;
Athirady Tamil News

ரஷ்யா vs யுக்ரேன்: இந்தியா வல்லரசு வரிசையில் இடம் பெறும் வாய்ப்பை தவறவிட்டதா? சௌதி என்ன சாதித்தது?!!

0

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடைபெற்று வரும் யுக்ரேன் -ரஷ்யா இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியை சௌதி அரேபியா தற்போது முன்னெடுத்துள்ளது. சவுதி அரேபியாவின் இந்த முயற்சியை இந்தியா முன்னெடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ரஷ்யா, யுக்ரேன் என இருநாடுகளுடனும் நட்புறவு கொண்டுள்ள நாடு என்பதே, போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியை இந்தியா மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்டதற்கு முக்கிய காரணம்.

அத்துடன், மேற்கத்திய நாடுகளை அணுகுவது போன்று இந்தியாவை ரஷ்யா பார்க்காது என்ற புரிதலின் காரணமாக, போரை முடிவுக்கு வருவது குறித்த இந்தியாவின் யோசனையை ரஷ்யா நிராகரித்துவிடாது என்பதும் இந்தியா மீதான இந்த எதிர்பார்ப்புக்கு மற்றொரு காரணமாக இருந்தது.

ஆனால், இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக பெரிய முயற்சியை இந்தியா இதுவரை முன்னெடுக்கவில்லை. மாறாக, போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சிகளை செளதி அரேபியா தற்போது முன்னெடுத்துள்ளது.

ரஷ்யா – யுக்ரேன் போரை முடிவுக்கு கொண்டு வர செளதி நடத்தியுள்ள முதல் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்துள்ளது. இந்த விவகாரத்தில் சவூதி அரேபியா முன்னிலையில் இருப்பதாக கருதப்படும் நிலையில், இந்தியா ஏன் இதுபோன்ற பகிரங்கமான முயற்சியை எடுக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது.

இந்தியா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் பங்கேற்ற இந்த ஆலோசனைக் கூட்டம், செளதி அரேபியாவின் ஜெட்டா நகரில் சனிக்கிழமை தொடங்கியது. போர் நிறுத்தத்திற்கான தீர்வை எட்டும் வரை பேச்சுவார்த்தையை தொடர்ந்து நடத்துவது என்று இக்கூட்டத்தில் பங்கேற்ற நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன.

“போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான சர்வதேச அளவிலான ஆலோசனைகள் மற்றும் யோசனைகளை கருத்தில் கொள்ள, இந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ள நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன” என்று செளதி பிரஸ் ஏஜென்சி தெரிவித்துள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்கவில்லை என்றாலும், இதில் பங்கேற்றுள்ள பிற நாடுகள் முன்வைக்கும் யோசனைகளை உன்னிப்பாக கவனித்து வருவதாக ரஷ்ய அரசு கூறியுள்ளது.

ரஷ்யா -யுக்ரேன் போரில், மேற்கத்திய நாடுகளின் ஆதரவு யுக்ரேனுக்கு இருக்கும் நிலையில், பூமிப் பந்தின் தெற்குப் பகுதியில் உள்ள நாடுகளின் ஆதரவையும் யுக்ரேன் நாடி வருகிறது. இந்த நிலையில், ஜெட்டாவில் தொடங்கியுள்ள இந்த பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

“யுக்ரேன் போர் உலகம் முழுவதும் ஏற்படுத்தி உள்ள தாக்கங்கள் குறித்தும், இப்போரை முடிவுக்கு கொண்டு வருவது பற்றியும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. யுக்ரேனில் நீடித்த அமைதியை நிலைநாட்டுவதற்கு தேவையான யோசனைகளை பகிர்ந்து கொள்வதற்கு பல்வேறு நாடுகள் இங்கு ஒன்றிணைந்துள்ளன. பல நாடுகளுடன் உரையாடுவதற்கான ஆக்கப்பூர்வ வழியை ஏற்படுத்தி தந்துள்ளதற்காக செளதி அரேபியாவுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்” என்று ஜெட்டா அமைதி பேச்சுவார்த்தையில் பங்கேற்ற அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

