கலுட்ரான்: அணுகுண்டு திட்டத்தில் ரகசியமாக பணி செய்த பல ஆயிரம் பெண்கள் என்ன ஆனார்கள்?!!
அது 1943-ம் ஆண்டு. இரண்டாம் உலகப் போர் உச்சகட்டத்தில் நடந்து கொண்டிருந்தது.
அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தைச் சேர்ந்த ரூத் ஹடில்ஸ்டன் என்ற இளம்பெண் உயர்நிலைப் பள்ளியை முடித்திருந்தார்.
அதன்பின்னர் உள்ளூர் காலுறை தொழிற்சாலையில் அவருக்கு வேலை கிடைத்தது. ஆனால் அவரது சக பணியாளர்களில் பெரும்பாலானோர் அருகிலுள்ள ஓக் ரிட்ஜ் (Oak Ridge) நகரத்தில் கட்டப்பட்டு வரும் ஒரு பெரிய அரசு நிறுவனத்தில் வேலை செய்ய விண்ணப்பித்ததைக் கவனித்தார். அவருடைய நண்பர்கள் பலர் அவரையும் விண்ணப்பிக்கும்படி ஊக்கப்படுத்தினர்.
ஆனால், அவருக்கு அங்கு செல்ல வழியில்லாததால், தனது தந்தையை அங்கு அழைத்துச் செல்லும்படிக் கேட்டார். மேலும் அமெரிக்காவின் மின்சாரத் துறை துவங்கவிருந்த அந்தப் புதிய நிறுவனத்தில் வேலை கிடைக்க வேண்டுமெனெ ஆர்வமாக இருந்தார்.
“எனக்கும் என் தந்தைக்கும் அங்கு வேலை கிடைத்தது,” என்கிறார் ரூத். அது நடந்து பல தசாப்தங்களுக்குப் பிறகு, இப்போது 93 வயதான ரூத், Atomic Heritage Foundation நடத்திய “மான்ஹாட்டன் திட்டத்தின் குரல்கள்” என்ற நிகழ்ச்சியில் பேசியபோது, அதை நினைவு கூர்ந்தார்.
ரூத் மற்றும் அவரது தந்தை என்ன செய்கிறோம் என்றே தெரியாமல், ஓக் ரிட்ஜ் தேசிய ஆய்வகத்தில் அணுகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டிருந்தனர். இது உலகின் முதல் அணுகுண்டைத் தயாரித்த மான்ஹாட்டன் திட்டத்தின் (Project Manhattan) ஒரு பகுதி.
இன்று உலகளவில் பெரும் வெற்றியைப் பெற்றிருக்கும் ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் இந்தத் திட்டத்தைப் பற்றிப் பேசுகிறது.
அப்போது, ஒக் பிரிட்ஜ் ஆய்வகத்தின் ‘Y-12’ என்ற ஆலையில் ரூத் பணியாற்றினார். ஒன்றில் “க்யூபிகல் ஆபரேட்டராக” வேலை செய்யத் தொடங்கினார்.
அங்கு வேலை செய்த இளம்பெண்கள் ‘கலுட்ரான் பெண்கள்’ (The Girls of the Calutron) என்று அழைக்கப்பட்டனர். கலுட்ரான் என்பது யுரேனியத்தின் ஐசோடோப்களைப் பிரித்தெடுக்கப் பயன்பட்ட ஒரு கருவி.
ஜப்பானிய நகரமான ஹிரோஷிமாவில் 1945-ம் ஆண்டு வீசப்பட்ட அணுகுண்டான, ‘லிட்டில் பாய்’ உருவாக்கப்படுவதற்கு முக்கியமான பங்காற்றினர் இந்தப் பெண்கள்.
ரூத் மட்டுமல்ல, அவரோடு இப்பணியில் 10,000 இளைஞர்கள் ஈடுபட்டிருந்தனர்.
யுரேனியத்தின் ஐசோடோப்புகளைப் பிரிக்கப் பயன்படுத்தப்படும் கலுட்ரோன்களின் கன்ட்ரோல் பேனல்களை இந்தப் பெண்கள் இயக்கினர். இதிலிருந்து பெறப்பட்ட யுரேனியம் அணுகுண்டின் எரிபொருளாகப் பயன்படுத்தப்பட்டது.
உண்மையில், Y-12 மின்காந்த ஐசோடோப்புகளைப் பிரிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஓர் ஆலை. ஆனால் அது அங்கு வேலை செய்தவர்களுக்குச் சொல்லப்படவில்லை.
