ராகுல் காந்திக்கு விருந்து கொடுத்த லாலு- தானே சமைத்த மட்டன் உணவை பரிமாறினார்!!
மோடி பற்றிய அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு ஜெயில் தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிறுத்தி வைத்தது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த அதிரடி உத்தரவுக்கு பிறகு நேற்று இரவு ராகுல் காந்திக்கு பீகார் முன்னாள் முதல்- மந்திரியும், ராஷ்டிரிய ஜனதாதளம் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் விருந்து கொடுத்தார். லாலுபிரசாத் யாதவின் மகளும், எம்.பி.யுமான மிசா பார்தியின் டெல்லி இல்லத்தில் இந்த விருந்து நிகழ்வு நடைபெற்றது. விருந்துக்கு வந்த ராகுல் காந்தியை லாலுபிரசாத் யாதவ் கட்டியணைத்து வரவேற்றார். அவருக்கு பூச்செண்டும் வழங்கினார்.
லாலு பிரசாத் யாதவ் தன் கையால் சமைத்த மட்டன் உணவை ராகுல் காந்திக்கு பரிமாறினார். பீகாரில் இருந்து மசாலா பொருட்களை கொண்டு வந்து மட்டன் உணவை அவர் சமைத்தார். பீகாரின் சிறப்பு பாணியில் ஆட்டிறைச்சி எப்படி சமைக்கப்படுகிறது என்பதை ராகுல் காந்திக்கு அவர் விளக்கியதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது இருவரும் பேசிக்கொண்டு மகிழ்ந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அரசியல் தொடர்பான விவாதங்களும் நடைபெற்றது. இந்த விருந்து நிகழ்ச்சியில் லாலு பிரசாத் யாதவின் மகனும், பீகார் துணை முதல்-மந்திரியுமான தேஜஸ்வி யாதவ் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.