யுக்ரேன் ராணுவத்தின் துணிச்சலான முன்கள வீராங்கனைகளின் குரல்கள்!!
ரஷ்யாவிற்கு எதிரான போரில் பங்கேற்று சண்டையிட யுக்ரேனிய பெண்கள் அதிக எண்ணிக்கையில் பதிவு செய்து வருகின்றனர். இப்படி பதிவு செய்து களத்தில் சண்டையிடும் 5,000 முன்னணி பெண் வீராங்கனைகளில் மூவருடன் பிபிசி பேசியது. அவர்கள் தங்கள் சொந்த ராணுவத்தில் பாலின சமத்துவம் உள்ளிட்ட கோரிக்கைகளை எழுப்பிப் போராடும் நிலையும் காணப்படுகிறது.
மெலிந்த, நீல வண்ண கண்களைக் கொண்ட, அழகிய பெண் ஒருவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்துகொண்டிருக்கிறார். ரஷ்ய ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளின்படி அவர் ஏற்கெனவே இறந்துவிட்டார். ஆனால் அவர் உயிர் பிழைத்து தற்போது அவர் உடற்பயிற்சி மேற்கொள்வது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ஆண்ட்ரியானா அரேக்தா என்ற இந்த வீராங்கனை யுக்ரேனிய ஆயுதப்படையில் ஒரு சிறப்பு பிரிவு சார்ஜென்ட் ஆவார். மீண்டும் முன்வரிசையில் நின்று போர்புரியத் தன்னைத் தயார்படுத்திவருகிறார்.
டிசம்பரில் கெர்சன் பகுதியில் கண்ணிவெடியால் காயம் அடைந்த ஆண்ட்ரியானாவை யுக்ரேனில் உள்ள ஒரு மறுவாழ்வு மையத்தில் – அவரது பாதுகாப்பு கருதி பெயர் சொல்ல முடியாத இடத்தில் – சந்தித்து பிபிசி உரையாற்றியது.
ரஷ்யாவில் வெளியாகும் ஏராளமான ஊடகங்கள் அவரது “மரணத்தைக்” கொண்டாடிவருகின்றன.
“நான் கால்கள் மற்றும் கைகளை இழந்து ரஷ்ய ராணுவத்தால் கொல்லப்பட்டதாக அந்த ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன,” என்கிறார் ஆண்ட்ரியானா. “அவர்கள் ஒரு விஷயத்தைப் பிரசாரம் செய்வதில் மிகவும் தேர்ச்சி பெற்றவர்களாக உள்ளனர்.”
ஆண்ட்ரியானா உக்ரைனில் உள்ள ஒரு மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றுவருகிறார். மேலும், மீண்டும் ராணுவத்தின் முன்வரிசையில் இருந்து போரிடத் தேவையான பயிற்சியையும் பெற்றுவருகிறார்.
அந்தச் செய்திகளில் அவரைப் பற்றிக் குறிப்பிடுகையில் “கொலைகாரி” என்றும், “நாசிப்படையைச் சேர்ந்தவர் அழிக்கப்பட்டார்” என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
எந்த ஆதாரமும் இல்லாமல் ‘அவர் கொடூரமானவர். பிறரின் துன்பங்களில் இன்பம் காண்பவர்’ என்றெல்லாம் செய்திகள் வெளியாகியிருந்தன. யுக்ரேனிய இராணுவம் கெர்சனை விடுவித்தபின் இது போன்ற செய்திகள் வெளியாகத் தொடங்கின.
“இது எனக்கு மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. நான் இங்கே உயிருடன் இருக்கிறேன். இனிவரும் நாட்களிலும் என் நாட்டை நான் பாதுகாப்பேன்,” என்று அவர் கூறுகிறார்.
18 மாதங்களுக்கு முன் ரஷ்யாவின் படையெடுத்தது. அதன் பின் தற்போது யுக்ரேன் நாட்டு ராணுவப் படைகளில் 60,000 பெண்கள் பணியாற்றி வருகின்றனர். 42,000 க்கும் அதிகமானோர் இராணுவ நிலைகளில் உள்ளனர் – களத்தில் 5,000 பெண் வீராங்கனைகள் போரிட்டு வருவதாக யுக்ரேன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
யுக்ரேன் சட்டத்தின் கீழ் எந்த பெண்ணையும் அவரது விருப்பத்திற்கு மாறாக கட்டாயப்படுத்தி பணியில் ஈடுபடுத்த முடியாது என்றும் அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணுவத்தில் சில குறிப்பிட்ட போர் நடவடிக்கைகள் பெண்களால் சிறப்பாக மேற்கொள்ளப்படுகின்றன என்றும் சிலர் நம்புகிறார்கள்.
