தருமபுரி டாஸ்மாக் கடையில் மொத்தமாக மதுபாட்டில்கள் விற்ற 7 ஊழியர்கள் சஸ்பெண்டு!!
தருமபுரி மது விலக்கு போலீசார், தீவிர மதுவிலக்கு வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதியமான் கோட்டை கக்கன்ஜிபுரம் பகுதியை சேர்ந்த ரவி (வயது39), என்பவரது வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டில் மதுபதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்து, 20-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இந்நிலையில், மீண்டும் ரவி வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக, கலெக்டர் சாந்திக்கு நேற்று புகார் சென்றது. இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில், நல்லம்பள்ளி தாசில்தார் ஆறுமுகம், டி.எஸ்.பி. செந்தில்குமார் மற்றும் போலீசார் ரவி வீட்டில் மீண்டும் சோதனை நடத்தினர்.
அப்போது, அவரது வீட்டில் 70 மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. இது குறித்து, வி.ஏ.ஓ. கோவிந்தராஜ் அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் ரவியின் மனைவி மேனகா (35), ரவியின் தாய் ராணி (58) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அதியமான்கோட்டை தாதம்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையில் மொத்தமாக வாங்கி வந்து, மது விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து டாஸ்மாக் மேலாளர் மகேஸ்வரி, சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தபோது, அந்த கடையில் இருந்து மொத்தமாக மதுபானங்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து 2 மேற்பார்வையாளர், 5 விற்பனையாளர் உள்பட 7 பேரை, சஸ்பெண்ட் செய்து டாஸ்மாக் மேலாளர் மகேஸ்வரி நேற்று இரவு உத்தரவிட்டார்.