மன்ஹாட்டன் திட்டத்தின் ஒரு பகுதியாக யுரேனியத்தைச் செறிவூட்டுவதற்காக உருவாக்கப்பட்ட கலுட்ரான்கள் மிகவும் சிக்கலான பணியைச் செய்தாலும், அவற்றை இயக்குவது அவ்வளவு சிக்கலானது அல்ல. அவறின் மீட்டர்களைக் கண்காணித்து, சரியான நேரத்தில் சில knob-களைத் திருப்ப வேண்டும்.
யுத்த காலத்தில் திறமையான தொழிலாளர்கள் கிடைக்காததால், மன்ஹாட்டன் திட்டத்தைச் செயல்படுத்தியவர்கள், இளம் பெண்களை வேலைக்கு அமர்த்த முடிவு செய்தனர்.
விஞ்ஞானிகள் இந்த இயந்திரங்களில் வேலை செய்தால், அவற்றில் புதிய பரிசோதனைகளை மேற்கொண்டு நேரத்தைக் கழித்தனர். ஆனால் இந்த இள்ம்பெண்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் சரியாகச் செய்தனர். இதனை திட்டத்தைச் செயல்படுத்தியவர்கள் சில சோதனைகளின் மூலம் தெரிந்துகொண்டனர்.
விசித்திரமான இந்த ராட்சத உபகரணங்களை முதன் முதலில் பார்த்த அனுபவத்தை ரூத் நினைவு கூர்ந்தார்.
“நாங்கள் வேலையைத் தொடங்க அவர்கள் அனுமதித்த பிறகு, அவர்கள் எங்களை க்யூபிகல்ஸ் என்று கூறப்பட்ட அறைக்கு அழைத்துச் சென்றனர். அவை பெரிய உலோக சாதனங்கள். அவற்றில், பல வகையான அளவீட்டுக் கருவிகள் இருந்தன. அவற்றை எவ்வாறு கையாள்வது என்று எங்களுக்குக் கற்றுக் கொடுத்தனர்,” என்கிறார் ரூத்.
மேலும் அவர், Y-12-இல் தனது முதல் நாளை நினைவு கூர்ந்தார்.
“ஒரு கருவியில் உள்ள முள் அதிகமாக வலது பக்கம் சென்றால், அதை மீண்டும் மையப்படுத்த அதைச் சரிசெய்ய வேண்டும். அது இடதுபுறம் சென்றாலும் அதேதான். சில சமயம் உங்களால் அதைச் சரிசெய்ய முடியவில்லையெனில் மேற்பார்வையாளரை அழைக்க வேண்டும்,” என்றார் ரூத்.
இந்தப் பெண்களின் முக்கியப் பணி தொட்டியில் வெப்பநிலையை சீராக வைத்திருப்பது. அது மிகவும் சூடாக இருந்தால், திரவ நைட்ரஜன் பயன்படுத்தி எப்படிக் குளிர்விப்பது என்று அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டது.
“நாங்கள் நாள் முழுதும் க்யூபிகல் முன்னால் ஸ்டூல்களில் உட்கார்ந்திருந்தோம். கழிவறைக்குச் செல்லக்கூட எழுந்திருக்கவில்லை,” என்றார் ரூத். “வெளியே செல்ல எங்களுக்கு பயம். இயந்திரத்தின் செயல்பாடு நிலைகுலைந்து போகலாம்,” என்றார் அவர்.
அந்தக் காலகட்டத்தின் முக்கியமான நினைவு, அனைத்து நடவடிக்கைகளிலும் கவிந்திருந்த ரகசியம்
அந்தக் காலகட்டத்தின் முக்கியமான நினைவு, அனைத்து நடவடிக்கைகளிலும் கவிழ்ந்திருந்த ரகசியம்.
“வேலையைத் தொடங்குவதற்கு முன், அவர்கள் எங்களுக்கு பல வாரங்கள் பயிற்சி அளித்தனர். அவர்கள் எங்களிடம் சொன்ன முதல் விஷயம், அங்கு நடக்கும் எதையும், அல்லது அங்கு நாங்கள் செய்யும் எதையும் வெளியே சொல்லக் கூடாது,” என்று ரூத் கூறுகிறார்.
