;
Athirady Tamil News

ஆந்திராவில் திசைமாறிய திருடர்கள்- கடை, தோட்டத்தில் 450 கிலோ தக்காளி கொள்ளை!!

0

தக்காளியின் விலை தங்கத்தின் விலையை போல் நாள்தோறும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தக்காளியின் விலை உச்சத்தை அடைந்ததால் இல்லத்தரசிகள் தக்காளியை பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். இதேபோல் தக்காளியை பயிரிட்டுள்ள விவசாயிகள் பலர் ஒரே மாதத்தில் லட்சாதிபதிகளாகவும்,கோடீஸ்வரர்களாகவும் மாறி உள்ளனர். குறிப்பாக ஆந்திர மாநிலம் சித்தூர் மற்றும் அன்னமய்யா மாவட்டத்தில் விவசாயிகள் தக்காளி பயிரிட்டு அறுவடை செய்து சந்தைகளில் விற்று லாபம் ஈட்டி வருகின்றனர். தங்கம், வெள்ளி திருடிய திருட்டு கும்பல் தக்காளி பக்கம் தங்களது கவனத்தை திருப்பி உள்ளனர். சித்தூர் மற்றும் அன்னமய்யா மாவட்டத்தில் தக்காளி விவசாயிகள் மற்றும் வியாபாரிகளை குறிவைத்து பணம் பறிக்கும் முயற்சியில் மர்ம கும்பல் ஈடுபட்டு வருகிறது. அன்னமய்யா மாவட்டம் நெக்குண்டியை சேர்ந்த விவசாயி ஒருவர் தனது தோட்டத்தில் தக்காளி பயிரிட்டுள்ளார்.

நேற்று மர்ம நபர்கள் இரவோடு இரவாக தோட்டத்தில் புகுந்து 450 கிலோ தக்காளி திருடி சென்றுவிட்டனர். இதேபோல் மதனப்பள்ளி மார்க்கெட் பகுதியில் கடையில் கதவை உடைத்து திருட்டு கும்பல் புகுந்தனர். அங்கிருந்த 50 கிலோ தக்காளியை திருடி சென்றனர். சித்தூர் மாவட்டம் புங்கனூர் அடுத்த நக்க பண்டாவை சேர்ந்தவர் லோகராஜ். இவர் நேற்று முன்தினம் தனது நிலத்தில் இருந்த தக்காளியை அறுவடை செய்து உள்ளூர் சந்தையில் விற்பனை செய்தார். பின்னர் தக்காளி விற்பனையில் கிடைத்த பணத்தை எடுத்துக்கொண்டு சொந்த ஊருக்கு பைக்கில் சென்று கொண்டு இருந்தார். கஞ்சா போதையில் இருட்டான பகுதியில் மறைந்து இருந்த மர்ம நபர்கள் லோகராஜை வழிமறித்தனர். பீர் பாட்டிலால் லோகராஜ் மீது சரமாரியாக தாக்கினார். பின்னர் அவரிடம் இருந்த ரூ.4.50 லட்சம் பணத்தை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்து லோகராஜ் புங்கனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். சித்தூர் மற்றும் அன்னமய மாவட்டத்தில் நடைபெறும் தொடர் சம்பவங்களால் தக்காளி விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் அச்சம் அடைந்து உள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.