மோசடி விசாரணை: நால்வர் இராஜினாமா!!
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விற்பனைப் பிரிவில் நான்கு சிரேஷ்ட அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமைக்குள் தமது இராஜினாமா கடிதங்களை கையளித்துள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த நான்கு அதிகாரிகளும் தனியார் துறையில் பணிக்கு செல்வதற்காக இராஜினாமா செய்யப் போவதாக தெரிவிக்கப்பட்டதாக கூறிய அதிகாரி, பாரிய எரிபொருள் மோசடி தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் அதிகாரிகள் பதவி விலகுவது சிக்கலாக உள்ளது என்றார்.
இலங்கையில் எரிபொருள் வியாபாரத்தை ஆரம்பித்துள்ள வெளிநாட்டு நிறுவனமொன்றில் இணைவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தயாராகி வருவதாகவும் அந்த நால்வரில் சிலர் அதிக சந்தையைக் கொண்ட ‘சிபோட்கோ’ நிறுவனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிலையங்களை தெரிவு செய்த அதிகாரிகள் எனவும் பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டின் போது தரகு பணம் பெற்று தொழிற்சாலைகள் மற்றும் ஹோட்டல்களுக்கு பவுசராக எரிபொருளை வழங்கியதாக கூறப்படும் அதிகாரி ஒருவரும் பதவி விலகல் கடிதம் வழங்கிய நான்கு அதிகாரிகளில் அடங்குவதாகவும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த அதிகாரிகள் இராஜினாமா செய்வதற்கு முன்னர் அவர்களது சொத்துக்கள் தொடர்பில் கூட்டுத்தாபன மட்டத்திலும் ஏனைய சட்ட அமலாக்க முகவர் ஊடாகவும் விசாரணை நடத்தப்பட வேண்டுமென இலங்கை பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.