங்குள்ள அரசியல் மற்றும் மதச் சூழலைப் பொறுத்தது.