“நான் என் தளபதியிடம் வந்து, ‘எனக்கு என்ன பணி ஒதுக்கப்பட்டுள்ளது ?’ என்று கேட்டேன். ‘நீங்கள் ஒரு துப்பாக்கி சுடும் வீராங்கனையாகப் பணியாற்றவேண்டும்,’ என்று அவர் கூறினார்,” என்று எவ்ஜெனியா எமரால்டு என்ற ராணுவ பெண் வீராங்கனை நினைவு கூர்ந்தார் – அவர் சமீப காலம் வரை யுக்ரேன் போர்க்களத்திலிருந்து போரிட்டு வந்தார்.
ஆண்ட்ரியானா அரேக்தா இறந்துவிட்டதாக ஏராளமான ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ராணுவத்தில் இணைந்து துப்பாக்கி சுடும் வீராங்கனைகளாகப் பணியாற்றுபவர்கள் அதிக அளவில் அனைவரையும் கவர்ந்துவருகின்றனர் என்று அவர் கூறுகிறார். அந்த அளவுக்கு அவர்களுக்கு நற்பெயர் கிடைக்க நடைமுறைக் காரணம் ஒன்று உள்ளது.
“ஒரு ஆண் துப்பாக்கியை எடுத்து மற்றொருவரைச் சுடலாமா வேண்டாமா என யோசிக்கிறார் என்றால், அதே இடத்தில் ஒரு பெண் இருந்தால் அவர் அந்தச் செயலைச் செய்யவே மாட்டார்,” என்கிறார் அவர்.
மூன்று மாத குழந்தையை தொட்டிலில் ஆட்டிக்கொண்டே பேசும் எவ்ஜெனியா, “அதனால்தான், ஆண்களைப் போல் இல்லாமல், பெண்கள் ஒரு உயிரை உருவாக்குபவர்களாக உள்ளனர்,” என்கிறார்.
31 வயதான அவர், ரஷ்யா கிரைமியாவை ஆக்கிரமித்த பின்னர் இராணுவப் பயிற்சி பெற்றவர். ஆனால் 2022 இல் மட்டுமே அவர் இராணுவத்தில் சேர்ந்தார். முழு அளவிலான தற்போதைய போருக்கு முன்பு ஒரு நகைக் கடையின் உரிமையாளராக இருந்தார்.
யுக்ரேனிய பெண் வீராங்கனைகளை பெருமளவில் அடையாளப்படுத்தும் விதமாக அவர் வலுவான சமூக ஊடகச் செயற்பாட்டாளராக இருந்து வந்துள்ளார். அவர் ஒரு தொழில் முனைவோராக இருந்த போது, தொழில் வாழ்க்கையின் அனுபவங்கள் மூலம் சமூக ஊடகங்களில் பெரும் செல்வாக்கு பெற்றவராக இருந்தார்.
தனது மூன்று மாத குழந்தையுடன் புகைப்படத்தில் தோன்றும் எவ்ஜெனியா எமரால்டு, போருக்கு முன்பு நகை வியாபாரம் செய்தார்.
ஆண்ட்ரியானாவைப் போலவே, எவ்ஜெனியாவும் ரஷ்ய ஊடகங்களால் கொடூரமாக விமர்சிக்கப்பட்டவராக இருக்கிறார். அவரை “தண்டனை அளிப்பவர், நாசி” என்று ரஷ்ய ஊடகங்கள் பரவலாகக் குறிப்பிடுகின்றன. துப்பாக்கி சுடும் வீராங்கனையாக ஒரு பெண் முன்வரிசையில் நின்று போர்புரிவதை நூற்றுக்கணக்கான செய்திகளை ரஷ்ய ஊடகங்கள் வெளியிடுவது மட்டுமல்லாமல், அவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றியும் விமர்சனங்களை முன்வைத்துள்ளன.
ராணுவத்தில் துப்பாக்கி சுடும் வீராங்கனையாகப் பணிபுரிவது மிகவும் கொடூரமானது – உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பயங்கர கொடூரமானது என எவ்ஜெனியா கூறுகிறார்.