போரில் ரஷ்யாவிடம் இழந்த இடங்களை பதில் தாக்குதல் மூலம் மீட்டெடுப்பதில் யுக்ரேன் முனைப்பு காட்டி வருகிறது

யுக்ரேன் போரை முடிவுக்கு கொண்டு வர சர்வதேச நாடுகள் முயற்சியை முன்னெடுத்திருந்தாலும், போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்யா-செளதி அரேபியா இடையே நேரடி பேச்சுவார்த்தை நடைபெற தற்போதைக்கு வாய்ப்பில்லை என்பதே இருநாடுகளின் கருத்தாக உள்ளது. போரில் ரஷ்யாவிடம் இழந்த இடங்களை பதில் தாக்குதல் மூலம் மீட்டெடுப்பதில் யுக்ரேன் முனைப்பு காட்டி வருவதே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

அத்துடன் ரஷ்யாவோ, யுக்ரேனோ போர் நிறுத்தத்திற்கு இதுவரை தயாராக இல்லாதபோது, இரண்டு நாடுகளும் எதிரெதிரே அமர்ந்து அமைதிப் பேச்சுவார்த்தை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்க இயலாது என்றும் தெரிகிறது.

யுக்ரேன் மீது போர் தொடுத்த போதே ரஷ்யா நீண்டகால மோதலுக்கு தயாராகவே இருந்தது. இதன் காரணமாக, நீண்ட நாட்களாக இப்போரில் அதன் கையே ஓங்கி இருப்பதாக தோன்றியது. தற்போதைய நிலையில் ரஷ்யா போர் நிறுத்தத்தை எதிர்க்காவிட்டாலும், போரில் இதுவரை ஆக்கிரமித்துள்ள பகுதிகளை ரஷ்யா, யுக்ரேனிடம் திரும்ப தராது என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

ரஷ்யாவின் நிலைப்பாடு இப்படி இருக்கும் நிலையில், மேற்கத்திய நாடுகளின் வலுவான ஆதரவை பெற்றுள்ளதால், போர்ச்சூழல் தமக்கு சாதகமாக இருப்பதாக யுக்ரேன் ராணுவம் நம்புகிறது. இதன் மூலம் வரும் நாட்களில் போரில் தமது கை ஓங்கும் என்பதும் அதன் நம்பிக்கையாக உள்ளது.

ரஷ்யா மற்றும் யுக்ரேனின் நிலைப்பாடு காரணமாக, இந்தப் போர் தற்போதைக்கு முடிவுக்கு வருவதற்கான சாத்தியக்கூறுகள் தெரியவில்லை. இந்த நிலையில், ராஜ தந்திர ரீதியாக முன்னெடுக்கப்படும் முயற்சிகள் மூலம் போரின் பேரழிவு மற்றும் உலகப் பொருளாதாரத்தில் இப்போர் ஏற்படுத்தும் தாக்கத்தை குறைக்க முடியும் என்பது உலக நாடுகளின் நம்பிக்கையாக இருக்கிறது.

ரஷ்யா மற்றும் யுக்ரேன் நாடுகளுடன் நல்லுறவை பேணி வரும் முக்கிய நாடாக இந்தியா திகழ்ந்து வருகிறது.

இந்தியாவுடன் ரஷ்யா நீண்டகாலமாக நல்லுறவை காத்து வருவதை கருத்தில் கொண்டு, யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை வெளிப்படையாக கண்டிப்பதை இந்தியா தவிர்த்து வருகிறது. அதேநேரம் யுக்ரேனை திருப்திப்படுத்தும் நோக்கில், இப்போரை ஆதரிக்கவில்லை என்றும் இந்தியா கூறி வருகிறது.

