கணவர் ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கியபோது கைது: ஜெய்ப்பூர் பெண் மேயர் நீக்கம்- கவுன்சிலர் பதவியில் இருந்தும் சஸ்பெண்டு!!
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மேயராக இருப்பவர் முனேஷ் குர்ஜார். இவரது கணவர் சுஹில். பெண் மேயரின் கணவர் சுஷில் குர்ஜார் நிலம் குத்தகை வழங்கியதற்கு ஈடாக ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கி உள்ளார். அவர் வீட்டில் லஞ்சப் பணத்தை வாங்கும் போது ஊழல் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். சுஷில் லஞ்ச பணத்தை வாங்கும் போது மேயர் முனேஷ் குர்ஜார் வீட்டில்தான் இருந்தார். லஞ்ச ஒழிப்பு துறையினர் வீட்டில் சோதனை நடத்தி ரூ.40 லட்சத்தை பறிமுதல் செய்தனர். சுஷில் குர்ஜாருடன் அவரது உதவியாளர்கள் நாராயண் சிங், அனில் துபே ஆகியோரும் பிடிபட்டனர். சுஷில் தனது உதவியாளர்கள் மூலம் நிலம் குத்தகைக்கு விண்ணப்பித்த நபரிடம் ரூ.2 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். அந்த நபர் இது குறித்து லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு புகார் செய்தார்.
அவர்கள் பொறி வைத்து சுஷிலை பிடித்தனர். அவரது உதவியாளர் நாராயண் சிங் வீட்டில் இருந்து ரூ.8 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. லஞ்சம் வாங்கிய போது மேயர் முனேஷ் குர்ஜார் இருந்தார். அவருக்கும் இதில் தொடர்பு இருப்பதாக கருதியும், வழக்கு விசாரணையில் தலையிடக் கூடும் என்பதாலும் அவரை மேயர் பதவியில் இருந்து மாநில காங்கிரஸ் அரசு அதிரடியாக நீக்கி உத்தர விட்டது. இரவோடு இரவாக பணி நீக்கம் செய்யப்பட்டார். மேயர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதோடு அவர் கவுன்சிலர் பதவியில் இருந்தும் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.