“ஏனென்றால் அங்கே என்ன நடக்கிறது என்பதை உங்களால் நேரடியாகப் பார்க்க முடியும். இலக்கை நீங்கள் தாக்குவதை நீங்கள் பார்க்கலாம். உங்களால் தாக்கப்படும் ஒருவரை நீங்கள் பார்க்கும் போது நீங்கள் நரகத்தில் இருப்பதைப் போன்ற உணர்ச்சிகளை அளிக்கும்.”
எவ்ஜெனியா மட்டுமல்லாமல், நாங்கள் சந்தித்துப் பேசிய மற்ற முன் வரிசை வீராங்கனைகளும் அவர்கள் தாக்கிய உயிர்களின் எண்ணிக்கையை நினைவுபடுத்த முடியாது. ஆனால் எவ்ஜெனியா தான் யாரையாவது கொல்ல வேண்டியிருக்கும் என்பதை உணர்ந்தபோது அவருக்கு ஏற்பட்ட மோசமான அனுபவங்களை நினைவு கூர்ந்தார்.
“குறைந்தது 30 வினாடிகள் நான் நடுங்கத் தொடங்குவேன். என் முழு உடலும் நடுங்கும். என்னால் அதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இப்போது திரும்ப மீட்கமுடியாத ஒரு செயலைச் செய்யப்போகிறேன் என்ற உணர்வு என்னுள் மேலோங்கும்,” என்கிறார் எவ்ஜெனியா.
“ஆனால் நாங்கள் ஒரு போதும் அவர்கள் மீது போர் தொடுக்கவில்லை. அவர்கள் தான் எங்கள் மீது போரைத் திணித்தார்கள்.”
எவ்ஜெனியா எமரால்டு, துப்பாக்கி சுடும் வீராங்கனையாகப் பணிபுரிவது குறிப்பாக கொடூரமான போர்முறை என்று கூறுகிறார்
யுக்ரேனிய இராணுவத்தில் பெண்களின் சதவீதம் 2014 இல், முதன்முதலாக ரஷ்யா படையெடுத்த பின் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2020 இல் 15% ஐ எட்டியது.
ஆனால் பல பெண் துருப்புக்கள் ரஷ்யாவிற்கு எதிரான தாக்குதல்களின் போது பாலியல் சமத்துவமற்ற மனப்பான்மையால் பாதிக்கப்பட்டதாகவும், அப்போது தங்கள் சொந்தப் படைகளுக்கு உள்ளேயே போரிடும் நிலை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.
போர்க்களத்தில் முன் வரிசையில் இருந்து துப்பாக்கி சுடும் வீராங்கனையாகப் பணியாற்றிய போது, தனது அதிகாரத்தையும் நம்பிக்கையையும் நிலைநாட்டுவதற்கு முன்பாகவே இதை எதிர்கொண்டதாக எவ்ஜெனியா கூறுகிறார்.
“நான் சிறப்புப் படையில் சேர்ந்தபோது, ஒரு ஆண் வீரர் என்னிடம் வந்து, ‘நீ இங்கே என்ன செய்கிறாய்? போய் ஒரு கப் சூப் சமைத்து அதை எடுத்துக்கொண்டு வா’ என்றார். அந்த நேரத்தில் நான் மிகவும் புண்பட்டதாக உணர்ந்தேன். ‘நீங்கள் என்னை கேலி செய்கிறீர்களா? நான் சமையலறையிலும் இருக்க முடியும். அதே நேரம், என்னால் உங்களைத் தாண்டி போரில் சாதிக்கவும் முடியும்’ என்று சொன்னேன்.”
யுக்ரேனிய பெண் வீராங்கனைகளுக்கு உதவும் ‘ஆர்ம் வுமன் நவ்’ என்ற அமைப்பைச் சேர்ந்த மற்றொரு எவ்ஜெனியா (எவ்ஜெனியா வெலைகா) பேசும் போது, “பெண்கள் தங்கள் கணவர்களைக் கண்டுபிடிக்கவே ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றுவதாக பொதுமக்களிடம் ஒரு வலுவான கருத்து உள்ளது,” என்கிறார்.
உடல் ரீதியான துஷ்பிரயோகங்கள் குறித்தும் பெண்கள் தன்னிடம் புகார் தெரிவித்ததாக அவர் கூறுகிறார்.