கடந்த மே மாதம், ஜப்பானில் நடைபெற்ற ஜி 7 நாடுகளின் கூட்டத்தில் பங்கேற்ற இந்திய பிரதமர் நரேந்திர மோதி, “ போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா தன்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும்” என்று யுக்ரேன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியிடம் கூறியிருந்தார்.

ரஷ்யா மற்றும் யுக்ரேன் நாடுகளுடன் நல்லுறவை பேணி வரும் முக்கிய நாடாக இந்தியா திகழ்ந்து வருகிறது.

ரஷ்யா – யுக்ரேன் போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில், இந்திய பிரதமர் நரேந்திர மோதியுடன் இணைந்து, அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்க விரும்புவதாக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், இப்போரின் தொடக்கத்தில் தெரிவித்திருந்ததாக கடந்த ஆண்டு நவம்பரில், ‘நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழில் வெளியாகி இருந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், அமைதிக்கான இதுபோன்ற முயற்சிகள் ஒருபோதும் முன்னெடுக்கப்படவில்லை என்றாலும், ரஷ்யா, யுக்ரேன் இரு நாடுகளையும் ஒரே மேஜையில் அமர வைத்து அமைதிப் பேச்சுவார்த்தையை நடத்துவதற்கான வல்லமை படைத்த நாடாக இந்தியாவை மேலை நாடுகள் பார்ப்பதையே பிரான்ஸ் அதிபரின் விருப்பம், நியூயார்க் டைம்ஸில் வெளிவந்த கட்டுரை போன்றவை தெளிவுபடுத்துகின்றன.
ரஷ்யா, மேற்கத்திய நாடுகளுடான இந்தியாவின் நிலை

ஆனால், ரஷ்யா மற்றும் மேலை நாடுகள் உடனான நட்புறவில் சம நிலையை பேண இந்தியா நீண்டகாலமாக முயற்சித்து வருகிறது.

கடந்த 1950 மற்றும் 60களில் அணிசேரா இயக்க நாடுகளுக்கு இந்தியா தலைமை தாங்கியது. ஆனால் காலங்கள் மாற, உலகின் உயர்நிலை பொருளாதாரத்தில் இந்தியா இணைந்தது. அத்துடன் அமெரிக்காவுடன் நெருங்கிய உறவை ஏற்படுத்திக் கொண்டது.

ஆனால், அதன் பின்பும் ரஷ்யா இந்தியாவின் நம்பகமான கூட்டாளியாக இருந்து வருகிறது. இந்தியாவுக்கான எரிசக்தி மற்றும் ஆயுதங்கள் விநியோகத்தில் ரஷ்யா முக்கியப் பங்கு வகித்து வருகிறது.

யுக்ரேன் போரின்போது, மேற்கத்திய நாடுகளின் அழுத்தம் இருந்த போதும், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கி வந்தது.

இந்த நிலையில், “இன்று போருக்கான நேரம் அல்ல” என்று கடந்த ஆண்டு செப்டம்பரில் உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற பிராந்திய உச்சிமாநாட்டில், ரஷ்ய அதிபர் புதினிடம், இந்திய பிரதமர் மோதி கூறியிருந்தார்.

அணிசேரா கொள்கையின் பின்னணியில், ரஷ்யா- யுக்ரேன் போர் விவகாரத்தில், உலக நாடுகளை ஒன்றிணைக்க இந்திய பிரதமர் மோதி முயற்சித்து வருகிறார் என்று நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் கடந்த ஆண்டு இறுதியில் வெளியிட்ட கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அமைதிப் பேச்சுவார்த்தையில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கும் போது, சர்வதேச நாடுகளின் மத்தியில் அதன் பார்வையை மாற்றும். அத்துடன் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடத்தை பிடிக்கும் வாய்ப்பும் இந்தியாவுக்கு கிடைக்கும் என்றும் அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஒரு வேளை அதுபோல் நடந்திருந்தால், உலக வல்லரசுகள் வரிசையில் இந்தியாவும் இடம் பெறும் நிலை உருவாகியிருக்கக் கூடும் என்று புவிசார் அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். .

