கோவா பண்ணையில் இருந்து 2 ‘டெரியர்’ ரக நாய்க்குட்டிகளை வாங்கிய ராகுல்காந்தி!!
வடக்கு கோவாவில் உள்ள மபுசா நகரை சேர்ந்தவர் ஷிவானி பித்ரே. இவர் தனது கணவர் ஸ்டான்லி பிரகன் காவுடன் சேர்ந்து கோவாவில் உள்ள மனோகர் சர்வதேச விமான நிலையம் செல்லும் வழியில் நாய் பண்ணை நடத்தி வருகிறார். இவரிடம் ஜாக் ரஸ்ஸல் டெரியர் ரக நாய்க்குட்டிகள் உள்ளன. இந்த ரக நாய்கள் குட்டையானவை. மிகவும் புத்திசாலித்தனமான அறிவை உடைய இவை மோப்பம் பிடிப்பதில் மற்ற நாய்களை காட்டிலும் திறமையானது. இவை ஹார்டி நாய்களின் சிறப்பு இனமாகும். அவை நுட்பமான பார்வை, நீண்ட ஆயுளுடன் மிகவும் சுறுசுறுப்பானவை. உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியால் சமீபத்தில் பதக்கம் வழங்கப்பட்ட நாய் இனம் இது. ரஷ்யா-உக்ரைன் போரின்போது கண்ணிவெடிகளை திறமையாக இந்த ரக நாய்கள் மோப்பம் பிடித்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, நேற்று முன்தினம் இரவு தனிப்பட்ட பயணமாக கோவா சென்றார். நேற்று காலை 9 மணிக்கு ஷிவானி பித்ரேயின் பண்ணைக்கு சென்ற அவர் 2 ஜாக் ரஸ்ஸல் டெரியர் ரக நாய்க்குட்டிகளை தத்து எடுத்தார். பின்னர் தனது கோவா பயணத்தை முடித்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் டெல்லி வந்த ராகுல் காந்தி, கோவாவில் இருந்து தன்னுடன் ஜாக் ரஸ்ஸல் டெரியர் ரக நாய்க்குட்டியையும் கொண்டு வந்தார். விமானத்தில் ஒரு நேரத்தில் ஒரு நாய்குட்டி மட்டுமே கொண்டு செல்ல அனுமதி என்பதால் மற்றொரு நாய்க்குட்டி கூடிய விரைவில் அவருக்கு அனுப்பப்பட உள்ளது.
இது தொடர்பாக நாய்ப்பண்ணை நடத்தி வரும் ஷிவானிபித்ரே கூறுகையில், நாய்க்குட்டிகளை பற்றி விசாரிக்க ராகுல் காந்தி தனது பிரதிநிதியை அனுப்பினார். அதனை வாங்குவதற்கு முன்னர் தானே நேரில் பார்க்க விரும்பி தனது பண்ணைக்கு வந்தார். அவர் பண்ணையில் இருந்த சிறிது நேரத்தில் பெரும்பாலும் அவர் நாய்க்குட்டிகளுடன் நேரத்தை செலவிட்டார். அவர் எங்களுடன் ஒரு நண்பரைப் போல பேசினார் என்றார். முன்னதாக, ராகுல்காந்தி கோவா எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கோவா காங்கிரஸ் கமிட்டித் தலைவர் அமித் பட்கர் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து பேசினார்.