;
Athirady Tamil News

ஹரியாணாவில் தொடரும் புல்டோசர் நடவடிக்கை: 3-வது நாளில் 20+ கடைகள் இடிப்பு!!

0

கலவரத்தால் பாதிக்கப்பட்ட ஹரியாணா மாநிலத்தின் நூ நகரில் மூன்றாவது நாளாக சனிக்கிழமையும் புல்டோசர் நடவடிக்கை தொடர்கிறது. ஒரே நாளில் 20-க்கும் மேற்பட்ட கடைகள் இடிக்கப்பட்டன.

ஹரியாணா மாநிலம் நூ மாவட்டத்தில் கடந்த திங்கட்கிழமை விஸ்வ இந்து பரிஷத் ஊர்வலத்தை தடுக்க முயன்றதால் ஏற்பட்ட மோதல், கலவரமாக மாறி, பக்கத்து மாவட்டங்களுக்கும் பரவியது. இதில் ஊர்க்காவல் படையை சேர்ந்த இருவர் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். வாகனங்கள், கடைகள், உணவகங்கள் உள்ளிட்ட சொத்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

இதனையடுத்து நூ நகரில் இருந்து 20 கி.மீ. தொலைவில் டாரு என்ற இடத்தில் வசித்த புலம்பெயர்ந்த குடும்பங்களின் சுமார் 250 குடிசைகள் நேற்று முன்தினம் மாலையில் இடித்து அகற்றப்பட்டன. இது, அரசு நில ஆக்கிரமிப்பாளர்கள் மீதான நடவடிக்கை மட்டுமின்றி, கலவரக்காரர்களுக்கு எதிரான நடவடிக்கையாகவும் கருதப்படுகிறது.

முன்னதாக, ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார், ‘‘உ.பி.யில் யோகி ஆதித்யநாத் அரசு மேற்கொண்டு வருவதுபோல் ஹரியாணாவிலும் புல்டோசர் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று கூறியிருந்தார். இந்நிலையில், மூன்றாவது நாளான இன்று (சனிக்கிழமை) பல்வேறு இடங்களில் புல்டோசர் நடவடிக்கை தொடர்ந்தது.

குறிப்பாக, ஷாஹீத் ஹசன் கான் மேவாதி அரசு மருத்துவக் கல்லூரி முன்னால் இருந்த பல கடைகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. கல்லூரியின் முன்பக்க வாயிலுக்கு எதிராக இருந்த கடைகள் இடிக்கப்பட்டன. இவை அனைத்தும் அதேபகுதியில் பல ஆண்டுகளாக அங்கேயே இருந்த கடைகள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் புல்டோசர் நடவடிக்கை மாவட்ட நிர்வாகத்தின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடந்து வருகிறது. இதுவரை 50 முதல் 60 கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளன.

காங்கிரஸ் சட்டமன்ற குழுவின் துணைத் தலைவரும், உள்ளூர் சட்டமன்ற உறுப்பினருமான அஃப்தாப் அகமது கூறுகையில், “நூ மாவட்டத்தில் ஏழைகளின் வீடுகள் மட்டுமே அடித்து நொறுக்கப்படவில்லை. மக்களின் நம்பிக்கையும், சாமானியர்களின் வாழ்க்கையும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபர்கள் தங்களின் வீடுகளை இடிப்பது தொடர்பாக ஒரு மாதத்துக்கு முன்னரே நோட்டீஸ் கொடுத்துவிட்டதுபோல் முன் தேதியிட்ட நோட்டீஸ்களை கொடுத்துவிட்டு வீடுகளை இடித்துள்ளனர் என்று கூறுகின்றனர். அரசாங்கம் நிர்வாகத் தவறுகளை மூடி மறைக்க தவறான நடவடிக்கைகளை எடுத்துள்ளது” என்று ட்விட்டர் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். கூடவே அவர் கட்டிடங்கள் இடிபடும் வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.

முன்னதாக, குன்றுகளின் மேலிருந்து துப்பாக்கியால் சுடப்பட்டது, கட்டடிடங்களின் மேல்மாடிகளில் இருந்து கண்டெடுக்கப்பட்ட கற்கள் நூ வன்முறை முன் தீர்மானிக்கப்பட்ட ஒன்று என்பதை உணர்த்துவதாக ஹரியாணா உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.