காவிந்த மற்றும் முஜிபுர் மீது புகார்!!
பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோருக்கு எதிராக மருதானை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபைக்குள் சட்டவிரோதமாக நுழைந்து அதன் அதிகாரிகளை அச்சுறுத்தியதாக இந்த முறைப்பாடு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான முறைப்பாடு, குறித்த அதிகார சபையின் சார்பில் ஆஜரான சட்டத்தரணியால் நேற்று (03) பிற்பகல் முன்வைக்கப்படதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட சிலர் தேசிய போதைப்பொருள் ஒழுங்குமுறை அதிகாரசபைக்குள் சட்டவிரோதமாக நுழைந்து அனுமதியின்றி தரவுகளைப் பெற்றுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சபாநாயகரின் முன்னறிவிப்பு இன்றி பாராளுமன்ற உறுப்பினர்கள் நிறுவனங்களுக்குள் நுழைந்து தரவுகளை பெற்றுக்கொள்ள முடியாது எனவும் இந்த சட்டவிரோத நடைமுறைக்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் முறைப்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை, சுகாதார அமைப்பில் இடம்பெற்றுள்ள பல்வேறு மோசடிகள் மற்றும் ஊழல்களை வெளிப்படுத்தியமையினால் தாம் உட்பட ஐக்கிய மக்கள் சக்தியின் சுகாதார குழு உறுப்பினர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த அச்சுறுத்தல்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார்.