அமைதிப் பேச்சுவார்த்தையில் இந்தியா முக்கியப் பங்கு வகித்தால், சர்வதேச நாடுகளின் மத்தியில் அதன் பார்வையை மாற்றும்.

ரஷ்யா மற்றும் யுக்ரேன் நாடுகளுடன் நல்லுறவை பேணி வரும் நிலையில், போர் நிறுத்தத்திற்கான அமைதிப் பேச்சுவார்த்தையை இந்தியா முன்னெடுத்தால், அது உலக வல்லரசு நாடுகளின் மத்தியில் அதன் செல்வாக்கை மேலும் உயர்த்த தான் செய்யும். இப்படிப்பட்ட நிலையில், இந்த விவகாரத்தில் செளதி அரேபியா இன்று முன்னெடுத்துள்ள அமைதி முயற்சியை இந்தியா ஏன் மேற்கொள்ளவில்லை என்பதுதான் கேள்வி.

“புவிசார் அரசியல் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்த இது சரியான தருணம் அல்ல. மேற்கத்திய நாடுகள் மற்றும் யுக்ரேன், தங்களது பதிலடி தாக்குதல் மூலம், போரில் இதுவரை ரஷ்யா கைப்பற்றியுள்ள பகுதிகளை திரும்பப் பெற முடியும் என்று கருதுகின்றன.

இத்தகைய சூழலில் அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுத்தால், ஆக்கிரமிப்பு பகுதிகளில் இருந்து வெளியேறும்படி ரஷ்யாவை வற்புறுத்த முடியாது. அதேநேரம் ஆக்கிரமிப்பு விஷயத்தில் தற்போதைய நிலையை தொடர யுக்ரேன் தயாராக இருக்காது என்பதை இந்தியா அறிந்திருக்கிறது” என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உள்ள மத்திய ஆசிய மற்றும் ரஷ்ய ஆய்வு மையத்தின் இணைப் பேராசிரியர் ராஜன் குமார் கூறியுள்ளார்.

அத்துடன் இந்தியா தீர்க்க வேண்டிய சொந்தப் பிரச்னைகள் நிறைய உள்ளன என்றும், அவற்றை முதலில் தீர்க்க விரும்புவதாகவும் ராஜன் குமார் கூறுகிறார்.

“ஜி20 நாடுகளின் மாநாட்டை நடத்த நிறைய முயற்சிகளை இந்தியா மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதேபோன்று, சீனா, பாகிஸ்தான் உடனான பதற்றமான சூழலை தணிக்க வேண்டிய அவசியமும் இந்தியாவுக்கு இருக்கிறது. இந்த நிலையில், ரஷ்யா- யுக்ரேன் இடையேயான அமைதி பேச்சுவார்த்தையை முன்னெடுப்பது சரியாக இருக்காது” என்றும் அவர் தெரிவிக்கிறார்.

“சீனா, பாகிஸ்தான் உடன் இருந்து வரும் நீண்ட கால பிரச்னைகளுக்கு இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவே இந்தியா எப்போதும் விரும்புகிறது. இந்த விவகாரத்தில் மூன்றாவது நாட்டின் தலையீட்டை இந்தியா ஒருபோதும் விரும்பவில்லை.

இத்தகைய நிலைப்பாட்டில் இந்தியா இருக்கும்போது, ரஷ்யா- யுக்ரேன் இடையே அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுத்தால், அதற்கேற்ப தமது வெளியுறவுக் கொள்கையை மாற்றுவதா என்பதில் இந்தியாவுக்கு குழப்பம் உள்ளது” என்று கூறுகிறார் இணைப் பேராசிரியர் ராஜன் குமார்.

யுக்ரேன் மீது போர் தொடுத்ததற்காக சர்வதேச நாடுகள் ரஷ்யாவை கடுமையாக கண்டித்து வருகின்றன.

