மயக்க மருந்து கொடுத்து பெண்களை பலாத்காரம் செய்த அமெரிக்க டாக்டர்!!
அமெரிக்காவில் உள்ள டாக்டர் ஒருவரின் மீது கடுமையான பாலியல் குற்றச்சாட்டுகளை காவல்துறை பதிவு செய்துள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள நியூயார்க் ப்ரெஸ்பிடேரியன் குயின்ஸ் மருத்துவமனையில் குடல் மற்றும் இரைப்பை சிகிச்சை நிபுணராக பணி புரிந்தவர் 33 வயதான ஜி ஆலன் செங் (Zhi Alan Cheng). இவரது இல்லம் அஸ்டோரியா பகுதியில் உள்ளது. கடந்த டிசம்பர் மாதம், தனது காதலியை தனது வீட்டிற்கு அழைத்து சென்றிருக்கிறார் டாக்டர் செங்.
அங்கு அவரை மயக்கமடைய செய்திருக்கிறார். மயக்கம் தெளிந்து அப்பெண்ணுக்கு நினைவு திரும்பியது. ஆனால் தனக்கு என்ன நடந்தது என அவருக்கு நினைவில்லை. அங்கு அவருக்கு ஒரு வீடியோ கிடைத்தது. அதில் டாக்டர் செங் அவரை பாலியல் பலாத்காரம் செய்யும் காட்சிகள் இருந்தன. இவை மட்டுமின்றி டாக்டர் செங் மேலும் சில பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதும் அதில் பதிவாகியிருந்தது. இது குறித்து அப்பெண் காவல்துறையிடம் புகார் அளித்தார். இதனையடுத்து டாக்டர் செங்கை அந்த மருத்துவமனை பணிநீக்கம் செய்தது. இந்த விசாரணையின் போது டாக்டர் செங்கின் அலைபேசி, லேப்டாப் உள்ளிட்ட உடைமைகள் பரிசோதனை செய்யப்பட்டது.
அதில் டாக்டர் செங், தான் வேலை செய்து வந்த மருத்துவமனையிலும், வீட்டிலும் பல பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவது பதிவாகியிருந்தது. இதனையடுத்து அவரது வீட்டை சோதனை செய்த புலனாய்வு அதிகாரிகளுக்கு ஃபென்டனில், கீடமைன், எல்எஸ்டி மற்றும் அறுவை சிகிச்சைக்கான மயக்க மருந்துகள் உட்பட பல போதை மருந்துகளும் சிக்கின. தற்போது அவர் மீது சுமார் 50 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றில், கற்பழிப்பு, பாலியல் துன்புறுத்தல், தாக்குதல், போதை பொருள் வைத்திருத்தல் மற்றும் சட்டவிரோதமாக பிறரை கண்காணிப்பது உட்பட பல பிரிவுகள் அடங்கும். விசாரணையில் டாக்டர் செங் பெண்களை திரவ மயக்க மருந்துகளின் மூலம் மயக்கமடைய செய்து அவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார் என தெரிய வந்துள்ளது.
வீடியோவில் உள்ள பதிவுகளின்படி சில பாதிக்கப்பட்டவர்களை காவல்துறை தேடி வருகிறது. மருத்துவமனையில் டாக்டர் செங் துன்புறுத்திய ஒரு பெண் உட்பட அவரால் பாதிக்கப்பட்ட பல பெண்களை காவல்துறை கண்டறிய முயற்சிப்பதாகவும், தாய்லாந்து, நியூயார்க், லாஸ் வேகாஸ், ஸான் பிரான்ஸிஸ்கோ ஆகிய இடங்களில் உள்ள ஓட்டல் அறைகளிலும், வீடுகளிலும் இவரால் பாதிக்கப்பட்ட 5 பேரை காவல்துறை தேடி வருவதாகவும் தெரிகிறது. ஆனால் இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் டாக்டர் செங் மறுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.