;
Athirady Tamil News

ராகுல் காந்தி எத்தனை மணி நேரத்தில் மீண்டும் பதவியில் அமர்த்தப்படுவார் என பார்ப்போம் – மல்லிகார்ஜுன கார்கே!!

0

மோடி குடும்ப பெயர் தொடர்பான அவதூறு வழக்கில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் ராகுல் காந்தி தனது எம்.பி. பதவியை இழந்தார். சூரத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை விசாரித்த குஜராத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்ய மறுத்துவிட்டது. இதையடுத்து, 2 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்திருந்தார்.

இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி, ராகுல் காந்திக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட்டது ஏன்? தண்டனை விதிக்கப்பட்டதால் தனிநபரை தேர்ந்தெடுத்த தொகுதி வாக்காளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட அதிகபட்ச 2 ஆண்டு சிறை தண்டனை குறித்த விளக்கம் இல்லை எனக்கூறி தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. 2 ஆண்டு சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதால் ராகுல் காந்தி நடைபெற்று வரும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க வாய்ப்புள்ளது.

மேலும் மக்களவை தேர்தலிலும் போட்டியிட வாய்ப்பு உருவாகியுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: இன்று மிகவும் மகிழ்ச்சியான நாள். ஜனநாயகம் வென்றது. அரசியல் சாசனம் வென்றுள்ளது.

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை வரவேற்கிறேன். இது ராகுல் காந்தியின் வெற்றி மட்டுமல்ல, இந்திய மக்களின் வெற்றி. உண்மைக்காகவும், நாட்டின் நலனுக்காகவும், கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 4,000 கிலோமீட்டர்களுக்கு மேல் நடந்து சென்று அனைத்துத் தரப்பு மக்களையும் ராகுல் காந்தி சந்தித்தார்.

அவர்களின் ஆசீர்வாதம் நமக்கு உண்டு. ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்ய 24 மணி நேரமே ஆனது. இனி எப்போது அவரை மீண்டும் பதவியில் அமர்த்துவார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.