அரியானாவில் தொடர்ந்து 3-வது நாளாக புல்டோசர் நடவடிக்கை: இன்று 20 மருந்து கடைகள் தரைமட்டம்!!!
ஜூலை 31 அன்று, அரியானாவில் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் பிரிஜ் மண்டல் ஜலாபிஷேக் யாத்திரை என ஒரு யாத்திரையை நடத்தினார்கள். யாத்திரை தொடங்கிய கோயிலிலிருந்து சில கிலோமீட்டர் தூரம் சென்றதுமே பக்தர்கள் மீது அங்குள்ள கட்டிடங்களிலிருந்து கல்வீச்சு நடைபெற்றது. இதில் பாதுகாப்புக்காக இருந்த காவல்துறை வாகனங்களும் சேதமடைந்தன. இதனையடுத்து இரு பிரிவினருக்கிடையே வன்முறை மூண்டது. கடந்த சில நாட்களாக குருகிராம் பகுதியிலும் இந்த வன்முறை பரவியது. இரண்டு ஊர்க்காவல் படையினர் மற்றும் 1 மதகுரு உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். கல்வீச்சில் ஈடுபட்டவர்களை தேடும் பணியில் காவல்துறை மும்முரமாக ஈடுபட்டது. மாநிலத்தில் சட்டவிரோதமாக வசிப்பவர்களுக்கு இதில் சம்பந்தம் இருப்பதாக கண்டறியப்பட்டது. இதனையடுத்து சட்டவிரோத ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு எதிராக அரியானாவின் நூ மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை தொடங்கியது.
நேற்று முன்தினம் அரசு நிலத்தை ஆக்கிரமித்ததற்காக வன்முறையால் பாதிக்கப்பட்ட நூ பகுதியிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டவ்ரு பகுதியில் வசிக்கும் சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தோரின் குடியிருப்புகள் இடிக்கப்பட்டன. பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் புல்டோசர்களை கொண்டு இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மூன்றாம் நாளான இன்று காலை நல்ஹர் பகுதியில் உள்ள ஷாஹீத் ஹசன் கான் மேவதி அரசு மருத்துவக் கல்லூரியின் பிரதான நுழைவாயிலுக்கு எதிரே இருந்த 20-க்கும் மேற்பட்ட சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மெடிக்கல் கடைகள் புல்டோசரை கொண்டு இடிக்கப்பட்டது. மாவட்ட நிர்வாக குழுக்கள் முன்னிலையில் நாள் முழுவதும் பல்வேறு இடங்களில் இந்த புல்டோசர் நடவடிக்கை தொடர்ந்தது. பல்வேறு பகுதிகளில் உள்ள 50 முதல் 60 கட்டடங்கள் இதுவரை இடிக்கப்பட்டுள்ளன.
காவல்துறையின் கைது நடவடிக்கைக்கு பயந்து பலர் ஓடிவிட்டனர். கடந்த பல ஆண்டுகளாக அகற்றப்படாமல் இருந்த சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை மாவட்ட நிர்வாகம் தொடங்கியுள்ளது. உள்ளூர் எம்.எல்.ஏ.வும், காங்கிரஸ் சட்டமன்ற கட்சியின் துணை தலைவருமான அஃப்தாப் அகமது, இத்தகைய நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். ”கல்வீச்சு நடைபெற்ற இடங்களில் உள்ள கட்டிடங்களின் மேல் மாடியில் அதிகளவில் கற்கள் சேகரிக்கப்பட்டதை கொண்டு இந்த வன்முறை திட்டமிட்டு நடத்தப்பட்டதாக தோன்றுகிறது. மோதல்கள் தொடர்பாக இதுவரை 202 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 80 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்” என்று அரியானாவின் உள்துறை அமைச்சர் அனில் விஜ் நேற்று தெரிவித்தார். இதுவரை 102 முதல் தகவல் அறிக்கை காவல்துறையால் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.