இரண்டு மணி நேரத்திற்கு மட்டுமே தொலைபேசி பயன்படுத்தலாம் – சீன அரசின் அதிரடி நடவடிக்கை !!
சீனாவில் சிறுவர் சிறுமியர்கள் தொலைபேசி பயன்படுத்துவது தொடர்பிலான புதிய விதிமுறை ஒன்றினை அறிவித்துள்ளது.
இதன்படி, சீனாவில் 16 – 18 வயது வரையிலான சிறுவர் – சிறுமியர் நாள் ஒன்றுக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே தொலைபேசிகளை பயன்படுத்த கட்டுப்பாடு விதிக்கும் வரைவு வழிகாட்டுதல்களை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது.
உலகம் முழுதும் 18 வயதுக்கு குறைவான குழந்தைகள் தொலைபேசிகளை பயன்படுத்துவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதில் கிடைக்கும் ஆன்லைன் விளையாட்டுக்கள் ஷார்ட் வீடியோ எனப்படும் குறுங்காணொளிகள் குழந்தைகளை அடிமையாக்கி வருகின்றன.
இது இளைய தலைமுறையினரின் உடல் மற்றும் மனரீதியிலான ஆற்றலை பாதிப்பதாக வைத்தியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையை கட்டுக்குள் கொண்டு வர நினைத்த சீன அரசு சில கடுமையான கட்டுப்பாடுகளை கடந்த 2019ல் அமல்படுத்தியது.
இதன்படி, 18 வயதுக்கு குறைவான குழந்தைகள் நாள் ஒன்றுக்கு 90 நிமிடங்கள் மட்டுமே ஆன்லைன் விளையாட்டுக்களை விளையாட அனுமதிக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை விதித்தது.
இதை 2021ல் 60 நிமிடங்களாக குறைத்து கட்டுப்பாட்டை தீவிரப்படுத்தியது. ஆனாலும் எதிர்பார்த்த பலன் கிடைக்காததை உணர்ந்த சீன அரசு புதிய கட்டுப்பாடுகளுக்கான வரைவு வழிகாட்டுதல்களை தற்போது வெளியிட்டுள்ளது.
இது குறித்து சீன இணையவெளி நிர்வாகம் நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள வரைவு வழிகாட்டுதல்களின் விபரத்தின் படி,
“சீனாவில் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் இரவு 10:00 மணி முதல் காலை 6:00 மணி வரை ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது.
அதில் 16 – 18 வயது வரையிலான சிறார்கள் நாள் ஒன்றுக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே தொலைபேசிகளில் இணையதளங்களை பயன்படுத்த அனுதிக்க வேண்டும்.
மேலும் 8 – 15 வயது வரையிலான சிறார்கள் நாள் ஒன்றுக்கு ஒரு மணிநேரமும் 8 வயதுக்கு குறைவான குழந்தைகள் நாள் ஒன்றுக்கு40 நிமிடங்கள் மட்டுமே இணையதளத்தை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.
குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் இணையதளங்கள் மற்றும் செயலிகளுக்கு இந்த கட்டுப்பாட்டில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
இந்த வரைவு வழிகாட்டுதல்கள் மீது செப்டம்பர் 2 ஆம் திகதி வரை பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.
அதன் பின் இந்த புதிய விதிகள் அமுலுக்கு வரும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.