“பிரச்னையின் அளவை எங்களால் கற்பனை செய்து பார்க்க முடியாது. ஏனென்றால் ஒவ்வொரு பெண் சிப்பாயும் இதைப் பற்றி பேச விரும்பவில்லை,” என்று அவர் கூறுகிறார்.
யுக்ரேனின் துணை பாதுகாப்பு அமைச்சர் ஹன்னா மல்யார் பிபிசியிடம் பேசுகையில், “பல்லாயிரக்கணக்கான வீராங்கனைகள் ராணுவத்தில் சேர்ந்துள்ள நிலையில், மிகச்சில நேரங்களில் இது போன்ற புகார்கள் எழுகின்றன,” என்று கூறினார்.
2021 ஆம் ஆண்டில், யுக்ரேன் இராணுவம் பெண் வீராங்கனைகள் ‘ஹை ஹீல்ஸ்’ ஷுக்களுடன் பயிற்சி செய்யும் படங்களை வெளியிட்டது பொதுமக்களின் சீற்றத்தைத் தூண்டியது
யுக்ரேனிய இராணுவத்தில் பணியாற்றும் பெண்களுக்கு பாலினத்திற்கு ஏற்ற சீருடைகள் இல்லை. ஆண்கள் பயன்படுத்தும் உள்ளாடைகள், பொருத்தமான அளவுகளற்ற காலணிகள் மற்றும் குண்டு துளைக்காத உள்ளாடைகள் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன.
துணை பாதுகாப்பு அமைச்சர் ஹன்னா மயிலர் கூட, தனக்கு வழங்கப்பட்ட ஃபீல்ட் யூனிபார்ம் ஒரு ஆணுக்காக வடிவமைக்கப்பட்டதாக கூறுகிறார் – அவர் “உயரம் குறைவாக” இருப்பதால் அதன் அளவுகளை மாற்ற வேண்டியிருந்தது என்கிறார். அங்கு முறைப்படி அணியவேண்டிய சீருடையில் ‘ஹை ஹீல்ஸ்’ கொண்ட காலணிகளும் அடங்கும் என்று அவர் கூறுகிறார்.
இராணுவத்தில் உள்ள பெண்கள், அவர்களுக்குப் பொருத்தமான சீருடைகளை, ஆடைகளை வாங்கவேண்டும் என்றால் அவர்கள் அவற்றை இணையதளம் மூலம் சொந்த பணம் செலுத்திவாங்கிக் கொள்ளலாம் அல்லது தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் வாங்கிக்கொள்ளலாம். வேறு வழியில்லை.
இதனாலேயே ஆண்ட்ரியானா வெட்டரன்கா, யுக்ரேனிய பெண்கள் படைவீரர் இயக்கம் என்ற தொண்டு நிறுவனத்தை நிறுவினார். இது பெண் ராணுவ வீராங்கனைகளுக்கு சம உரிமைகள் மற்றும் நேட்டோவின் சட்ட திட்டங்களுக்கு ஏற்ப யுக்ரேனிய ராணுவ சட்டத்தை சீர்திருத்துவதற்காக கோரிக்கை எழுப்பிவருகிறது.
ஆனால், இந்த விஷயத்தில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும், பெண் வீராங்கனைகளுக்கான சீருடை உருவாக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவை ஒட்டுமொத்தமாக தயாரிக்கப்படும் என்றும் அமைச்சர் மல்யார் கூறுகிறார். இருப்பினும், அவை எப்போது தயாரிக்கப்படும் என்ற விவரங்களை அவர் தெரிவிக்கமுடியவில்லை.
இதுபோன்ற பிரச்சினைகள் இருந்தபோதிலும், “போருக்கு பாலினம் எதுவும் இல்லை” என்று துப்பாக்கி சுடும் வீராங்கனை எவ்ஜெனியா எமரால்டு கூறுகிறார்.
“போர்க்களம், ஆயுதமேந்தியவர்கள் ஆண்களா, பெண்களா என்பதைப் பொருட்படுத்தாது. ஒரு வீட்டில் ஏவுகணை தாக்கும் போது அங்கே ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் இருக்கின்றனர்.”
“போர்க்களத்தின் முன் வரிசையிலும் இந்த நிலையே காணப்படுகிறது. நீங்கள் ஒரு பெண்ணாக இருந்து திறம்பட செயல்படவேண்டும். பெண் என்ற இடத்திலிருந்து உங்கள் நாட்டையும் உங்கள் மக்களையும் ஏன் பாதுகாக்க மாட்டீர்கள்?”
