இம்ரான் கான் கைது செய்யப்பட்டதை கண்டித்து நாடு தழுவிய போராட்டம்- பிடிஐ கட்சி அறிவிப்பு!!
பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் தலைவரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமருமான இம்ரான் கானுக்கு ஊழல் வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 5 ஆண்டுகள் தகுதி நீக்கம், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தும் பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டது. பிரதமராக இருந்த காலத்தில் வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அவருக்கு வழங்கிய விலை உயர்ந்த பரிசு பொருட்கள் மற்றும் நினைவு பரிசுகளை கருவூலத்தில் சேர்க்காமல் விற்பனை செய்து அந்த பணத்தை மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. அத்துடன் அவரை உடனடியாக கைது செய்யவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து இம்ரான் கான் லாகூரில் கைது செய்யப்பட்டார்.
இம்ரான் கான் கைது செய்யப்பட்டதையடுத்து அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தலாம் என்பவதால் இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இம்ரான் கானின் கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி (பிடிஐ) சார்பில் நாடு தழுவிய போராட்டங்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சி தொண்டர்கள் சட்டம் மற்றும் அரசியலமைப்பின் வரம்பிற்குள் அமைதியான வழியில் போராட்டங்களில் ஈடுபடும்படி கட்சி தலைமை அழைப்பு விடுத்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கைது செய்யப்படுவதற்கு முன்னதாக இம்ரான் கான் பதிவு செய்த வீடியோ வெளியாகி உள்ளது. அதில், தான் கைது செய்யப்பட்டால் ஆதரவாளர்கள் யாரும் வீட்டில் அமைதியாக இருக்காமல், வெளியில் வந்து போராட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.