யுக்ரேன் மீது போர் தொடுத்ததற்காக சர்வதேச நாடுகள் ரஷ்யாவை கடுமையாக கண்டித்து வருகின்றன. ஆனால், இந்த கண்டனத்தையெல்லாம் பொருட்படுத்தாமல் ரஷ்யா உடன் பொருளாதார மற்றும் ராஜாங்க ரீதியிலான நெருங்கிய நட்புறவை சீனா கொண்டுள்ளது.

ரஷ்யா- யுக்ரேன் போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக செளதியின் ஜெட்டா நகரில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இத்தகைய பேச்சுவார்த்தையில் சீனா பங்கேற்பது இதுவே முதல் முறை. ரஷ்யா இப்பேச்சுவார்த்தையில் பங்கேற்காத நிலையில். இதில் சீனாவை கலந்துகொள்ள செய்துள்ளது செளதியின் ராஜதந்திர நடவடிக்கைக்கு கிடைத்துள்ள வெற்றியாகவே பார்க்கப்படுகிறது என்கின்றனர் மேற்கத்திய நாடுகளை சேர்ந்த அரசியல் நோக்கர்கள்.

“செளதி அரேபியா அமெரிக்காவை சார்ந்திருக்க விரும்பவில்லை. மாறாக பல்வேறு நாடுகளுடன் நட்புறவை பேண விரும்புகிறது. தமது இந்த விருப்பத்தின் வெளிப்பாடாக செளதி முன்னெடுத்துள்ள அமைதிப் பேச்சுவார்த்தையின் மூலம், சீனா மற்றும் ரஷ்யாவுடன் நட்புறவை மேம்படுத்திக் கொண்டுள்ளது” என்கிறார் ஒத்துழைப்பு மற்றும் அமைதி கட்டமைப்புக்கான ஆராய்ச்சி மையத்தின் தலைவரும். ஆய்வாளருமான டானியா கோலிலத் காதிப்.

செளதி அரேபியா அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுப்பது ஏன் என்பது குறித்து வாய்ஸ் ஆஃப் அமெரிக்காவிடம் பேசியபோது அவர் இவ்வாறு கூறினார்.

அமெரிக்க அதிபர் ஜே பைடனின் தொடர் கோரிக்கைகளை கருத்தில் கொள்ளாமல், கச்சா எண்ணெய் உற்பத்தியை செளதி தற்போது கணிசமாக குறைத்துள்ளது.

ஆனால், இந்த விஷயத்தில் இணைப் பேராசிரியரான ராஜன் குமாரின் பார்வை வேறுவிதமாக உள்ளது.

“அமைதிப் பேச்சுவார்த்தை எனும் செளதி அரேபியாவின் முயற்சியை பெரிய அளவில் அர்த்தப்படுத்தி கொள்வதற்கு எதுவும் இல்லை. சர்வதேச அளவில் தனது நம்பகத்தன்மையை அதிகரித்துக் கொள்ளவும், உலக நாடுகளின் வரிசையில் முக்கியமான இடத்தை பிடிக்கவும் தான் செளதி இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளது” என்கிறார் அவர்.

“அமெரிக்க அதிபர் ஜே பைடனின் தொடர் கோரிக்கைகளை கருத்தில் கொள்ளாமல், கச்சா எண்ணெய் உற்பத்தியை செளதி தற்போது கணிசமாக குறைத்துள்ளது. இதன் விளைவாக, அமெரிக்காவுக்கும், செளதி அரேபியாவுக்கும் இடையே சமீபகாலமாக சுமூகமான உறவு இல்லை. இத்தகைய சூழலில் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளை சமாதானம் செய்யும் முயற்சியாக, அந்நாடுகளால் நடத்தி காட்ட முடியாத, இந்தக் கூட்டத்தை சௌதி அரேபியா நடத்தி காட்டியுள்ளது. யுக்ரேன் போர் குறித்து விவாதிக்கப்பட்ட இந்தக் கூட்டத்தில் சீனாவை பங்கேற்க செய்தது செளதி அரேபியாவின் மிகப்பெரிய சாதனை” என்கிறார் ராஜன் குமார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.