ஜம்மு காஷ்மீரில் காணாமல் போன பெண்கள் குறித்து கேள்வி எழுப்பி ஆம் ஆத்மி ஆர்ப்பாட்டம்!!
ஜம்மு காஷ்மீரில் இருந்து 9,000க்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல் போனதை கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேசிய குற்ற ஆவணக் காப்பகம், நாட்டில் காணாமல் போன பெண்கள் குறித்த பட்டியல் வெளியிட்டது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்த தரவு சமீபத்தில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, 2019 முதல் 2021 வரையிலான மூன்று ஆண்டுகளில் ஜம்மு-காஷ்மீரில் 8,617 பெண்களும், 1,148 சிறுமிகளும் காணாமல் போயுள்ளனர் என்று தெரிவித்திருந்தது. இதை கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் ஸ்ரீநகரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இங்குள்ள பிரஸ் காலனியில் ஏராளமான ஆம் ஆத்மி கட்சியினர் “ஏன்? யார்? எங்கே? 9765 காணவில்லை” என்ற கேள்விகளை தாங்கிய பதாகைகளை ஏந்தியபடி போராட்டம் நடத்தினர்.
ஜம்மு காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹாவிடம், காணாமல் போன பெண்கள் குறித்து பதில் அளிக்குமாறு ஆம் ஆத்மி ஊடக குழு தலைவர் நவாப் கேட்டுக் கொண்டார். மேலும் அவர்,” ஏன் இது நடந்தது, உங்கள் அமைப்பில் உள்ள குறைபாடு என்ன என்று நாங்கள் கேட்கிறோம்? இந்த 9,765 பேர் யார், அவர்கள் காணாமல் போனதற்குக் என்ன காரணம்? காணாமல் போன பெண்கள் எங்கே? காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க நீங்கள் ஏதாவது செய்கிறீர்களா?” என்று கேட்டார். யூனியன் பிரதேசத்தில் நடப்பதாகக் கூறப்படும் ‘மனித கடத்தல்’ பற்றியும் நவாப் சின்ஹாவிடம் கேட்டார். ஜம்மு காஷ்மீர் பெண்களின் கவுரவம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் துறை ஏதேனும் உள்ளதா? இது அரசியல் பிரச்சினை அல்ல, பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாடு பற்றியது என்று கூறினார்.