;
Athirady Tamil News

பணி நீக்கம் செய்த நிறுவனம், அமெரிக்க ராணுவ செயலர் மீது வழக்கு தொடர்ந்த இந்தியர்!!

0

அமெரிக்க ராணுவத்திற்காக ஏவுகணை சம்பந்தமான ஒப்பந்ததாரராக செயல்படும் நிறுவனம், அமெரிக்காவில் உள்ள பார்ஸன்ஸ் கார்ப்பரேஷன்.

அந்நிறுவனம் அமெரிக்காவின் ராணுவ தளவாடங்கள் சம்பந்தமான வேலைகளை செய்து வருகிறது. அங்கு பணியாளர்களுக்கு பாதுகாப்பு கட்டுப்பாடுகள் அதிகம். அலுவலகத்தில் முக்கியமான தகவல் பரிமாற்றங்கள் நடைபெறும் போது அலைபேசியில் பேசுவதும், பின்னணியில் நிறுவனத்தின் தகவல்கள் தெரியும் விதமாக வீடியோ காலிங்கில் பேசுவதும் அங்கு தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தில் மூத்த மென்பொருள் பொறியாளராக பல வருடங்களாக பணி புரிந்து வந்தவர் அனில் வார்ஷ்னி (78). நோயுற்றிருந்த இவரது உறவினர் ஒருவர், இறக்கும் தருவாயில் இருந்தார்.

அவரிடம் இருந்து வந்த ஒரு அலைபேசி அழைப்பை தவிர்க்க விரும்பாத அனில், அலுவலகத்திலேயே வீடியோ காலிங் முறையில் தனது தாய் மொழியான இந்தியில் அவருடன் உரையாடினார். இதனை அவருடன் பணி புரியும் மற்றொரு ஊழியர் கவனித்தார். பாதுகாப்பு கட்டுப்பாடுகளை அனில் மீறுவதாக அந்த ஊழியர் அனிலிடம் கூறி, மேலிடத்திலும் புகார் செய்துள்ளார். இதனையடுத்து வார்ஷ்னி, பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அவரது உடைமைகளுடன் உடனே அவர் அலுவலகத்திலிருந்து வெளியேற்றப்பட்டர். தனக்கு நேர்ந்த அவமானத்திற்கு எதிர்வினையாக தன்னை பணியிலிருந்து நீக்கிய நிறுவனத்தின் மீதும், அமெரிக்க ராணுவ செயலர் ஜேம்ஸ் ஆஸ்டின் மீதும் அனில் வார்ஷ்னி வழக்கு தொடர்ந்துள்ளார்.

தன்னை மீண்டும் பணியில் சேர்த்து, தான் முன்பிருந்த பதவிக்கு நிகரான பணியில் அமர்த்த கோரியும், பழைய சலுகைகளை மீண்டும் வழங்க கோரியும் மற்றும் தனது மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை நீக்கவும் அனில் கோரியுள்ளார். இதற்கு அந்நிறுவனம் சம்மதிக்கவில்லையென்றால், அதற்கு ஈடாக ஒரு தொகையை கோரியுள்ளார். இது மட்டுமல்லாது தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ஈடாகவும் ஒரு பெரும் தொகையை நஷ்ட ஈடாகவும் அனில் கோரியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.