கிழக்கு டான்பாஸ் பகுதியில், தற்போது துப்பாக்கி ஏந்தி எதிர்த்தாக்குதலில் ஈடுபட்டு வரும் இரினாவுக்குக் கிடைத்த ஒரு சிறிய ஓய்வு நேரத்தில் நாங்கள் அவருடன் மிகவும் சுருக்கமான உரையாடல் ஒன்றை நடத்தினோம். .
ராணுவத்தில் என்னமாதிரியான மாற்றங்கள் நடக்கவேண்டும் என பெண் வீராங்கனைகள் போராடிவருகிறார்களோ, அந்த மாற்றங்களின் ஒரு எடுத்துக்காட்டாக அவர் திகழ்கிறார். அவர் தற்போது ஆண்கள் மட்டுமே இடம்பெற்றுள்ள ஒரு படைப்பிரிவின் தளபதியாகப் பணியாற்றிவருகிறார்.
“ஒரு துப்பாக்கி சுடும் வீராங்கனைனயின் பெயர் காதலுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. திரைப்படங்களில் இது போன்ற காட்சிகள் அழகாக இருக்கலாம். ஆனால், நடைமுறையில் எனது கடின உழைப்பின் காரணமாகவே இந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறேன்.”
துப்பாக்கி ஏந்திய ராணுவத்தினர் எப்படி ஆறு மணி நேரம் வரை தரையில் படுத்துக்கொண்டு எதிரிகளைச் சுடுகின்றனர்? அதுவும் அவர்களது நிலைகளை அதிவேகமாக மாற்றம் செய்துகொண்டே பணியாற்றவேண்டிய நிலையை அவர் விவரிக்கிறார்.
“இது மரணத்துடன் விளையாடுவது போன்றது,” என்று அவர் மேலும் கூறுகிறார்.
சேவை செய்யும் ஆயிரக்கணக்கான பெண்கள் தொழில் மற்றும் அவர்களது குடும்பங்களை விட்டுவிட்டுச் சென்றுள்ளனர்.
யுக்ரேனிய படைவீரர் விவகார அமைச்சகத்தின் கீழ் பாலின சமத்துவம் குறித்த ஐ.நா. ஆலோசகராக இருந்த ஆண்ட்ரியானா தனது வேலையை விட்டுவிட்டு, கடந்த ஆண்டு ரஷ்யா படையெடுத்தபோது யுக்ரேனிய ராணுவத்தில் சேர்ந்தார்.
“அவர்கள் என் வாழ்க்கையின் சிறந்த காலத்தைப் பயன்படுத்திக்கொண்டனர்,” என 35 வயதான அவர் கூறுகிறார். போருக்கு முந்தைய ஒரு காலத்தை நினைத்துப் பார்க்கையில், அவர் மேலும் கூறுகிறார்: “நான் சுற்றுப் பயணம் செய்து மகிழ்ச்சியாக இருந்திருக்க முடியும். மேலும் ஒரு தொழிலைக் கட்டியெழுப்பியிருக்க முடியும் அல்லது ஒரு சிறந்த வேலையில் அமர்ந்துகொண்டு ஒரு கனவுலகத்தில் வாழ்ந்திருக்கமுடியும்.”
ஆரம்பப் பள்ளிக்குச் செல்லும் வயதில் ஒரு மகனை வைத்திருக்கும் தாயான ஆண்ட்ரியானா தொடர்ந்து பேசும் போது, ஏழு மாதங்களுக்கும் மேலாக தனது மகனை பார்க்கமுடியவில்லை என்றும், மொபைல் ஃபோனில் தனது மகனுடைய படங்கள் தொடர்ந்து வரும் போது புன்னகையுடன் அவைற்றைப் பார்த்து மன நிறைவடைவதாகவும் கண்ணீருடன் குறிப்பிடுகிறார்.
தற்போதைய நிலையில், அவரது சொந்த நாட்டில் அமைதியான எதிர்காலத்தைப் பெற வேண்டும் என்ற விருப்பம் தான் அவருக்கு ஒரு உந்துதலாக இருக்கிறது. நாடு முழுவதும் அமைதி ஏற்பட்டுவிட்டால், தனது மகன், அவனது பெற்றோரைப் போல போராடி அவனது உயிரைப் பணயம் வைத்து வாழவேண்டிய அவசியம் இருக்காது.
