அமெரிக்கா – குழந்தையை சுட்டுக் கொன்று, தன்னையும் சுட்டுக்கொண்டு உயிரிழந்த டாக்டர்!!
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ளது பிரபல மவுண்ட் ஸினாய் மருத்துவமனை. அங்குள்ள புற்றுநோய் சிகிச்சை துறையில் மருத்துவராக பணிபுரிந்தவர் டாக்டர். கிரிஸ்டல் காஸெட்டா. இவர் அந்த மருத்துவமனையில் மார்பகம், எலும்பு, மகளிர் நோய் மற்றும் இரைப்பை குடல் புற்று நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதில் சிறப்பு வாய்ந்த மருத்துவர். மேலும், மவுண்ட் ஸினாய் குயின்ஸ் செண்டரில் நிலைய தலைவராகவும், இகான் மருத்துவ கல்லூரியில் உதவி பேராசிரியராகவும் பதவிகள் வகித்தார். இவருக்கு ஒரு குழந்தை உண்டு. டாக்டர்.கிரிஸ்டலின் இல்லம் நியூயார்க் நகரிலிருந்து வடகிழக்கே சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் சோமர்ஸ் பகுதியில் உள்ளது.
டாக்டர். கிரிஸ்டலுடன் அவ்வீட்டில் வசிக்கும் ஒருவர், நேற்று முன் தினம் காலை சுமார் 7.00 மணியளவில், குழந்தையின் அறையில் பலத்த சத்தம் ஒன்றை கேட்டார். ஏதோ பெரிய பொருள் விழுந்ததாக நினைத்து அவர் உள்ளே பார்க்க சென்றார். அவர் அறைக்கு செல்லும் முன், அதே போன்று மற்றொரு சத்தமும் கேட்டது. அவர் விரைந்து சென்று அந்த அறையில் பார்த்த போது டாக்டர். கிரிஸ்டல் மற்றும் அவரின் குழந்தை இருவரும் துப்பாக்கி சூட்டில் இறந்திருப்பது தெரிந்தது. தன் குழந்தையை சுட்டு கொன்று விட்டு, தன்னையும் சுட்டு கொண்டு டாக்டர். கிரிஸ்டல் உயிரிழந்தார்.
“டாக்டர். கிரிஸ்டல் மற்றும் அவரது குழந்தையின் இழப்பினால் மவுண்ட் ஸினாய் மருத்துவ சமூகம் மிகவும் வேதனை அடைந்துள்ளது. அவரின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்” என இத்துயர சம்பவம் குறித்து மவுண்ட் ஸினாய் மருத்துவமனை இரங்கல் செய்தி வெளியிட்டிருக்கிறது. இறந்த குழந்தைக்கு எவ்வளவு வயது என்ற தகவல் வெளியிடப்படவில்லை. டாக்டர். கிரிஸ்டல் எதற்காக இத்தகைய முடிவை எடுத்தார் என்றும் தெரியவில்லை. காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.