உலக மதங்களின் கூட்டமைப்பு மாநாட்டில் உரையாற்றுகிறார் ஜைன மத தலைவர் ஆசார்ய லோகேஷ் முனி!!
1893-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் நடைபெற்ற உலக மதங்களின் கூட்டமைப்பின் மாநாட்டில், இந்தியாவிலிருந்து சென்ற சுவாமி விவேகானந்தர் உரையாற்றினார். அப்போது அவர் உரையை தொடங்கும்போது “சகோதரிகளே, சகோதரர்களே” என துவங்கி இந்தியர்கள் இன்றளவும் பெருமை கொள்ளும் விதமாக நீண்ட உரையாற்றினார் என்பது சரித்திர புகழ் வாய்ந்த நிகழ்வாகும். பல தசாப்தங்களுக்கு பிறகு இம்முறை ஜைன மத தலைவர் ஆசார்ய லோகேஷி முனியை இம்மாதம் 14-ம் தேதி நடைபெறவிருக்கும் தொடக்க விழாவிலும் மதங்களுக்கிடையேயான நம்பிக்கைகள் குறித்து அங்குள்ள மிகப்பெரிய அரங்கிலும் பேச உலக மதங்களின் சபை அழைப்பு விடுத்திருக்கிறது.
80 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்ளப்போகும் இந்த மாநாடு 5 நாட்கள் நடைபெற போகிறது. உலக மதத்தலைவர்களின் மிகப்பெரிய ஒரு சங்கமமாக இது பார்க்கப்படுகிறது. அகிம்சா விஸ்வ பாரதி அமைப்பு மற்றும் உலக அமைதி மன்றம் ஆகியவற்றின் தலைவரான ஜைன மத குரு ஆசார்ய லோகேஷ் முனி இத்தகவலை உறுதி செய்தார். பருவநிலை மாற்றம், உலக அமைதி குறித்தும் அவர் உரையாற்றுவார். தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் உள்ள அகில இந்திய விவேகானந்தா கேந்திரத்தின் துணைத்தலைவர் நிவேதிதா பிடே உட்பட பல இந்திய மத தலைவர்களுக்கும் அழைப்பு விடப்பட்டிருக்கிறது. நன்னடத்தை, ஒழுக்கமான வாழ்க்கை மற்றும் உலக அமைதிக்காக இந்தியா முழுவதும் 20 ஆயிரம் கிலோ மீட்டர் நடைபயணமாகவே சென்று பல பிரசாரங்களை செய்தவர் ஆசார்ய லோகேஷ் முனி ஜி என்பது குறிப்பிடத்தக்கது.