வாயை மூடுங்கள், இல்லாவிட்டால் உங்கள் வீட்டிற்கு அமலாக்கத்துறை வரும் – எதிர்க்கட்சி எம்.பி.க்களை மிரட்டிய பாஜக மந்திரி!!
டெல்லி அவசர சட்டத்திற்கு மாற்றாக கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்த மசோதா (டெல்லி சேவைகள் மசோதா) சமீபத்தில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. 4 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த விவாதத்திற்குப் பிறகு உள்துறை மந்திரி அமித் ஷா பதிலுரை வழங்கினார். அதன்பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு நன்றி தெரிவித்து பா.ஜ.க. எம்.பி.க்கள் பேசினர். டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்குவது குறித்து பா.ஜ.க. பேசிவந்த நிலையில் அதிகாரத்தைக் குறைக்கும் வகையில் உள்ள இந்த சட்ட மசோதாவுக்கு ஆம் ஆத்மி கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கலாச்சாரத்துறை இணை மந்திரி மீனாட்சி லேகி பேசிக் கொண்டிருக்கும்போது, ஆம் ஆத்மி கட்சியினர் கூச்சலிட்டனர். இதனால் கோபமடைந்த அவர், வாயை மூடிக்கொண்டு அமைதியாக உட்காருங்கள், இல்லையெனில் உங்கள் வீட்டிற்கு அமலாக்கத் துறை வரும் என எச்சரித்தார். பாராளுமன்றத்தில் எம்.பி.க்களை மிரட்டும் அவரது இந்தப் பேச்சு அடங்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.