“அவர்கள் அதை மிகவும் கடுமையாகப் பின்பற்றினர். நாங்கள் இந்த விதியை மீறி ஏதாவது செய்து பிடிபட்டால் அபராதம் உள்ளிட்ட விளைவுகள் ஏற்படும் என்றும், தானாகவே பணிநீக்கம் செய்யப்படுவோம் என்றும் அவர்கள் எங்களிடம் கூறினர்,” என்று அவர் நினைவு கூர்ந்தார்.
ஆனால் உண்மையில், ரூத் அங்கு என்ன வேலை செய்கிறார் என்று யாராவது அவரிடம் கேட்டால், அவர் சொல்லமாட்டார், ஏனெனில், அது அவருக்கே தெரியாது, என்கிறார் ரூத்.
மேலும், ரூத்தைப் போலவே, யுரேனியத்தை செறிவூட்டுவதற்கு தங்களை அர்ப்பணித்த பெரும்பாலான பெண்களுக்கு தாங்கள் என்ன செய்கிறோம் என்றே தெரிந்திருக்கவில்லை.
“நாங்கள் என்ன செய்து கொண்டிருந்தோம் என்று அப்பொதே எங்களுக்குள் ஒருவரையொருவர் ஏன் கேட்டுக்கொள்ளவில்லை என்று இப்போது யோசிக்கிறேன்,” என்று அவர் ஒப்புக்கொண்டார்.
மான்ஹாட்டன் திட்ட தேசியப் பூங்காவின் படி, அங்கு என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருந்த பெண்கள் வேலையிலிருந்து திடீரெனக் காணாமல் போனார்கள்.
“நாங்கள் போரில் வெற்றிபெற அமெரிக்காவுக்கு உதவுகிறோம் என்று சொன்னார்கள். ஆனால் எப்படி என்று சொல்லவில்லை,” என்கிறார் ரூத்.
64 கிலோகிராம் யுரேனியம்-235 சுமையைச் சுமந்து சென்ற லிட்டில் பாய் வெடித்த நாளில் 50,000 முதல் 100,000 பேர் வரை இறந்ததாக நம்பப்படுகிறது
1945-ம் ஆண்டு ஆகஸ்ட் 6-ம் தேதி ஜப்பான் மீது அமெரிக்கா அணுகுண்டை வீசியபோது, இரண்டு ஆண்டுகளாக அவர்கள் என்ன வேலை செய்கிறார்கள் என்று அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.
அன்று தான் அனுபவித்த உணர்ச்சிகளை ரூத் நினைவு கூர்ந்தார்.
“அது அறிவிக்கப்பட்டபோது நான் வேலையில் இருந்தேன். போர் முடிந்துவிட்டதை நினைத்து முதலில் மகிழ்ச்சி அடைந்தேன். போரில் இருந்த என் காதலன் இறுதியாக வீட்டுக்கு வர முடியும் என நினைத்தேன்,” என்கிறார் ரூத்.
“ஆனால்… ஜப்பானில் இறந்தவர்களைப் பற்றி அனைவரும் பேச ஆரம்பித்தார்கள். நான் அதில் எனக்கும் பங்கு இருக்கிறது என்று நினைத்தேன்,” என்றார் ரூத்.
மேலும் பேசிய அவர், “போர் என்பது போர் தான். அதை நிறுத்த முயற்சிப்பதைத் தவிர உங்களால் எதுவும் செய்ய முடியாது,” என்றார்.
“எனக்கு இப்போதும் கூட அது பிடிக்கவில்லை. ஆனால் யாராவது அதைச் செய்துதான் ஆகவேண்டும்,” என்றார் அவர்.
Y-12 ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட 64 கிலோகிராம் யுரேனியம்-235 சுமையைச் சுமந்து சென்ற லிட்டில் பாய் வெடித்த நாளில் 50,000 முதல் 100,000 பேர் வரை இறந்ததாக நம்பப்படுகிறது.
குண்டுவெடிப்பில் உயிர் பிழைத்தவர்களில் 50% பேர் கதிர்வீச்சினால் இறந்தனர்.
அதேசமயம், அந்தக் குண்டைத் தயாரிக்க உதவிய, உயர் கதிரியக்கப் பொருட்களுக்கு அருகே வேலை செய்த போதிலும், ‘கலுட்ரான் பெண்கள்’ எந்த விளைவுகளையும் சந்திக்கவில்லை. அவர்களின் எதிர்கொண்ட கதிர்வீச்சின் அளவு ஒவ்வொரு நாளும் அளவிடப்பட்டது.