நீதிமன்ற உத்தரவின்படி விவசாயிகளுக்கான காசோலையை ஒப்படைத்தது என்எல்சி நிறுவனம்!!
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனத்துக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் என்எல்சி நிர்வாகம் விரிவாக்கப் பணிகளை தொடங்கி உள்ளது. பரவனாறு நிரந்தரக் கால்வாய் அமைக்கும் பணியின்போது சிறிய அளவிலான பாசன நிலம் பாதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க என்எல்சி முன் வந்தது. என்எல்சிக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் சேதப்படுத்தப்பட்ட பயிருக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு நிர்ணயம் செய்யப்பட்டு அதை வழங்கவும் என்எல்சி ஒப்புதல் அளித்தது. பாதிக்கப்பட்ட விவசாயி தொடரந்த வழக்கு விசாரணையின்போது, “இந்த இழப்பீடு தொகையை வரும் ஆகஸ்டு மாதம் 6ம் தேதிக்குள் வழங்கும்படியும், செப்டம்பர் மாதம் 15ம் தேதிக்கு பிறகு நில உரிமையாளர்கள் மேற்கொண்டு விவசாய பணிகளை மேற்கொள்ள கூடாது” என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி விவசாயிகளுக்கான காசோலையை என்எல்சி நிறுவனம் ஒப்படைத்துள்ளது. இந்த இழப்பீடு தொகைக்கான காசோலையை, சிறப்பு துணை ஆட்சியர் நிலம் கையகப்படுத்துதல் பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும், நாளை முதல் விவசாயிகள் இந்த தொகையை பெற்றுக் கொள்ளலாம் என என்எல்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. என்எல்சி நிறுவனம் ஏற்கனவே ஒரு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் என்ற அளவில் காசோலையை மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கியிருந்தது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஏக்கருக்கு கூடுதலாக ரூ.10 ஆயிரத்திற்கான சாகோலையை வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.