கடந்த ஆண்டு ரஷ்யாவின் முழுப் படையெடுப்பிற்குப் பிறகு இணைந்த எவ்ஜெனியா எமரால்டு போலல்லாமல், ஆண்ட்ரியானாவுக்கு ஏற்கெனவே இராணுவத்தில் பணியாற்றிய அனுபவம் உள்ளது.
2014 ஆம் ஆண்டில், ரஷ்யா முதன்முதலில் யுக்ரேனைத் தாக்கி, கிரைமியாவை இணைத்து, டான்பாஸை ஆக்கிரமித்தபோது, அவர் பிராண்ட் மேலாளராக தனது வேலையை விட்டுவிட்டு முதல் தன்னார்வ பட்டாலியன்களில் ஒன்றில் சேர்ந்தார். ஆயிரக்கணக்கான யுக்ரேனியர்களுடன். அந்த நேரத்தில், இராணுவம் இப்போது இருப்பதை விட சிறியதாக இருந்தது என்பது மட்டுமல்லாமல் போதுமான வசதிகள் இன்றித் தவித்துவந்தது.
ஆண்ட்ரியானா பணியாற்றிய ‘ஐடார் பட்டாலியன்’, கிரெம்ளின் மற்றும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் மனித உரிமை மீறல்களால் குற்றம் சாட்டப்பட்டது – ஆனால் யுக்ரேனிய இராணுவம் பிபிசியிடம் பேசிய போது, அந்த குற்றச்சாட்டுக்களை ஏற்க எந்த ஆதாரமும் இல்லை என்று கூறியது.
அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு, யுக்ரேனிய தன்னார்வப் படைப்பிரிவுகளை பயனுள்ள வகையில் முறைப்படுத்த அந்நாட்டு அரசை வலியுறுத்தியது.
ஆண்ட்ரியானா எந்த தவறான நடத்தையிலும் ஈடுபடவில்லை என்றாலும், எட்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் ‘ஐடாரை’ விட்டு வெளியேறினார். ரஷ்ய ஊடகங்கள் எந்த ஆதாரமும் இல்லாமல் அவரை “துரதிருஷ்டம்” என்று தொடர்ந்து வர்ணித்துவந்தன.
யுக்ரேனில், அவரது சேவைக்காக அவருக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன – ஒன்று “தைரியத்திற்காக”, மற்றொன்று “மக்கள் ஹீரோ” என்பதற்காக வழங்கப்பட்டன.
பிபிசியிடம் பேசிய ஆண்ட்ரியானா, தான் இனி ஐடாரின் ஒரு பகுதியாக இல்லை என்றும், ஏற்கெனவே போரில் அவருக்குப் போதிய முன்னனுபவம் இருந்ததால், 2022 ஆம் ஆண்டில் மீண்டும் இராணுவத்தில் சேர வேண்டிய கட்டாயம் இருப்பதாக உணர்ந்ததாகவும் தெரிவித்தார்.
ஆண்ட்ரியானா மீண்டும் ராணுவத்தின் முன்வரிசைக்குத் திரும்புவதற்கான தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார்
ரஷ்யாவுக்கு எதிரான போரில் யுக்ரேன் ராணுவ வீரர்களில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற கேள்விக்கு அந்நாட்டு அரசு ரகசியம் கருதி போதுமான தகவல்களை அளிக்கவில்லை. ஆனால், இதுவரை யுக்ரேன் ராணுவத்தினர் 93 பேர் உயிரிழந்திருக்கலாம் என பிபிசிக்குத் தகவல் கிடைத்துள்ளது.
‘ஆர்ம் வுமன் நவ்’ என்ற தொண்டு நிறுவனத்தின் தரவுகள், 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கின்றன.
ஆண்ட்ரியானாவின் மொபைல் ஃபோனில் பதிவு செய்துவைக்கப்பட்டிருந்த எண்கள், இறந்தவர்களின் பட்டியலாக மாறிவிட்டது.
“நான் 100 க்கும் மேற்பட்ட நண்பர்களை இழந்துவிட்டேன். எத்தனை தொலைபேசி எண்களை நீக்க வேண்டும் என்று கூட எனக்குத் தெரியவில்லை.”
ஆனால் ஏற்கனவே கொடுக்கப்பட்ட விலை கைவிட முடியாத அளவுக்கு அதிகமாக உள்ளது, என்று கூறும் அவர், ஜிம்மில் தனது மறுவாழ்வு பயிற்சியைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.