மாதவரம் பகுதியில் முறிந்து விழும் நிலையில் ஆபத்தான மின்கம்பங்கள்- சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை!!
மாதவரம் அருகே உள்ள தபால் பெட்டி பகுதி எப்போதும் போக்குவரத்து மிகுந்த சாலை ஆகும். இந்த சாலையில் பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனை, பஸ் நிறுத்தங்கள், கோவில் என மக்கள் அதிகம் பயன்படுத்தும் இடங்களாக உள்ளன. மாதவரம் பகுதியில் உள்ள பல மின்கம்பங்கள் உடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இதனால் அவை எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழுந்து விடும் ஆபத்தான நிலையில் காட்சி அளிக்கின்றன. இதுபற்றி பொது மக்கள் பலமுறை மின்வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்தும் சேதமான மின்கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தபால் பெட்டி பஸ் நிறுத்தம் அருகே உள்ள மின்கம்பத்தின் அடிப்பகுதி துருப்பிடித்து துகள்கள் கொட்டி வெற்றிடமாக உள்ளது. இதன் அடிப்பகுதி பலம் இல்லாமல் ஆபத்தான நிலையில் எப்போது வேண்டுமானாலும் சரியும் நிலை காணப்படுகிறது. இதேபோல் வடபெரும்பாக்கம்-மாதவரம் செல்லும் சாலை, கொசப்பூர்- மாதவரம் சாலை, வட பெரும்பாக்கம்-மாதவரம் செல்லும் சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே மற்றும் புழல் அருகே உள்ள மின்கம்பங்கள் ஆபத்தான நிலையில் காணப்படுகின்றன.
எனவே பழுதடைந்த மின்கம்பங்களை உடனடியாக மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதுகுறித்து இது குறித்து சமூக ஆர்வலர் சுனில் என்பவர் கூறும்போது, மாதவரம், வடபெரும்பாக்கம், கொசப்பூர், புழல், மாதவரம் பால்பண்ணை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அதிக அளவிலான சேதமான மின்கம்பங்கள் உள்ளன. இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இந்த மின்கம்பங்கள் பல மாதங்களாக இப்படியே உள்ளது. மின்கம்பங்கள் அருகே பள்ளி குழந்தைகளும் வயதானவர்களும் பெண்கள் என பல தரப்பினர் சென்று வருகின்றனர்.
பிரதான சாலைகளில் உள்ள சேதமான மின்கம்பங்கள் சாயந்தாலோ மின்கம்பம் அருந்து விழுந்தாலோ உயிர்சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. அசம்பாவிதம் ஏற்படும் முன்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மாதவரம் மண்டலம், 33-வது வார்டுக்கு உட்பட்ட லட்சுமிபுரம் பகுதியில் செங்குன்றம்-வில்லிவாக்கம் சாலையில் சென்னை குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் 15 லட்சம் லிட்டர் கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி மற்றும் 4 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை நீர் தேக்க தொட்டி நீரேற்று நிலையம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டும் பணி தொடங்கியது. தற்போது பணி முடிந்து விட்ட நிலையில் குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் உள்ளது.
இதனை பொது மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என லட்சுமிபுரம் மற்றும் சுற்றி உள்ள பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த சசி என்பவர் கூறும்போது, மாதவரம் லட்சுமிபுரம் பகுதியில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டி முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இது பயன்பாட்டுக்கு வராததால் லட்சுமிபுரம் , ஆசிரியர் காலனி, ஸ்டார் விஜய் நகர், சரஸ்வதி நகர், சப்தகிரி நகர், செல்வம் நகர், ரமணி நகர், செகரட்டரி காலனி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்கப்படாமல் உள்ளது என்றார்.