;
Athirady Tamil News

பிரசவகால மன அழுத்தம்: இனிமேல் ஊசி தேவையில்லை- மாத்திரைக்கு அமெரிக்கா அனுமதி!!

0

பிரசவகாலம் என்பது பெண்களின் வாழ்வின் முக்கியமான பருவம். பிரசவத்திற்கு பிறகு தாயான சந்தோஷ உணர்வும், பிறந்த குழந்தையை குறித்த எண்ணங்களுமே தாய்மார்களின் மனதில் தோன்றிய வண்ணம் இருக்கும்.

ஆனால் ஒரு சில பெண்களுக்கு பிரசவத்திற்குப் பிறகு “பேபி ப்ளூஸ்” (baby blues) எனப்படும் சில மன அழுத்த அறிகுறிகள் தோன்றுகின்றன. இதில் மனநிலை மாற்றங்கள், அழுகை, பதட்டம் மற்றும் தூக்கமின்மை ஆகியவையும் அடங்கும். பொதுவாக இந்த அறிகுறிகள் பிரசவத்திற்குப் பிறகு முதல் 2 முதல் 3 நாட்களுக்குள் தொடங்கி 2 வாரங்கள் வரை மட்டுமே நீடிக்கும். ஆனால் சில பெண்களுக்கு மகப்பேற்றுக்கு பிறகு ஏற்படும் மனச்சோர்வு, நீண்டகால மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. அரிதாக ஒரு சிலருக்கு பிரசவத்திற்குப் பின் ஏற்படும் மனநோய் எனப்படும் தீவிர மனநிலைக் கோளாறாக இது மாறலாம். ஒவ்வொரு ஆண்டும் 7 தாய்மார்களில் ஒருவருக்கு எனும் விகிதத்தில் இது தாக்குகிறது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது வரை அமெரிக்காவில், மகப்பேற்றுக்கு பிறகான இந்த மனச்சோர்வுக்கான சிகிச்சை, நரம்புவழி ஊசி வடிவில் மட்டுமே கிடைத்து வருகிறது.

ப்ரெக்ஸனலோன் (Brexanolone) எனப்படும் இந்த ஊசி வடிவிலான சிகிச்சையை பெற தாய்மார்கள், மருத்துவமனையில் தங்க வேண்டும். இதற்கான சிகிச்சை காலம் 60 மணி நேரம் ஆகும். இதற்கான செலவு, ரூ.28 லட்சம் ($34,000) வரை ஆகும். இந்நிலையில், அமெரிக்காவின் மஸாசுஸெட்ஸ் மாநிலத்தின் கேம்ப்ரிட்ஜ் பகுதியை சேர்ந்த பயோஜென் அண்ட் ஸேஜ் தெராப்யூடிக்ஸ் நிறுவனம், ஜுர்ஜுவே (Zurzuvae) என பெயரிட்டு முதல்முதலாக ஒரு மாத்திரை வடிவிலான தீர்வை, இந்நோய்க்கு கண்டுபிடித்திருக்கிறது. இதற்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) அங்கீகாரம் வழங்கியுள்ளது. கூடிய விரைவில் இது சந்தைக்கு விற்பனைக்கு வரும். ஒரு நாளைக்கு ஒன்று என 14 நாட்கள் எடுத்து கொள்ள வேண்டிய இந்த மாத்திரைக்கான விலை இன்னமும் அறிவிக்கப்படவில்லை. ஊசி வடிவில் கிடைத்த சிகிச்சையால் ஏற்பட்டு வந்த சிரமங்கள் குறையும் என்பதால் பல தாய்மார்களுக்கு இந்த செய்தி ஒரு வரப்பிரசாதமாக அமைகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.