;
Athirady Tamil News

அமெரிக்க எஃப்.பி.ஐ.-யின் உயர்ந்த பதவியில் இந்திய-அமெரிக்க பெண்!!

0

ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (FBI) என்பது அமெரிக்காவின் உள்நாட்டு உளவு மற்றும் பாதுகாப்புக்கான அமைப்பாகும்.

அமெரிக்காவின் எஃப்.பி.ஐ.யில் பணியாற்றும் பெண்களின் விகிதம் சுமார் 24 சதவீதம் என்ற அளவிலேயே உள்ளது. அந்த அமைப்பின் ஸால்ட் லேக் சிட்டி அலுவலகத்தின் சிறப்பு அதிகாரியாக இந்திய-அமெரிக்க பெண்மணியான ஷோஹினி சின்ஹா என்பவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். அமெரிக்காவின் இண்டியானா மாநிலத்தில் உள்ள பர்டியூ பல்கலைக்கழகத்தில் (Purdue University) உளவியலில் இளங்கலை பட்டம் மற்றும் மனநல ஆலோசனையில் முதுகலை பட்டம் பெற்ற ஷோஹினி, எஃப்.பி.ஐ-யில் பணிபுரிவதற்கு முன்பு, ஒரு சிகிச்சையாளராகவும், பின்னர் இண்டியானாவின் லஃபாயெட் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நிர்வாகியாகவும் பணியாற்றினார். ஷோஹினி சின்ஹா 2001-ல் எஃப்.பி.ஐ.-யில் சிறப்பு அதிகாரியாக சேர்ந்தார். முதலில் மில்வாக்கி கள அலுவலகத்தில் பயங்கரவாத எதிர்ப்பு விசாரணைகளில் பணியாற்றினார். குவாண்டனாமோ விரிகுடா கடற்படைத்தளம், லண்டனில் உள்ள எஃப்.பி.ஐ.யின் சட்ட அலுவலகம் மற்றும் பாக்தாத் செயல்பாட்டு மையம் ஆகியவற்றிலும் தற்காலிக பணிகளில் பணியாற்றினார். 2009-ல் கண்காணிப்பு சிறப்பு அதிகாரியாக பதவி உயர்வு பெற்று வாஷிங்டனில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

கனடாவை தளமாகக் கொண்ட விசாரணைகள் அமைப்பின் திட்ட மேலாளராக பணியாற்றினர். 2012-ல் கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் சட்ட உதவியாளர் பதவி உயர்வு பெற்று ராயல் கனடியன் மவுண்டட் போலீஸ் மற்றும் கனடாவின் பாதுகாப்பு புலனாய்வு சேவையுடன் இணைந்து பயங்கரவாத எதிர்ப்பு விஷயங்களில் பணியாற்றினார். 2015-ல் அவர் டெட்ராய்ட் கள அலுவலகத்தில் கள மேற்பார்வையாளராக பதவி உயர்வு பெற்று சர்வதேச பயங்கரவாத விஷயங்களை விசாரிக்கும் குழுக்களை வழிநடத்தினார். 2020-ம் ஆண்டின் தொடக்கத்தில், தேசிய பாதுகாப்பு மற்றும் கிரிமினல் சைபர் ஊடுருவல் விஷயங்களை துப்புதுலக்கும் சைபர் ஊடுருவல் படைக்கு மாற்றப்பட்டார். பிறகு போர்ட்லேண்ட் கள அலுவலகத்தில் தேசிய பாதுகாப்பு விஷயங்களுக்கும், பின்னர் குற்றவியல் விஷயங்களுக்கும் உதவி சிறப்பு அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார். 2021-ல், எஃப்.பி.ஐ. இயக்குநரின் நிர்வாக சிறப்பு உதவியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தற்போதைய பதவி உயர்வு வரும்வரை, வாஷிங்டனில் உள்ள எஃப்.பி.ஐ.யின் தலைமையகத்தில், அந்த பதவியிலேயே தொடர்ந்தார். அமெரிக்காவில் இந்திய பெண்கள் பெரும்பாலும் மென்பொருள் துறையிலும், பன்னாட்டு நிறுவனங்களிலும் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் ஒரு இந்திய-அமெரிக்க பெண் எஃப்.பி.ஐ.யில் பல வருடங்கள் சிறப்பாக பணியாற்றி உயர்வான பதவிகளை அடைந்திருப்பதை உலகெங்கிலும் உள்ள இந்தியர்கள் பெருமையாக பார்க்கிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.