;
Athirady Tamil News

வெயிலின் தாக்கம் எதிரொலி- சென்னை மக்களின் குடிநீர் தேவை 5 கோடி லிட்டர் அதிகரித்தது!!

0

சென்னை மக்களின் குடிநீர் தேவையை புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், பூண்டி மற்றும் வீராணம் ஏரிகள் பூர்த்தி செய்து வருகின்றன. சென்னைக்கு குடிநீர் வழங்கக் கூடிய ஏரிகளில் தண்ணீர் இருப்பு போதுமானதாக உள்ளது. ஆனால் கடந்த 2 வாரமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இயல்பைவிட வெயில் அதிகரித்து வருவதால் குடிநீர் தேவையும் அதிகரித்தது. சென்னையில் சுட்டெரிக்கும் வெயில் தொடர்ந்து கொளுத்தி வருவதால் மக்களின் குடிநீர் தேவை உயர்ந்துள்ளது.

வழக்கமாக நாள் ஒன்றுக்கு சென்னை மாநகரின் குடிநீர் தேவைக்கு 1000 மில்லியன் லிட்டர் அதாவது 100 கோடி லிட்டர் தண்ணீர் வினியோகிக்கப்படும். கோடை காலத்திலும் இதே நிலை நீடிக்கும். இந்த ஆண்டு கோடை காலத்தை தாண்டி வெயிலின் உக்கிரம் அதிகமாக இருப்பதால் தண்ணீர் தேவை எதிர்பாராமல் கூடியுள்ளது. சென்னையில் குழாய் மூலம் குடிநீர் வினியோகம் அதிகரித்ததோடு லாரிகள் வழியாக வழங்குவதும் கூடியுள்ளது. 50 மில்லியன் லிட்டர் தற்போது கூடியுள்ளதாக குடிநீர் வாரிய அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது:- சென்னை மக்களின் தேவைக்கு தினமும் 1000 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கூடுதலாக 50 மில்லியன் லிட்டர் என மொத்தம் 1,050 மில்லியன் லிட்டர் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. அதாவது 5 கோடி லிட்டர் தண்ணீர் தேவை தற்போது கூடியுள்ளது. ஆனாலும் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது. ஒரு வருடத்திற்கு தேவையான தண்ணீர் இருப்பு உள்ளது.

தற்போது 7 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. கடந்த வருடம் இதே காலத்தில் இருந்தது போல இந்த வருடமும் தண்ணீர் இருப்பு உள்ளது. வடகிழக்கு பருவ மழைக்கு இன்னும் 2 மாதங்கள் உள்ளன. பருவ மழை பெய்ய தொடங்கி விட்டால் ஏரிகளில் தண்ணீர் அளவு உயர்ந்து விடும். மேலும் வீராணம், பூண்டி ஏரிகளில் இருந்து தேவையான அளவு தண்ணீர் கிடைக்கிறது. அதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாது. இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.