;
Athirady Tamil News

மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் நாளை தொடங்குகிறது!!

0

பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த மாதம் 20-ந்தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் 32 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு இருந்தது. ஆனால் மணிப்பூர் கலவரம் குறித்து பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. அதற்கு பிரதமர் தரப்பில் இருந்து எந்த பதிலும் தெரிவிக்கப்படவில்லை. இதையடுத்து பாராளுமன்ற கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்து எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. என்றாலும், எதிர்க்கட்சிகளின் அமளி மற்றும் வெளிநடப்புக்கு இடையே பாராளுமன்றத்தில் இதுவரை 15 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

குறிப்பாக டெல்லி அரசு உயர் அதிகாரிகள் நியமனம் மற்றும் பணி இடமாற்றத்துக்கான அதிகாரம் தொடர்பான அவசர சட்டத்துக்கு மாற்றாக டெல்லி நிர்வாக திருத்த மசோதாவை மக்களவையில் மத்திய அரசு கடந்த வாரம் தாக்கல் செய்து நிறைவேற்றியது. இன்று அந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட உள்ளது. அமளி செய்து பாராளுமன்றத்தை முடக்கினாலும் திட்டமிட்டபடி மத்திய அரசு சில மசோதாக்களை நிறைவேற்றுவதால் பிரதமர் மோடிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் ‘இந்தியா’ எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தன. பிரதமர் மோடியை பாராளுமன்றத்தில் பேச வைக்க வேண்டும் என்ற இலக்குடன் அந்த நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

பாராளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லா எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்றுக்கொண்டார். அதன்மீது ஆகஸ்டு 8, 9-ந் தேதிகளில் விவாதம் நடைபெறும் என்று அறிவித்தார். அதன்படி பாராளுமன்றத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் தொடங்குகிறது. விவாதத்துக்கு மொத்தம் 12 மணி நேரத்தை ஒதுக்கி அலுவல் ஆய்வுக்குழு அறிவித்துள்ளது. எனவே 9-ந்தேதி (புதன்கிழமை) நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதம் தொடர்ந்து நடைபெறும். விவாதத்தின்போது மணிப்பூர் கலவரம் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுக்களை ஆதாரங்களுடன் எழுப்புவதற்கு எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன. குறிப்பாக மே 4-ந்தேதி 2 பெண்கள் ஆடைகள் இன்றி ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட விவகாரத்தை எழுப்பி சர்ச்சையை உருவாக்க உள்ளன.

எனவே நாளையும், நாளை மறுநாளும் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் அனல் பறக்கும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சிகளின் விவாதத்துக்கு மத்திய அரசு சார்பில் 10-ந்தேதி (வியாழக்கிழமை) பதில் அளிக்கப்பட உள்ளது. பொதுவாக நம்பிக்கையில்லா தீர்மானம் மீது எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் பதில் அளிப்பது மரபாக உள்ளது. அந்த வகையில் பிரதமர் மோடி 10-ந்தேதி பதில் அளித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே ராகுல் காந்திக்கு மீண்டும் எம்.பி. பதவி வழங்கப்பட்டது. இதையடுத்து அவரும் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்று எதிர்க்கட்சிகள் சார்பில் பிரதான வாதத்தை எடுத்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்தகைய சூழலில் பாராளுமன்ற விவாதம் கடுமையாக சூடுபிடிப்பதாக இருக்கும். பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவுபெற இன்னும் 4 நாட்களே உள்ளன. இந்த 4 நாட்களும் பாராளுமன்றத்தில் பரபரப்புக்கு பஞ்சமே இருக்காது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.